தமிழ்நாடு பயிரிடும் வாடகைதாரர் பாதுகாப்பு சட்டம் 1955- Tamilnadu Cultivating Tenants Protection Act 1955

தமிழ்நாட்டில் உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கும்(Land Lords), வாடகைதாரர்களுக்கும் (Tenants) இடையே நிலவும் உறவுமுறையை பலப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் இயற்றப்பட்டதே இந்த சட்டம்.

விவசாயம் செய்யும் வாடகைதாரர் என்ற சொல் யார் பெயரில் வாடகை ஒப்பந்தம் (Agreement) செய்யப்பட்டுள்ளதோ அவரையும், அவரது வாரிசுகளையும் குறிக்கும். நேரிடையாக விவசாயம் செய்பவரையும் மற்றும் தன் மேற்பார்வையில் பிறரை வைத்து விவசாயம் செய்பவரையும் குறிக்கும் வாடகைக்கு விவசாயம் செய்பவர், வாடகைதாரர் என்ற உரிமையிலும், பாதுகாப்பிலும் இருந்து கூடுதல் பாதுகாப்பு பெறுகிறார். (பிரிவு 2(a))
வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின்பு நிலம் யார் உடமையில் இருக்கிறதோ அவர் தான் நிலத்தின் வாடகைதாரர். அதாவது விவசாயம் செய்யும் வாடகைதாரர் ஒருவர் நிலத்தை ஒப்பந்தம் செய்து அதனை தன் உறவினருக்கோ அல்லது தன் வாரிசுகளுக்கோ உள் வாடகைக்கு விட்டிருந்தால் அந்த உள் வாடகைக்கு பெற்ற நபர்தான் வாடகைதாரராக கருதப்படுவார். அவரே சட்டப்படியான பாதுகாப்பை பெற முடியும். மற்றபடி ஒப்பந்தம் தன் பெயரில் இருப்பதால் நிலத்தில் விவசாயம் செய்யாத நபர் எந்தவிதமான பாதுகாப்பையும் பெற முடியாது. நிலத்தில் வாடகைதாரரின் உழைப்பு (Physical Labour) கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி உழைப்பு இருக்கிறது என்பதை அவர்தான் நிரூபிக்க வேண்டும். எந்த நிலையிலும் நிலத்தை பயிர் செய்து வருபவர் நிலத்தை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தால் அவருக்கு சட்டப்படியான பாதுகாப்பு உண்டு. அந்த சட்ட பாதுகாப்பை ஒருவர் பெற வேண்டும் என்றால் நிலத்தில் தன் உடல் உழைப்பை செலுத்த வேண்டும். நிலத்தில் உழைக்காதவர் இந்த சட்டப்படி எந்த பாதுகாப்பையும் பெற முடியாது.
ஒருவர் ஒரு நிலத்தை நிலச் சொந்தக்காரரிடம் இருந்து குத்தகைக்கு பெற்று அதில் ஒரு பகுதியை வேறு ஒருவருக்கு உள்குத்தகைக்கு (Sub lease) விட்டால் உள்குத்தகைக்கு பெற்றவர், உண்மையான நிலச் சொந்தக்காரருக்கு எதிராக எந்த விதமான பாதுகாப்பையும் பெற முடியாது. அவர் நிலத்தை (முதலில்) குத்தகைக்கு பெற்றவர் (Leasee) யிடம் இருந்து தான் உரிமைகளை பெற முடியும். காரணம் உள் வாடகைக்கு பெற்றவருக்கும், நிலச் சொந்தக்காரருக்கும் எந்தவிதமான ஒப்பந்தமும் இல்லை. எனவே அவர் எந்த விதத்திலும் இவருக்கு பொறுப்பாகமாட்டார்.
பிரிவு 2(b)ன் படி பயிர் செய்தல் என்பது நிலத்தை விவசாயம் செய்யவோ அல்லது தோட்டம் (Horticulture) அமைக்கவோ பயன்படுத்துவது ஆகும். மற்ற விவசாய துணை தொழில் எதை செய்தாலும் அது விவசாயமாக கருதப்பட மாட்டாது. நேரிடையாக நிலத்தில் இருந்து விளைச்சல் பெறக்கூடிய செயல் எதுவும் விவசாயம் எனப்படும்.
பிரிவு 2(e)ன்படி எவர் ஒருவர் நிலத்தை விவசாயம் செய்து வருபவரை வெளியேற்ற உரிமை உள்ளவரோ ( Right to Evict) அவர்தான், நிலத்தின் சொந்தக்காரர் எனப்படுவார். நிலம் யார் பெயரில் இருந்தாலும், யாருக்கு முழு உடமை அதிகாரம் உள்ளதோ அவர்தான் நிலச் சொந்தக்காரர் ஆவார்.
பிரிவு 3 ன்படி நிலச் சொந்தக்காரர்களால் எந்த விதத்திலும் நிலத்தில் விவசாயம் செய்யும் நபர் வெளியேற்றப்படக் கூடாது. நிலத்தின் சொந்தக்காரர் நீதிமன்ற உத்தரவு பெற்றிருந்தாலும் (Decree), நிறைவேற்று ஆணை (Execution) பெற்றிருந்தாலும் எந்த நிலையிலும் நிலத்தில் வாடகைக்கு விவசாயம் செய்யும் ஒருவரை வெளியேற்ற முடியாது. அவர் விவசாயம் செய்து வருவதை தடை செய்யவும் முடியாது. இந்த பாதுகாப்பு எவ்வளவு நாட்கள் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோ அந்த நாட்கள் வரை பொருந்தும்.
பிரிவு 3 ன்படி விவசாயம் செய்து வரும் வாடகைதாரராக உள்ளவரை வெளியேற்ற முடியாது என்றாலும் கீழே கண்ட காரணங்களுக்காக நிலத்தின் சொந்தக்காரர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் மனுத்தாக்கல் செய்து வாடகைதாரரை காலி செய்யும்படி கேட்கலாம்.
1. நிலத்தை சேதப்படுத்தும் வகையில் கவனமின்மையாகவோ அல்லது வேண்டுமென்றோ, எந்த விதமான செயல்களை செய்தாலும் அல்லது நிலத்திற்கு சேதம் விளைவிக்ககூடிய தாவரங்களை அல்லது பயிர்களை வளர்த்தல் போன்ற செயல்களை செய்தாலும், நிலத்தில் விவசாயம் செய்யும் ஒருவரை அவர் குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை ஒப்பந்தம் செய்திருந்தாலும் அதற்கு முன்பே அவரை நிலத்தில் இருந்து வெளியேற்ற தகுந்த நடவடிக்கை வேண்டியும், உத்தரவு வேண்டியும் வருவாய் கோட்டாட்சியர் முன் நிலத்தின் சொந்தக்காரர் மனு செய்து கொள்ளலாம்.
2. நிலத்தை குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து விட்டு விவசாயம் செய்பவர் வேளாண்மை மற்றும் தோட்டச் செடிகள் அல்லாத பயிர்களை வளர்த்தால் அந்த அடிப்படையில், ஒப்பந்தம் செய்து கொண்ட காலத்திற்கு முன்னதாக அவரை வெளியேற்ற வேண்டும் என்று மனு செய்து கொள்ளலாம்.
3. நிலத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர் வேண்டுமென்றே நிலத்தின் உரிமை நிலச் சொந்தக்காரருக்கு இல்லை என மறுக்கும்போது அவர் எத்தனைகாலம் குத்தகை பெற்றிருந்தாலும், என்ன சட்டப்படியான பயிர்களை பயிர் செய்திருந்தாலும் பிரிவு 3 ன்படி பாதுகாப்பை பெற முடியாது.
4. குத்தகைக்கு பெற்றவர் வாடகை தரவில்லை என்ற காரணத்திற்காகவும் வெளியேற்ற மனு செய்யலாம். ஆனால் கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் முழு வாடகையையும் நீதிமன்றத்தில் செலுத்தி விட்டால் அவரை வெளியேற்ற முடியாது.
5. வாடகைக்கு நிலத்தை பெற்றவர் நிலத்தின் ஒரு பகுதியை உள் வாடகைக்கு கொடுத்திருந்தால் உள் வாடகைக்கு விட்ட நிலத்தை இவர் பயிர் செய்ய முடியாது. எவர் ஒருவரின் உழைப்பு நிலத்தில் இல்லையோ அவர் அந்த நிலத்தை விவசாயம் செய்பவர் என்றும், விவசாயத்திற்காக வாடகைக்கு பெற்றவர் என்றும் கூற முடியாது. இந்த நிலையில் உள் வாடகைக்கு கொடுத்த நிலம் தவிர மற்ற நிலங்கள் குறித்து அவருக்கு விவசாயம் செய்யும் வாடகைதாரர் உரிமை இருப்பதாக கூற முடியாது. காரணம் குத்தகை ஒப்பந்தம் என்பது முழு நிலத்தையும் குறித்ததாகத்தான் இருக்கும். எனவே ஒப்பந்தத்தை பகுதியாக பிரிக்க முடியாது. பாதி நிலத்தில் விவசாயம் செய்து வரும் அடிப்படையில் அவர் பிரிவு 3 ன் கீழ் பாதுகாப்பை கோர முடியாது அதனடிப்படையில் அவரை நிலத்தை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
பிரிவு 4 ன்படி இந்த சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் எந்த ஒரு வாடகைதாரரும், நிலச் சொந்தக்காரர்களால் வெளியேற்றப்பட்டிருந்தால் அப்படி, அவர் வெளியேற்றப்பட்ட 2 மாத காலங்களுக்குள்ளாக கோட்டாட்சியர் முன்பு மனு செய்து அவரை பழைய நிலைமையில் திரும்ப விவசாயம் செய்யும்படி அதே நிலத்தில் உடமையில் வைக்க வேண்டும் எனக் கோரி மனு செய்து கொள்ளலாம்.
ஒருவர் தன்னை மறுபடியும் உண்மையில் வைக்க வேண்டும் என்று கோர அடிப்படையாக, அவருக்கும், நிலச் சொந்தக்காரர்களுக்கும் வாடகைதாரர் - ஓனர் என்ற உறவுமுறை இருக்க வேண்டும். அப்படி உறவு இல்லை என்றால் இந்த உரிமையை ஒருவர் கோர முடியாது.
இரண்டாவதாக நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு, அந்த நிலத்தை வாடகைதாரர் என்ற முறையில் அனுபவம் செய்து கொண்டிருந்த நபரை, நிலத்தின் சொந்தக்காரர் பலவந்தமாகவோ அல்லது அவர் விருப்பம் இல்லாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான வழியிலோ அவரை வெளியேற்றிருக்க வேண்டும். அல்லாமல் வேறு காரணங்களுக்காக வெளியேற்றி விட்டு தன்னை அதே நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்யும்படி வைக்க வேண்டும் என்று கோர முடியாது.
பிரிவு 6 ன்படி உரிமையியல் நீதிமன்றத்திற்கு பிரிவு 3(3)ன்படி வாடகைதாரர் செலுத்தும் வாடகையை பெற்றுக் கொள்ளும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த அதிகாரமும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு அளிக்கப்படவில்லை. இந்த சட்டத்தின் படி எந்த ஒரு மனுவும் கோட்டாட்சியர் முன்பு தான் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதேபோல் கோட்டாட்சியரின் நடவடிக்கையை உரிமையியல் நீதிமன்றம் தடை செய்ய முடியாது.

Comments