ஜீவனாசம் :
உண்ண உணவு... உடுத்த உடை... வசிக்க இடம்... இந்த மூன்று தேவைகளும் இல்லாத மனித வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. வாழ்க்கையின் அடிப்படை ஆதாரங்களான இந்த மூன்றும் எத்தனை மனிதர்களுக்குக் கிடைக்கின்றன? தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மற்றவரை அண்டி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பரிதாபத்துக்குரியவர்கள். தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இயலாமலும், தன்னைப் பராமரிக்க வேண்டியவரும் கைவிட்ட நிலையில் இருக்கும் ஒரு இந்தியக் குடிமகனுக்கு நம் நாட்டுச் சட்டம் என்ன வழி சொல்கிறது? அது கொடுக்கும் பாதுகாப்புதான் என்ன? இந்திய குற்றவியல் சட்டத்தின் (Criminal Procedure Code) பிரிவு 125, 126, 127 மற்றும் 128.
இந்திய நாட்டைப் பொறுத்தவரை சிவில் சட்டங்கள் என்று சொல்லக் கூடிய தனி மனித உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்கள் திருமணச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், ஜீவனாம்சம் போன்றவை ஒருவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டுள்ளன. எனினும் மேற்கூறிய இந்தச் சட்டப்பிரிவு இந்திய மக்கள் அனைவருக்கும் ஜீவனாம்சம் கோர ஒரு பொதுவான சட்டமாகவே உள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ்...
* தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத மனைவி.
* தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாத சட்டம் அங்கீகரிக்கும் மற்றும் சட்டம் அங்கீகரிக்காத மைனர் குழந்தைகள். ஒருவேளை இவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருந்தாலும் இந்தச் சட்டம் பொருந்தும்.
* வயது வந்த சட்டப்பூர்வமான அல்லது சட்டம் அங்கீகரிக்காத ஒருவரின் மகன், மகள் உடலளவிலோ, மனத்தளவிலோ பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில்.
* ஒரு நபரின் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத தாய், தந்தையர்.
மேற்கூறிய இவர்கள் அனைவரும் தன்னுடைய கணவர், தகப்பன் மற்றும் பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கோர இந்தப் பிரிவு வழிவகை செய்கிறது. இந்தச் சட்டப் பிரிவில் மனைவி என்ற சொல் சட்டப்பூர்வமான மனைவியை மட்டுமே குறிக்கும். மேலும், கணவரால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் செய்யாத பட்சத்திலும், எந்தவிதமான நிரந்தர ஜீவனாம்சம் பெறாத பட்சத்திலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள எந்தவிதமான வருமானமும் இல்லாத பட்சத்திலும் இந்தச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் கோர இயலும்.
இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய விரும்பும் நபர் தான் எங்கே வசிக்கிறாரோ, எதிர் தரப்பினருடன் கடைசியாக எங்கே வசித்தாரோ, அந்த இடத்திற்குட்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலோ (Magistrate Court) அல்லது குடும்பநல நீதிமன்றத்திலோ ஜீவனாம்ச வழக்கு தாக்கல் செய்யலாம். மைனர் குழந்தைகளுக்கு தாயே காப்பாளராக இருந்து வழக்கு தாக்கல் செய்ய இயலும், இது சட்டம் ஏற்றுக் கொள்ளாத குழந்தைக்கும் (Illegitimate child) பொருந்தும். மேலும் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது இடைக்கால ஜீவனாம்சம் கோரவும் இந்தச் சட்டத்தில் இடமுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றம் (rise in cost of living) எதிர்தரப்பினராக இருக்கும் கணவரின், தந்தையின், மகனின் வருவாயில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தில் ஏற்படும் மாற்றம், ஜீவனாம்சம் கோரும் மற்றும் ஜீவனாம்சம் பெரும் நபரின் ஊதியம் ஈட்டக்கூடிய நிலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய நிலையில் மாற்றம், விவாகரத்தான மனைவியின் மறுமணம் அல்லது விவாகரத்து ஆகாத மனைவியின் தவறான நடத்தை, மைனரிலிருந்து மேஜராகும் பிள்ளைகள் போன்ற ஒரு சில காரணங்களால் நீதிமன்றம் நியமித்த ஜீவனாம்ச தொகையை உயர்த்தவோ, குறைக்கவோ இந்தச் சட்டத்தின் பிரிவு 127ன் கீழ் வழிவகை உள்ளது.
நீதிமன்றம் கொடுத்த ஜீவனாம்சம் தொகையினை எதிர்தரப்பினர் தராமலும் எந்தவிதமான மேல்முறையீடும் செய்யாமலும் இருக்கும் பட்சத்தில் அந்தத் தொகையை பெற ஒரு மனு தாக்கல் செய்து அந்தத் தொகையினை நீதிமன்றத்தில் செலுத்தவோ அல்லது ஜீவனாம்சம் கொடுக்காத பட்சத்தில் எதிராளியை சிறையெடுக்கவோ முடியும். இந்த வழக்குகளில் எதிர் தரப்பினரிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் ஒரே நோக்கத்தில்தான் அவரை சிறையெடுக்கும் ஒரு முடிவினை நீதிமன்றம் எடுக்கும். எதிர்தரப்பினர் ஜீவனாம்சம் செலுத்திவிடும் பட்சத்தில் சிறையெடுப்பு தவிர்க்கப்படும்.
Savitaben Somabhai Bhatia Vs State of Gujarat and others (2005)
இந்த வழக்கில் ஒரு ஆண் மகன் தன்னை தானே பராமரித்துக்கொள்ள இயலாத நிலையி லிருக்கும் தன்னுடைய மனைவி, மக்கள் மற்றும் பெற்றோரை பராமரிப்பது இயற்கை அவன் மீது விதித்திருக்கும் தர்மப்படியான ஒரு கடமை. இவ்வாறு கடமையாற்றுவது ஒரு சமூக நீதியின் வெளிப்பாடு என்று ஜீவனாம்சத்தைப் பற்றி தீர்ப்பு வழங்கப்பட்டது.
Chaturbhuj Vs Sita Bao (2008)
இந்த வழக்கில் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 125 இயற்றப்பட்டதன் நோக்கம் தன்னால் பராமரிக்கப்பட வேண்டியவர்களை பராமரிக்க தவறும் நபருக்கு அவருடைய தர்மப்படியான கடமையை புரியவைக்க முயற்சிப்போமேயன்றி தண்டிப்பது நோக்கமல்ல.
Provision Of Muslim Women (Protection Of Rights On Divorce) Act 1986
1985ம் ஆண்டு நமது உச்ச நீதிமன்றத்தில் Mohammed Ahmed Khan Vs ShahBanu Begum என்ற சரித்திரப் புகழ் மிக்க வழக்கில் ஒரு இஸ்லாமியப் பெண்ணிற்கு தலாக்கிற்கு பிறகு இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ் கொடுத்த தீர்ப்பு இஸ்லாமிய சமூகத்தால் ஏற்றுக்கொள்ள இயலாத காரணத்தினால் மேற்கூறிய இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. மேற்கூறிய இந்தச் சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் இஸ்லாமிய சமூகத்தாரால் தலாக்கிற்குப் பிறகு ஒரு பெண் கடைப்பிடிக்கும் இதாத் சமயத்திலேயே அந்தப் பெண்ணிற்கு தன் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான ஜீவனாம்சத் தொகை செலுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. தலாக் செய்யப்பட்ட உடனே அவர்களுக்குப் பிறக்கும் சட்டப்படியான குழந்தைக்கான ஜீவனாம்சமும், மேலும் திருமணத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட மெஹர் தொகையும் செலுத்தப்பட வேண்டும். அந்தப் பெண்ணிற்கு திருமணத்திற்கு முன்னரும் திருமணத்தின்போதும் அவளது உற்றார், உறவினர், நண்பர்கள், கணவர் மற்றும் அவரின் உறவினர்களால் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் அனைத்தும் திருப்பித் தரப்படவேண்டும்.
ஒரு வேளை தலாக் செய்த கணவர் மேற்கூறியவற்றை சரிவர நடைமுறை படுத்தாத பட்சத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ் வழக்கு தொடர இயலும். தலாக்கிற்கு பிறகு மறுமணம் செய்து கொண்ட இஸ்லாமிய பெண்ணிற்கு முழுமையான ஜீவனாம்ச தொகை தராத பட்சத்தில் சட்டப்படி அதனை முன்னாள் கணவரிடமிருந்து கோர மறுமணம் ஒரு தடையல்ல.
The Hindu Marraige Act 1955 (இந்து திருமணச் சட்டம் 1955)
இந்தச் சட்டத்தின் பிரிவு 24ன் கீழ் பாதிக்கப்பட்ட கணவனோ அல்லது மனைவியோ எதிர்தரப்பினரிடமிருந்து ஜீவனாம்சம் கோர இயலும். இந்து திருமணச் சட்டத்தின்கீழ் ஏதாவது ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் மேற்கூறிய இந்தச் சட்டப்பிரிவினை பயன்படுத்த இயலும்.
பிரிவு 25ன் கீழ் ஒரு வழக்கு விவாகரத்தில் முடியும் பட்சத்தில் வாழ்நாள் ஜீவனாம்சத்தை ஒரே தவணையில் பெற்றுக் கொள்ள இந்தப் பிரிவு வழிவகை செய்துள்ளது.
Hindu Adoption and Maintenance Act 1956 (இந்து தத்தெடுத்தல் மற்றும் ஜீவனாம்ச சட்டம் 1956)
இந்தச் சட்டத்தின் பிரிவு 18 ஒரு இந்து மனைவி அவர் வாழ்நாள் முழுவதும் தன் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோர வழிவகை செய்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் நியாயமான காரணத்திற்காக கணவரை விட்டுப் பிரிந்த மனைவியும் ஜீவனாம்சம் கோரலாம்.
1. எந்த ஒரு தகுந்த காரணமும் இல்லாமல் தன் மனைவியை கைவிட்டு பராமரிக்க தவறிய கணவன்.
2. கணவனால் மனதளவிலும், உடலளவிலும் வன்கொடுமை அனுபவித்த பெண்.
3. தொழுநோயால் பாதிக்கப்பட்ட கணவர்.
4. வேறு ஒரு மனைவியுடன் வாழ்பவர்.
5. வேறு ஒரு பெண்ணுடன் அதே வீட்டில் தொடர்ந்து அல்லது அவ்வப்போது வசிப்பது.
6. இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறுவது.
7. வேறு ஏதாவது ஒரு நியாயமான
காரணத்திற்காக பிரிந்து இருத்தல்.
தகாத உறவில் ஈடுபட்ட, ஈடுபட்டிருக்கும் ஒரு மனைவி இந்தச் சட்டத்தின் கீழ் தனி வசிப்பிடமோ, ஜீவனாம்சமோ கோர இயலாது.
* இந்தச் சட்டத்தின் பிரிவு 19ன் கீழ் கணவனை இழந்த பெண் தன்னுடைய சுய சம்பாத்தியம் அல்லது சொத்தின் மூலம் வரும் வருமானத்தாலோ, தன்னுடையோ கணவரோ அல்லது தாய், தந்தையரின் சொத்தின் மூலம் வரும் வருமானத்தினாலோ, மேலும் தன் மகன் மற்றும் மகளின் பராமரிப்பின் மூலம் அல்லது அவர்களது சொத்தின் மூலம் வரும் வருமானத்தினாலோ தன்னைக் காத்துக்கொள்ள இயலாத பட்சத்தில் தன்னுடைய கணவரின் தந்தையிடமிருந்து (மாமனார்) ஜீவனாம்சம் கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* இச்சட்டத்தின் பிரிவு 20ன் கீழ் ஒரு இந்து குடிமகனின் சட்டப்பூர்வமான அல்லது சட்டம் ஏற்றுக் கொள்ளாத குழந்தை, தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாத வயதான பெற்றோர், தன்னைப் பராமரித்துக் கொள்ள இயலாத திருமணமாகாத மகள் ஆகியோர் ஜீவனாம்சம் கோர இயலும். நீதிமன்றம் ஜீவனாம்சம் வழக்கின் போது வழக்கு தொடுப்பவரின் நிலை, எதிராளியின் வருமானம், வாழ்க்கைத் தரம் அனைத்தையும் அலசி ஆராய்ந்து ஒரு ஜீவனாம்சம் கோருபவரின் வாழ்வாதாரத்திற்கான போதிய தொகையை நிர்ணயிக்கும்.
Protection of Women from Domestic Violence Act 2005 (குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005)
நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்படும் குற்றங்களில் பெரும்பாலான குற்றங்கள் பெண்களின் மீது செலுத்தப்படும் குடும்ப வன்முறையே ஆகும். அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு தன் கணவராலோ, சகோதரனாலோ, மகனாலோ, உடன் வசிக்கும் ஆண் நண்பராலோ, தந்தையாலோ நிர்கதியாக விடப்படும் பெண் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆண்மகனிடமிருந்து ஜீவனாம்சமும் நஷ்டஈடும் கோர இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது. பொதுவாக இந்திய சட்டங்களில் மனைவி என்ற அந்தஸ்துடைய பெண் மட்டுமே ஜீவனாம்சம் கோர சட்டம் வழிவகை செய்துள்ளது. எனினும் முதல் முறையாக மனைவியல்லாத ஒரு ஆண்மகனுக்கு துணையாக மனைவி போல் வாழும் ஒரு பெண்ணும் ஜீவனாம்சம் கோர இந்தச் சட்டமே முன்னோடியாக விளங்கியது. இந்தச் சட்டத்தைப் பற்றி முழுமையாக பின்னர் தெரிந்து கொள்வோம்.
Narinder Pal Kaur Vs M.S. Chawla (2008)
சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் மேற்கூறிய வழக்கில் மனைவியல்லாத ஒரு பெண்ணிற்கு ஜீவனாம்ச உரிமை கொடுத்து தீர்ப்பளித்தது. காலங்காலமாக ஒரு ஆண் பல மனைவிகள் வைத்துக்கொண்டது நம் இதிகாசங்களில், புராணங்களில் பார்த்துவந்த ஒன்று. இந்தியாவில் திருமணச் சட்டங்கள் இயற்றப்பட்டவுடன் ஒரு தாரம் முறை வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் திருமண உறவில் அல்லாத ஒரு பெண் ஜீவனாம்சம் கோர சட்டம் அனுமதிக்கவில்லை. எனினும் மேற்கூறிய வழக்கில் ஒரு ஆண் தான் ஏற்கனவே மணமாகியிருந்ததை மறைத்து 14 ஆண்டுகள் ஒரு பெண்ணுடன் மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்து இரண்டு குழந்தைகளையும் பெற்று சமூகத்தில் அந்த குடும்பத்தின் தலைவன் என்று வெளிக்காட்டிக்கொண்டு இருந்த காரணத்தால் இந்த வழக்கின் தீர்ப்பில் இந்த இரண்டாவது மனைவியையும் சட்டப்பூர்வமாக ஜீவனாம்சம் பெருவதற்கு அங்கீகரிக்கலாம் என்று கூறி நீதிமன்றம் ஜீவனாம்சமும் வழங்கியது.
Komalam Amma Vs Kumara Pillai Raghavan Pillai and others (2008)
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பில் ஒரு பெண்ணிற்கு வசிக்கும் இருப்பிடம் ஏற்படுத்திக் கொடுப்பதும் ஜீவனாம்சத்தின் ஒரு அங்கமே என்று கூறியுள்ளது. மேலும், அந்த இருப்பிடமும் அந்தப் பெண் பழக்கப்பட்ட அந்தஸ்திலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
Maintenance and Welfare of Parents and Senior Citizens Act 2007 (பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007)
இந்திய நாடு கூட்டுக் குடும்ப முறைக்கு பெயர் போனது. ஆனால், காலத்தின் கட்டாயத்தால் பொருளீட்டுவதற்காக இளைய தலைமுறையினர் வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்த காரணத்தால் நம் நாட்டில் வயதான பெற்றோர்களும் மூத்த குடிமக்களும் பராமரிக்க ஆளில்லாமல், அன்பு காட்ட ஆளில்லாமல் தனிமை படுத்தப்பட்டிருப்பது நிதர்சனமான உண்மை. இதனாலேயே இன்று புற்றீசல் போல் முதியோர் காப்பகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 125ன் கீழ் பெற்றோர்கள் ஜீவனாம்சம் பெற வழிவகை செய்யப்பட்டிருந்தாலும் 2007ம் ஆண்டு கூடுதலான இந்தச் சிறப்பு சட்டத்தினையும் இயற்றியுள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் தன்னை பராமரித்துக்கொள்ள இயலாத ஒரு மூத்த குடிமகன், ஆதரவற்று விடப்பட்ட பெற்றோர், தன்னிச்சையாகவோ அல்லது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் (ழிநிளி) மூலமாக இதற்கென நியமிக்கப்பட்ட ஆணையத்தின் முன் வழக்கு தாக்கல் செய்யலாம். மேலும், யாருமே பராமரிக்க இயலாத நிலையில் இருக்கும் முதியோர்களை அரசே முதியோர் இல்லங்களின் வாயிலாக பராமரிக்க சட்டம் வலியுறுத்துகிறது. மேலும், இந்த சட்டத்தின்கீழ் மனு தாக்கல் செய்யும் செய்பவரின் குழந்தைகள் அல்லது வாரிசுகளுக்கு சம்மன் அனுப்பி ஆணையம் ஆலோசனை வழங்கி சமரச முயற்சி மேற்கொள்கிறது. சமரச முயற்சி தோல்வியடையும் பட்சத்தில் ஆணையம் ஜீவனாம்சம் வழங்கக் கோரி தீர்ப்பினை வழங்குகிறது.
இந்திய நாட்டில் நீதிமன்றங்களால் ஜீவனாம்ச வழக்கு தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு பெற்றும் கிட்டதட்ட 46 சதவிகிதப் பெண்கள் அதனை கையில் பெற முடியாமல் இருக்கிறார்கள். மேலும், 60 சதவிகிதப் பெண்கள் நீதிமன்றத்தின் மூலம் உரிய நேரத்தில் ஜீவனாம்சம் பெற முடியாமல் தவிக்கிறார்கள். திருமணத்தின் போது சீதனமாக கொடுக்கப்படும் பொருட்களும் அல்லது கணவரோ அல்லது அவரது குடும்பத்தாரோ வரதட்சணையாக கேட்டு வாங்கும் பொருட்களையோ திரும்பப் பெறுவது என்பது ஒரு பிரம்மப் பிரயத்தனமாகவே இருக்கிறது. 30 சதவிகிதப் பெண்கள் மட்டுமே தங்கள் நகைகளையோ, உடமைகளையோ ஓரளவிற்கு தங்கள் வசமாக்கிக் கொள்ள முடிகிறது. மேலும், கணவரிடமிருந்து பிரிந்து வாழும் 75 சதவிகிதப் பெண்களுக்கு சுய சம்பாத்தியமோ, போதிய வருமானமோ இல்லா நிலையில் நீதிமன்றம் கொடுக்கக் கூடிய ஜீவனாம்சத்தையும் சரிவர பெற முடியாத நிலையிலும் அல்லல் பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
காலங்காலமாக நம்முடைய நாட்டில் ஒரு தனி நபர் தர்மப்படி தான் பராமரிக்க வேண்டியவர்களை பராமரிக்கத் தவறுவது ஒரு மனிதாபிமானமற்ற குற்ற செயல் என்றே வேத உபநிடதங்கள் கூறுகின்றன. மேலும், அனைத்து மதங்களும் இதனையே பறைசாற்றுகிறன. இன்றைய தலைமுறை இதனை தவறியதால் தான் சட்டத்தின் மூலம் அதனை நிறைவேற்றவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எந்த ஒரு தனி நபரும் தர்மப்படிதான் பராமரிக்க வேண்டிய நபரை பராமரிக்கத் தவறும் பட்சத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.


Comments