ஒவ்வொரு இந்திய தேசத்து சகோதரனும் எந்த மத நூலை வாசிக்கிறானோ இல்லையோ ஆனால் இந்திய சுதந்திர போரட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாகச் செம்மல்களைப் பற்றி வாசித்தே ஆக வேண்டும்.

எந்த புனித தலத்துக்கு செல்கிறானோ இல்லையோ.... ஆனால் அந்தமான் தீவிலிருக்கும் அந்த சிறைச்சாலைக்கு சென்று பார்த்து வருதல் கட்டாயமாக்கப் பட வேண்டும்.

இன்றைக்கு தேசத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் அத்தனை பேருக்கும் சுதந்திரம் என்றால் என்ன? உரிமைகள் என்றால் என்ன? நமது வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது ? என்றெல்லாம் முழுதாய் உணர்தலுக்கு சற்றும் சாத்தியமற்ற சூழலே நிலவுகிறது.

ஒவ்வொரு இந்தியரும் நமது பக்கத்து தேசத்தில் சுதந்திரத்துக்குப் பின்னாலும் தெளிவற்ற பார்வைகள் கொண்ட தலைவர்களால் சின்னாபின்னப் பட்டுக் கிடக்கிறானே நமது சகோதரன் அவனைக் கேட்டுப் பாருங்கள்.... சுதந்திரம் என்றால் என்னவென்று...?

நினைத்த இடத்தில் காறி உமிழவும், பார்க்குமிடத்திலெல்லாம் தெருவோரத்தில் சிறுநீர் கழிக்கவும், யாரை பற்றி வேண்டுமானாலும் யார் வேண்டுமானலும் எது வேண்டுமானாலும் அத்து மீறி பேசவும், வன்முறைகள் செய்யவும், காவல்துறை, மற்றும் நீதித்துறையினை மதிக்காமல் தத்தம் ஆள், பண அதிகார பலத்தால் எல்லாவற்றையும் கட்டிப் போட்டு வன்முறைகள் செய்யவும், இலஞ்சம் வாங்கவும், ஊழல் செய்யவும், தத்தம் சந்ததியினரை மட்டுமே குறுக்கு வழிகளில் வளர்த்து விடவும், பணத்தை பெற்றுக் கொண்டு பிணத்தைப் போல தேர்தலில் வாக்குகளை விற்கவும், எப்போதும் யாரையாவது குறைகள் சொல்லி கறைகளோடு தத்தம் சட்டைகளைப் போட்டுக் கொண்டு புறணி பேசவும் இந்த சுதந்திரம் இப்போது உங்களுக்கும் எனக்கும் பயன் படுகிறது என்றால், அது எவ்வளவு வேதனையான விடயம்...

சமகால சுயநல அரசியலை குற்றம் கூறிக் கொண்டு நமக்கும் இந்த தேசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிப் போய் விடாமல், பெற்ற சுதந்திரத்தின் பெருமைகளை பேணிக் காப்பதோடு, சுதந்திர தேசத்தின் பெருமைகளை ஒவ்வொரு சக இந்தியரிடமும் எடுத்தியம்புவோம்...!

தேசத்தில் வாழும் அத்தனை பேரின் உரிமைகள், கடமைகளை என்னவென்று அறியச் செய்வோம்....! மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக் கருத்துக்களை நம்மால் இயன்ற அளவு பரப்பி ஒரு மிகப்பெரிய தேசத்தின் தெளிவான, புரிதல்கள் கொண்ட ஒப்பற்ற குடிமகனாக வாழ்வோம்...!

வாழ்க இந்தியா ! வளர்க தியாகிகளின் புகழ்!
ஜெய் ஹிந்த்!

Comments