இளம் சிறார்களுக்கான சட்டம்
 2000-ல் கொண்டு வரும் முன்பாக அதேபோன்ற சட்டம் ஒன்று 1986ம் ஆண்டு முதல் இருந்து வந்தது. அச்சட்டத்தில் இளம் சிறார் குற்றவாளி (Juvenile delinquent) என்பவன் 16 வயதுக்கு மேற்படாத சிறார் என்று இருந்தது. பின்னால் ஏற்பட்ட சில சர்வதேச மாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையில் 2000ல் புதிய சட்டம் இயற்றப்பட்டது. புதிய சட்டப்படி இளம் சிறார்களை தண்டிக்கும் விசேஷ கோர்ட் நடைமுறைகளை மாற்றி சிறுவர்களின் பாதுகாப்பு பற்றிய முப்பரிமாண சட்டம் உருவானது. இந்த புதிய சட்டத்தில் இளம் சிறார் குற்றவாளிகள் என்ற வரையறையையே மாற்றி "சட்டமுரண்பட்ட இளம் சிறார்கள்" (Juvenile in conflict with law) என்றும், 18 வயதுக்கு மேற்படாதவர்களே இளம் சிறார்கள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
சட்டமுரண்பட்ட இளம் சிறார்களுக்கு தண்டனை வழங்கி மற்ற கைதிகளுடன் சிறையில் வைக்க சட்டம் இடம் தராது. இளம் குற்றவாளிகளுக்கு பயிற்சி அளித்து பெருஞ்சமூகத்துடன் இணைக்கும் சீர்திருத்தும் முயற்சியே தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படை.
நீதிபதி வர்மா கமிஷனும் இதற்கான பரிந்துரை எதையும் செய்யவில்லை. 1989ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் குழந்தைகள் உரிமைக்கான மாநாட்டுத் தீர்மானங்களை 1992ல் நம் நாடு ஏற்றுக் கொண்டுள்ளது. ஐ.நா.வின் 1985ம் வருடத்திய இளம் சிறார்கள் நீதி வழங்கும் விதிகளில் குறைந்தபட்ச நிர்வாக விதிகளையும், ஐ.நா.வின் சுதந்திரம் பறிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய 1990ம் ஆண்டு விதிகளையும் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அவற்றின் அடிப்படையிலேயே புதிய சட்டம் அமலாக்கப்பட்டது. எனவே இளம் சிறார்கள் என்போர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்தியா இந்த சர்வதேச சட்ட விதிகளை நிறைவேற்றும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51வது பிரிவிலும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டமுரண்பட்ட இளம் சிறார்களின் சமூக பின்புலத்தை ஆராய்ந்த கணிப்பொன்று அவர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோர் என்று தெரிவித்துள்ளது.




Comments