திருட்டு கம்ப்யூட்டரை வாங்கினால் 3 வருஷம் ஜெயில்!

ந்தியாவில், இணையம் சார்ந்த குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான சட்டங்கள் ஆரம்பத்தில் இல்லை. 2000-ம் ஆண்டுதான், தகவல் தொழில்நுட்பச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்னமும் இதுகுறித்த விழிப்பு உணர்வு போதுமான அளவுக்குப் பொதுமக்களிடம் இல்லை. வெளிநாட்டு நபர்கள், இந்தியாவில் இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் அல்லது நெட்வொர்க்கைப் பயன்படுத்தி குற்றம் செய்திருந்தால், அவர்கள்மீதும் இந்தச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். 2008-ம் ஆண்டில், இதில் இரண்டு திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்தச் சட்டத்தின் பிரிவு 66A, ‘ஒருவரைப் பற்றிய தவறான அல்லது புண்படுத்தும்படியான அல்லது மிரட்டும்படியான தகவல்களை பப்ளிஷ் செய்வது குற்றம்’ என வரையறுத்தது. ‘இதற்கு மூன்று ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்’ என்றது. அரசையும் அமைச்சர்களையும் விமர்சித்து கார்ட்டூன் போட்டவர்கள், ஃபேஸ்புக் பதிவு எழுதியவர்கள், அவற்றை ஷேர் செய்தவர்கள் எனப் பலரும் இந்தச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து, ‘இந்தச் சட்டம் தெளிவற்றதாக இருக்கிறது. இதைப் பயன்படுத்தி யாரையும் கைதுசெய்ய முடியும். இந்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள கருத்துரிமைக்கு எதிராக உள்ளது’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. இதைத் தொடர்ந்து, 2015 மார்ச் 24-ம் தேதி ‘பிரிவு 66A, அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என்று தீர்ப்பளித்து, இதை ரத்துசெய்தது நீதிமன்றம். ஒருவேளை, இந்த செக்‌ஷன் இருந்திருந்தால், இப்போது மீம்ஸ் போடும் பலரும் புழலில் கம்பி எண்ண வேண்டியிருந்திருக்கும். 

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் முக்கியமான சில பிரிவுகள் மற்றும் தண்டனை விவரங்கள் இங்கே...

செக்‌ஷன்:  65

குற்றம்: கணினி அல்லது அது சார்ந்த மென்பொருள்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துதல்

தண்டனை: மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும்

செக்‌ஷன்: 66

குற்றம்: கணினி அமைப்பை ஹேக் செய்வது

தண்டனை: மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும்

செக்‌ஷன்: 66B

குற்றம்: திருடப்பட்ட கணினி அல்லது தகவல் கருவிகளை வாங்குதல்

செக்‌ஷன்: 66C

குற்றம்: மற்றவர்களின் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி மோசடி செய்தல்

செக்‌ஷன்: 66D

குற்றம்: கணினி அல்லது தகவல் தொழில்நுட்பக் கருவிகளை வைத்து ஒருவரை ஏமாற்றுதல்

இந்த மூன்று குற்றங்களுக்கும் தண்டனை: மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும்

செக்‌ஷன்: 66E

குற்றம்: ஒருவரின் அந்தரங்கப் படங்களை அவரது அனுமதியில்லாமல் வெளியிடுவது

தண்டனை: மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும்

செக்‌ஷன்: 66F

குற்றம்: இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில், கணினிசார்ந்த விஷயங்களைப் பயன்படுத்துவது (சைபர் தீவிரவாதம்)

தண்டனை: ஆயுள் தண்டனை

செக்‌ஷன்: 67

குற்றம்: ஆபாசப் படங்களை எலெக்ட்ரானிக் வடிவில் பகிர்தல்

தண்டனை: மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும்

செக்‌ஷன்: 67B

குற்றம்: குழந்தைகள்மீதான பாலியல் வக்கிரங்களை ஆன்லைனில் பதிவிடுவது 

தண்டனை: ஏழு ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும்

செக்‌ஷன்: 69

குற்றம்: தேசப் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக அரசு கேட்கும் டேட்டாக்களைத் தராமல் இருப்பது

தண்டனை: ஏழு ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்

செக்‌ஷன்: 70

குற்றம்: பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நெட்வொர்க் சிஸ்டத்தைத் தகர்ப்பது அல்லது தகர்க்க முயற்சி செய்வது 

தண்டனை: அபராதத்துடன் 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை

- கார்க்கி பவா

எங்கே போச்சு 19 கோடி?

செல்போனில் ஒரு ‘க்ளிக்’கில் பணத்தைச் செலுத்தி பொருள்களை வாங்கும் டிஜிட்டல் வாலட்களுக்கு, கிட்டத்தட்ட பிராண்டு அம்பாசடராக இருந்தார் பிரதமர் மோடி. ‘பே டிஎம்’ போன்றவை அவரால் புகழ்பெற்றன.

இதேபோன்ற ஒரு டிஜிட்டல் வாலட், மொபிக்விக் (MobiKwik). வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாத்துப் பரிமாற்றம் செய்யவேண்டிய இந்த நிறுவனமே, ‘‘எங்கள் அக்கவுன்ட்டில் இருந்த 19 கோடி ரூபாயைக் காணோம்’ என்று போலீஸில் புகார் கொடுத்திருக்கிறது. 

செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யும்போதோ, கடையில் மளிகைப் பொருட்கள் வாங்கும்போதோ, டிஜிட்டல் வாலட்டில் நம் அக்கவுன்ட்டில் இருக்கும் பணம், அந்த செல்போன் கம்பெனிக்கோ மளிகைக்கடைக்கோ அக்கவுண்ட் பரிமாற்றம் செய்யப்படும். இதுதான் டிஜிட்டல் வாலட்டின் இயங்குமுறை. ஆனால், ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, டிஜிட்டல் வாலட்டை சிலர் பயன்படுத்தும்போது, அவர்களின் அக்கவுன்ட்டிலிருந்து பணம் குறையவில்லை. மொபிக்விக் நிறுவனத்தின் கார்ப்பரேட் அக்கவுன்ட்டிலிருந்து பணம் போயிருக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட அந்த நபர்கள், தாறுமாறாக டிஜிட்டல் வாலட்டைப் பயன்படுத்தி, ஏதேதோ வாங்கியுள்ளார்கள்; யார் யாருக்கோ பணம் அனுப்பியிருக்கிறார்கள். மூன்றரை மாதங்கள் கழித்து இதைக் கண்டுபிடிப்பதற்குள், 19 கோடியே 61 லட்ச ரூபாயை இழந்துவிட்டது மொபிக்விக்.

பதினெட்டாம் படி கருப்பசாமி புண்ணியத்தில் வாடிக்கையாளர்கள் யாருக்கும் இழப்பு இல்லை!

அடுத்தவர்களின் கணினி அல்லது மொபைலில் உங்கள் கணக்குகளைப் பயன்படுத்தும்போது, பிரவுசரில் incognito வசதியைப் பயன்படுத்தமுடியும். இதன்மூலம் நம் பாஸ்வேர்டுகள், அந்த கேட்ஜெட்டில் பதிவாவதைத் தடுக்கமுடியும்.

முக்கியமான தகவல்களை எப்போதும் பேக்அப் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். இதனால், ஏதேனும் இணையத் தாக்குதலால் நம் கணினிகளில் இருக்கும் டேட்டா மாட்டிக்கொண்டாலும்கூட (தனிப்பட்ட விவரங்கள் தனி), அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம்

Comments