வாகன பர்மிட் பெற வழிமுறை என்ன?

வாகனங்களுக்கு அனுமதி (பர்மிட்) பெறும் வழிமுறைகள் என்ன?

வாகனங்களுக்கு பல்வேறு வகைகளில் பர்மிட் வழங்கப்படுகின்றன என்பதைப் பார்த்தோம். வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உள்ளன. அவற்றை பெற்று இருப்பிடச் சான்று, வாகன தகுதிச் சான்று, வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்டவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அவை சரியாக இருந்தால, ஒரே நாளில் பர்மிட் வழங்கப்படும்.

வாகனம் இல்லாமல்கூட, பர்மிட் கேட்டு விண்ணப்பம் செய்யலாம். அதற்கு செயல்முறை ஆணை வழங்கப்படும். அந்த ஆணை 3 மாத காலம் வரை மட்டும் செல்லுபடியாகும். அதன்பின், செயல்முறை ஆணை தானாக காலாவதியாகிவிடும். அதற்குள், சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு உரிய தகுதிச் சான்று, வாகனப் பதிவு போன்ற ஆவணங்களை வழங்கினால் பொது போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படும்.

தற்காலிக அனுமதி என்றால் என்ன?

தேசிய அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே நாடு முழுவதும் வாகனத்தை இயக்க முடியும். ஒரு மாநிலத்துக்குள் இயக்கும் அனுமதி பெற்றிருந்தால், மாநிலத்துக்குள் மட்டுமே இயக்க முடியும். அவ்வாறு மாநில அனுமதி பெற்ற போக்குவரத்து வாகனம், வெளிமாநிலத்துக்கு செல்ல நேரிட்டால் அவற்றுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து, மோட்டார் வாகன அலுவலகத்தில் தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது.

தற்காலிக அனுமதி பெறாத சூழலில் அவசரமாக வெளி மாநிலம் செல்ல நேர்ந்தால் என்ன செய்வது?

பிரச்சினை இல்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக அனுமதி பெற முடியவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாநில எல்லையில் சோதனைச் சாவடியில் தற்காலிக போக்குவரத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

தற்காலிக போக்குவரத்து வாகன அனுமதி கட்டணம், வரி எவ்வளவு?

வெளி மாநிலங்களுக்குச் செல்ல ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாகன வரி வேறுபடும். எனவே, எந்த மாநிலத்துக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாநிலத்துக்கான வாகன வரியில் 10-ல் ஒரு பங்கு செலுத்தி தற்காலிக போக்குவரத்து அனுமதி பெறலாம்.

இந்த அனுமதி 7 நாட்கள், ஒரு மாதம், 3 மாதங்கள் என்ற அளவில் வழங்கப்படுகிறது. 7 நாட்களுக்கு மேல் ஒருநாள் தங்கும் சூழல் ஏற்பட்டாலும் ஒரு மாத வரி செலுத்த வேண்டும். அதுபோல, ஒரு மாதத்துக்கு மேல் ஒருநாள் தங்க நேரிட்டாலும் 3 மாத வரி செலுத்தவேண்டும்

Comments