திருக்குறளை அறநூல், அன்புநூல், அருள்நூல், அறிவுநூல், அகநூல் என்று பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலரும் ஆய்ந்து வந்தள்ளனர். திருக்குறளைச் ''சட்டநூல்'' என்ற நோக்கில் அணுகினாலும் அதில் தமிழரின் சட்டநெறிகள் புலப்படக் காணலாம். அவ்வகையில், 1860-ஆம் ஆண்டில் இயற்றப்பெற்று இன்றளவும் இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டுவரும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தில் (The Indian Penal Code) கூறுகள், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழர்களுக்குச் சட்ட நூலாக விளங்கிய திருக்குறளில் பொதிந்திருக்கின்றன என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
திருக்குறள் - சட்டநூல்
சங்க இலக்கியங்களில் ''அறம்'' என்ற சொல் அறநெறிகளைக் குறிப்பதற்குப் பயன்பட்டது; அத்துடன் இன்று ''சட்டம்'' என்ற சொல் உணர்த்தும் கருத்தமைவு களையும் குறிப்பதற்குப் பயன்பட்டு வந்தது. புறநானூற்றில் குற்றங்களைத் தொகுத்துக் கூறும் தமிழரின் அறநூல் ஒன்றைக் குறிக்கும் பாடலில்,
அறம் பாடிற்றே ஆயிழை கணவ
என வரும் அடியில் காணப்படும் ''அறம்'' என்ற சொல் திருக்குறளைத்தான் குறித்தது என்று கருதுவர். எனவே வள்ளுவர் ''அறம்'' என்று குறிப்பதைச் சட்டநெறிகளாகவும், ''தீது'' என்று குறிப்பிடுவதைக் குற்றங்களாகவும் கொள்ளலாம்.
இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டம் - ஓர் அறிமுகம்
இந்தியா, ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இருந்து 1858-இல் ஆங்கிலப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வந்தபின்பு, இந்தியாவிற்கென்று பொதுவான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அச் சட்டங்களை உருவாக்குவதில் பெரும்பணியாற்றியவர் மெக்காலே பிரபு ஆவார். அவர் வகுத்தளித்த சட்டங்களில் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டம் (இக்கட்டுரையில் இது இ.த.தொ.சட்டம் என்று குறிப்பிடப்பெறும்) குறிப்பிடத்தக்கதாகும். இச்சட்டம் இருபத்தி மூன்று அத்தியாயங்களையும் (Chapters) 511 பிரிவுகளையும் (Sections) கொண்டுள்ளது. இச்சட்டத்தில் குற்றங்களின் வரையறைகள் விளக்கப்பட்டுள்ளன. அக்குற்றங்களுக்கான தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 1860-இல் இயற்றப்பட்ட குற்றமிழைக்கும் இந்தியர்களைத் தண்டிப்பதற்கான சட்டமாகப் பயன்பட்டு வருகின்றது.
பொருந்துறுகை
ஆங்கில அரசினால் இயற்றப்படும் சட்டம் ஒவ்வொன்றும் அது யார் யாருக்குப் பொருந்தும் என்பதைத் தெளிவாகச் சுட்டிவிடும். இ.த.தொ. சட்டமும், அச்சட்டம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் இந்தியாவில் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவது தொடர்பாகப் பொருந்தும் என்பதை,
Every person shall be liable to punishment
under this code
என்று குறிப்பிடுகின்றது. எனவே இந்தியர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத் தொகுப்பின் கீழ்வரும் குற்றங்களைப் புரியுமிடத்து ஒத்த தண்டனைகளைப் பெறுவர் என்பது தெளிவாகின்றது. சட்ட நூலாக இருந்து தண்டனைக்குரியவர்களைக் குறிப்பிடும்போது, வள்ளுவர் இந்தியாவைக் கடந்து உலக மக்கள் அனைவரும் ஒரே தண்டனையை உறுதி செய்கிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
- - - (குறள் 972)
என்னும் குறள், ''சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' என்பதை உணர்த்துகின்றது. வடமொழியிலுள்ள மனுசாஸ்திரத்தைப் போல ''ஒரு குலத்துக்கு ஒரு நீதி'' என்னும் அறிவுக்குப் பொருந்தாத சட்டத்தை வள்ளுவர் வகுக்கவில்லை. இன்றைய சட்டவியலார் போற்றும் இயற்கை நீதி (Natural Justice) என்னும் உயர்ந்த நீதியை வள்ளுவர் வகுத்துள்ளார் என்று பெறப்படுகின்றது.
சட்டங்களின் வகைகள்
இன்றைய சட்டவியலார் சட்டங்களை இருபெரும் பிரிவுகளாகப் பகுப்பர். அவை முறையே,
1. நிலைமுறைச் சட்டங்கள் (Substative Laws)
2. நெறிமுறைச் சட்டங்கள் (Procedural Laws) எனப்படுவன.
நிலைமுறைச் சட்டங்கள் குற்றங்களை வரையறுத்து அவற்றிற்கான தண்டனைகளை எடுத்துக் கூறுவன. இதற்கு இ.த.தொ. சட்டத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம். நெறிமுறைச் சட்டங்கள் எனப்படுபவை, குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கிட நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் நடைமுறை நெறிகளைத் தொகுத்துரைப்பவை. இதற்குக் குற்றவியல் நெறிமுறைத் தொகுப்புச் சட்டத்தையும் எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.
திருக்குறள் நிலைமுறைச் சட்டமாக நின்று குற்றங்களை வரையறுக்கின்றது; நெறிமுறைச் சட்டமாகவும் அமைந்து அக்குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான நீதிமன்ற நெறிமுறைகளையும் வழங்குகின்றது. எனவே இ.த.தொ. சட்டம் நிலைமுறைச் சட்டமாக மட்டுமே இருக்கத் திருக்குறள் நிலைமுறைச் சட்டமாகவும் அமைந்து அக்குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான நீதிமன்ற நெறிமுறைகளையும் வழங்குகின்றது.
எனவே இ.த.தொ. சட்டம் நிலைமுறைச் சட்டமாக மட்டுமே இருக்கத் திருக்குறள் நிலைமுறைச் சட்டமாகவும் நெறிமுறைச் சட்டமாகவும் விளங்குகின்றது.
குற்றங்களின் வகைகள்
தண்டனைக்குரிய குற்றங்களின் தன்மைக்கேற்ப குற்றங்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
1. உரிமையியல் சார் குற்றங்கள் (Civil offence)
2. குற்றவியல் சார் குற்றங்கள் (Criminal offence) என்பன.
தனிமனிதனின் உரிமைக்கும் உடைமைக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் உரிமையியல் சார் குற்றங்கள் எனப்படுவன; ஒருவரின் உடலுக்கும் உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் ''குற்றவியல் சார் குற்றங்கள்'' என அழைக்கப்படுகின்றன. இ.த.தொ. சட்டத்தில் குற்றவியல் சார் குற்றங்கள் (Criminal offence) மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. திருக்குறளில் குற்றவியல் சார் குற்றங்களுடன் உரிமையியல் சார் குற்றங்களும் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்விரு குற்றங்களின் பகுப்புமுறை பண்டைய நாளில் உலக வழக்கில் இல்லை என்றும், சட்டங்களின் முன்னோடிகளாக உரோமானியர்களின் சட்டநெறிகளிலும் இவ்விருவகைக் குற்றங்களும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருப்பதும் ஈண்டு கருத்தில் கொள்ளத்தக்கவை ஆகும்.
குற்றங்களின் வரையறைகள்
இ.த.தொ. சட்டமும் திருக்குறளும் குற்றங்களை வரையறை செய்வதில் ஒத்திருக்கும் தன்மையுடையன. குற்றங்கள் பலவற்றுள்ளும் ''திருடுதல்'' என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் குற்றமாகும். இக்குற்றச் செயலை இ.த.தொ. சட்டம் வரையறுப்பது பின்வருமாறு அமைகின்றது.
Theft - intending to dishonesty any
movable property out of possession of any
person without that person's consent,
moves that property in order to such
taking, is said to commit theft
இந்த வரையரையில் மூன்று தொடர்கள் இன்றியமையாதவை, அவை
1. Dishonest
2. The property
3. Without that person's consent என்பவை.
இந்த வரையறையைத் திருவள்ளுவர், ''உள்ளத்தால் உள்ளலும் தீதே: பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்'' என்னும் குறளில் அமைத்துள்ளார். இந்தக் குறளிலுள்ள ''கள்ளம்'' என்பது Dis-honest என்பதற்கும், ''பிறன்பொருள்'' என்பது ''the property'' என்பதற்கும், ''கள்வேம்'' என்பது ''without that person's consent'' என்பதற்கும் பொருந்தி வருவதைக் காணலாம்.
பிறனில் விழையாமையும் வரைவின் மகளிரும்
இ.த.தொ. சட்டத்தின் பிரிவு 497இல் ''Adultry'' என்னும் தலைப்பில் வரையறை செய்யப்பட்டுள்ள குற்றத்தின் தன்மையை வள்ளுவர், ''பிறனில் விழையாமை'' என்னும் அதிகாரத்திலும் இ.த.தொ. சட்டத்தில் ''Prostitution'' என்ற தலைப்பில் வரையறுத்துள்ள குற்றத்தை வள்ளுவர் ''வரைவின் மகளிர்'' என்னும் அதிகாரத்திலும் வரையறுத்துள்ளது சட்டநுணுக்கம் நிறைந்ததாக அமைந்துள்ளது.
புறங்கூறாமையும் பயனில சொல்லாமையும்
இ.த.தொ. சட்டத்தின் பிரிவு 499-இல் வரையறுக்கப்பட்டுள்ள ''Deformation'' என்னும் குற்றச்செயல், திருக்குறளில் ''புறங்கூறாமை, பயனில சொல்லாமை'' என்னும் அதிகாரங்களில் வரையறுக்கப்பட்டுள்ளன.
அடுத்த நிலையில் தண்டனைகள் குறித்துக் காண்போம்.
தண்டனைகள்
குற்றம் இழைத்தவர்கள் தண்டனை பெறுதல் வேண்டும்; அத்தகு தண்டனைகள் குற்றங்களின் தன்மைக்கேற்ப அமைதல் வேண்டும். இக்கருத்தின் பொருட்டே இ.த.தொ. சட்டமும் குற்றங்களை வகைப்படுத்தி வேறுபடுத்தியுள்ளது. அதற்கேற்ற வரிகளில் தண்டனைகளையும் முறைப்படுத்தி இருக்கின்றது. இக்கருத்தை,
தக்காங்கு நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒலுப்பது வேந்து
- - - (குறள் 561)
என்னும் குறள் விளக்கக் காண்கிறோம்.
தண்டனையின் வகைகள்
இ.த.தொ. சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள தண்டனைகள் ஐந்து வகைப்படுவன. அவை,
1. மரண தண்டனை
2. ஆயுள் தண்டனை
3. சிறைத் தண்டனை (இது கடுங்காவல் வெறுங்காவல் என இருவகைப்படும்)
4. சொத்துப் பறிமுதல்
5. அபராதம் அல்லது பணத்தண்டம் என்பன.
திருக்குறள் தண்டனைகளை வகைப்படுத்தியுள்ளதை உரையாசிரியர் தமது உரையில் சுட்டிக் காட்டுகிறார்.
குடிபுறம் காத்தோம்பி குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்
- - - (குறள் 549)
என்னும் குறளுக்கு உரை வகுக்கும்போது, பரிமேலழகர் தண்டனைகள் துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என மூவகைப்படும் என்கிறார்.
''துன்பம் செய்தல்'' (Penal Punishment) என்பதை ஆயுள் தண்டனை மற்றும் சிறைத்தண்டனையுடன் ஒப்பிடலாம்.
''பொருள் கோடல்'' என்பதைச் சொத்துப் பறிமுதல், அபராதம் அல்லது பணத்தண்டம் என்பதுடன் ஒப்பிடலாம்.
''கோறல்'' என்பதை மரண தண்டனை (Death Sentence) என்பதுடன் ஒப்பிடலாம். இவ்வகையில் இ.த.தொ. சட்டத்தில் விளக்கிக் கூறப்பட்ட ஒருவகையான தண்டனைகளும் ஒறுத்தல் என்னும் வள்ளுவர் வாய்மொழியின்கண் விளக்கம் பெறக் காண்கிறோம்.
ஆதலின், இக்கட்டுரையில், ஆங்கிலேயரின் அறிவாற்றலும் சட்டப்புலமையும் வெளிப்படும் வண்ணம் அமைந்திருக்கும் இ.த.தொ. சட்டத்தில் காணப்படும் சட்டத்தின் பொருந்துறுகை, குற்றங்களின் வகைகள், தண்டனையின் வகைகள் முதலியவை தமிழரின் சட்ட நூலான திருக்குறளில் வெளிப்படுகின்றன என்பது விளக்கப்பட்டது.
Comments
Post a Comment