காலாவதியான பாலிசிகளை மீட்பது எப்படி?

#காலாவதியான_பாலிசிகளை_மீட்பது #எப்படி?

பொதுவாக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை எடுக்கும்போது தொடர்ந்து அந்த பாலிசிக்கான பிரீமியம் தொகையை செலுத்தி வந்தால் மட்டுமே காப்பீட்டின் முழுப் பலனும் கிடைக்கும். ஒருவேளை பிரீமிய தொகையை நீண்ட காலத்துக்கு செலுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அந்த பாலிசி காலாவதியாகிவிடும். இதனால் இந்த பாலிசிக்கான முழுப்பலனும் கிடைக்காமல் போகும்.

சில காலத்துக்கு பிரீமியம் கட்டமுடியாமல் இருந்தாலும் பிறகு அந்த பாலிசிகளை மறுபடி மீட்க முடியும். ஆனால் அதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன.

கால அவகாசம்

பொதுவாக ஆயுள் காப்பீடு பாலிசிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை, ஆறு மாதத்துக்கு ஒருமுறை, ஆண்டுக்கு ஒரு முறை என பிரிமீயம் தொகையை செலுத்தும் வசதி உள்ளது. இருப்பினும், பிரீமியம் தொகையை கட்டவில்லையென்றால் உடனடியாக அபராத தொகையோ அல்லது கூடுதல் கட்டணங்களையோ விதிப்பதில்லை. பிரீமியம் தொகையை செலுத்துவதற்கு கூடுதல் அவகாசத்தை நிறுவனங்கள் வழங்குகின்றன.

நீங்கள் மாதந்தோறும் பிரீமியம் தொகையை செலுத்தி வருபவராக இருந்து, அந்த மாதத்துக்கு பிரீமியம் செலுத்தவில்லையென்றால் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதேபோல் மூன்று மாதம், ஆறு மாதம், ஆண்டுக்கு ஒரு முறை பிரிமீயம் செலுத்திவந்தால் 30 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும். இது அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த கூடுதல் அவகாசத்திலும் பிரிமீயம் தொகையைச் செலுத்தவில்லையென்றால் அபராதத் தொகையுடன் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இந்த அபராதத் தொகை நிறுவனங்களுக்கு நிறுவனம் வேறுபடும். உதாரணமாக மேக்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், 60 முதல் 180 நாட்கள் தாமதமாக பிரீமியம் தொகையை செலுத்தினால் 8 சதவீதம் (பிரீமியம் தொகையில்) கட்டணத்தை அபராதமாக விதிக்கிறது. ஆறுமாதத்துக்கு மேல் தாமதமாக செலுத்தினால் 9.9 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. எல்ஐசி ஓர் ஆண்டுக்கு 9.5 சதவீதம் அபராதமாக விதிக்கிறது.

பிரீமியம் செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை மீட்பதற்கு இரண்டு ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இது அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் பொருந்தும். முன்னதாக இது மூன்று முதல் ஐந்து ஆண்டுகளாக இருந்தது.

மீட்கும் முறை

பாலிசியை மீண்டும் செயல்முறைக்கு கொண்டுவர வேண்டுமென்றால், நிலுவை வைத்துள்ள பிரீமியத் தொகையை இரண்டு ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். ``ஒரு பாலிசியில் பிரீமியம் செலுத்தாமல் ஆறு மாதத்துக்கு மேல், இரண்டு ஆண்டுகளுக்குள் இருந்தால் பாலிசிதாரர் மருத்துவ சோதனைக்கு அனுப்பப்படுவார். ஏதேனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கேற்ப பிரீமியத் தொகை மாறுபடும். இருப்பினும் பாலிசிக்கான அதே பலன்கள் தொடரும்’’ என்று மேக்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி விஸ்வானந்த் தெரிவித்தார்.

ஒருவேளை இரண்டு ஆண்டுக்குள் பாலிசியை மீட்கவில்லையென்றால் அந்த பாலிசி காலாவதியாகிவிடும் அல்லது அந்த பாலிசிக்குரிய பலன்கள் குறைந்துவிடும். இதே நிலை பாலிசி காலம் முடியும் வரை அல்லது பாலிசிதாரர் இறப்பு வரை தொடரும்.

``பாலிசியை காலாவதி நிலைக்கு கொண்டு சென்று மீட்பதை விட தொடர்ந்து பிரீமியம் செலுத்தினால்தான் பாலிசியின் முழு பலன் கிடைக்கும். இருப்பினும், பாலிசிகளை மீட்கும் போது அதே பிரீமியம் தொகையை செலுத்தினால் போதும். ஆனால் அபராத கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்’’ என்று எடல்வைஸ் டோக்யோ லைப் நிறுவனத்தின் சுப்ரஜித் முகோபத்யாயே தெரிவித்தார்.

நிறுவனங்களின் உதவி

பொதுவாக பாலிசிகளை மீட்பதற்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உதவி செய்கின்றன. பிரீமியம் தொகையை செலுத்துவதற்கான காலம் வரும்போது குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அலர்ட் செய்திகளை நிறுவனங்கள் வழக்கமாக அனுப்பி வருகின்றன. அதேபோல பாலிசிகளை மீட்பதற்கான தொகையையும் குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொள்ளமுடியும். அதற்காக பிரத்யேக எண்ணை இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் வைத்துள்ளன.

சிலசமயம், பாலிசிகளை மீட்பதற்கு சிறப்பு வசதிகளையும் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. உதாரணமாக எல்ஐசி நிறுவனம் பாலிசிகளை மீட்பதற்கு சில சலுகைகளை அறிவிக்கிறது. அபராதம் இல்லாமல் பாலிசிகளை மீட்பது போன்ற சலுகைகளை பிற நிறுவனங்களும் அறிவிக்கின்றன.

பாலிசிகளை மீட்பது எளிது. ஆனால் அதைவிட தொடர்ந்து பிரிமீயம் செலுத்திவந்தால் பாலிசிக்குரிய முழுப்பலனையும் அடையமுடியும்.

Comments