"மனித உரிமை'

"மனித உரிமை' என்ற வார்த்தையை, தனியார் அமைப்புகள் பயன்படுத்த கூடாது என்ற உத்தரவை மீறி செயல்பட்ட, ஆறு தனியார் அமைப்புகள் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
மனித உரிமை ஆணையத்தின் வேண்டுகோளின்படி, சென்னை உயர்நீதிமன்றம், மனித உரிமைகள் (ஏதட்ச்ண கீடிஞ்டtண்) என்ற வார்த்தையை, எந்தவித தனியார் அமைப்புகளும் பயன்படுத்தக் கூடாது என, தடை உத்தரவிட்டுள்ளது. இருந்தும், நாமக்கல் மாவட்டத்தில், ஒருசில தனியார் தன்னார்வ அமைப்புகள், மனித உரிமைகள் கழகம் என்ற அர்த்தத்தில் நடத்தி வருகின்றன.மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரில், பொதுமக்களிடம் தவறான அணுகுமுறையை கையாண்டு வருவதாக, புகாரும் வந்தது. அதன்பேரில், மாவட்ட சட்ட ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.அதையடுத்து. நாமக்கல், புதுச்சத்திரம், மோகனூர், பள்ளிபாளையம், ப.வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய ஆறு போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், செயல்பட்டு வந்த ஆறு அமைப்புகள் மீது, போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.எனினும், "மனித உரிமை' என்ற வாசகத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும், தனியார் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு, ஏதேனும் அமைப்புகள் செயல்பட்டால், பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த 3 மனித உரிமைகள் அமைப்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அனுமதியின்றி மனித உரிமைகள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் நாகேந்திரன் தலைமையிலான மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அமைப்பு, ரவுண்டு ரோடு பகுதியில் பாலமுருகன் குழு சார்பில் செயல்பட்டு வந்த மனித உரிமை கழகம், ஏஎம்சி சாலையில் தென்னிந்திய மனித உரிமை கழகம் என்ற பெயரில் நடத்தி வந்த முருகேசன் குழுவை சேர்ந்தவர்கள் மீது திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் வழக்குப்பதிவு செய்தார்.மேலும் அனுமதியின்றி மனித உரிமைகள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற அமைப்புகளிடம் பொதுமக்கள் சென்று ஏமாறவேண்டாம் என்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மனித உரிமைகள் (ஹியூமன் ரைட்ஸ்) என்ற அடைமொழியுடன் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவு செய்யப்படாமல் போலியாக செயல்படும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ‘‘மனித உரிமைகள்’’ என்ற அடைமொழியுடன் பதிவு செய்யப்படாத போலியாக செயல்படும் அமைப்புகள் உள்ளதா? என்று போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் அம்பையில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு போலியாக செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் பயன்படுத்திய ரப்பர் சீல்கள், கார்டுகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அந்த அமைப்பை நடத்திய அம்பையை சேர்ந்த சுப்பிரமணியன், ஆனந்தி ஆகிய 2 பேர் மீது அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தில் மணிகண்டன் என்பவரும் இது போல போலியாக அமைப்பு நடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிவகிரியில் டேனியல் என்பவர் போலியாக மனித உரிமைகள் என்ற பெயரில் அமைப்பு நடத்தி வந்துள்ளார். அவரிடமும் சீல் முதலியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Comments