சாமானியனுக்கு கைகொடுக்கும் இலவச சட்ட உதவி மையங்கள்.

சாமானிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட
இலவச சட்ட உதவி மையங்கள் பற்றித் தெரியுமா?
***************************************************************************
எவரும் உலகிலத்தில் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சூழ்நிலைகள்தான் பெரும்பாலும் மனிதர்களை குற்றவாளி ஆக்குகின்றன.

பேராசைகளினாலும், ஆத்திரம் கொள்வதாலும், சிந்திக்காமல் செயல்படுவதாலும், வக்கிர எண்ணங்களினாலும் குற்றங்கள் நாட்டில் நடக்கின்றன.

குற்றத்தை செய்தபின்பு காவலர் மூலம் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் படிகளில் ஏறும்போதுதான் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று பல பேர்கள் உணர்கிறார்கள்.

நிறைய பணத்தை செலவழித்து வழக்கறிஞர்கள் மூலம் வசதி படைத்தவர்கள் தங்கள் வழக்கை நடத்துகிறார்கள். ஆனால், கிராமங்களில் வசிக்கும் பாமர மக்கள் அடிப்படை சட்ட உரிமைகளைக்கூட அறியாமல் இருக்கின்றனர். வழக்கு என்று ஒன்று வந்த பிறகு, அதற்கு யாரை நாடுவது?, எப்படி வழக்கை கொண்டு செல்வது என்று திக்குத் தெரியாமல் இருக்கின்றனர்.

படித்தவர்களில் ஒரு சிலரும் சட்ட விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், தவறான வழக்கறிஞர்களிடம் சிக்கிக் கொண்டு நாட்களையும் பணத்தையும் வீணாக இழந்து கொண்டு இருக்கிறார்கள்.

இது போன்ற குறைகளை நீக்குவதற்கான, அரசு உருவாக்கியதுதான் இலவச சட்ட உதவி மையங்கள் ஆகும்.

இலவச சட்டஉதவிகள் குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 304-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நமது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வழக்கறிஞர் வைத்து தன் வழக்கை வாதாடுவதற்கு உரிமை வழங்க வேண்டும் என்பதுதான் இலவச சட்ட உதவி மையத்தின் நோக்கமாகும்.

தனது குடிமக்களுக்கு நீதியை வழங்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமையாகும்.நீதியைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் குடிமக்களுக்கு வழக்கறிஞரின் உதவியை அளிப்பதற்காக செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டின்படி, அந்த வழக்கில் வசதியில்லாத ஏழை மக்களின் சார்பாக ஆஜராகின்ற வழக்கறிஞருக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.

நமது மாநிலத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீதிமன்ற வளாகங்களில், இலவச சட்ட உதவி மையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இலவச சட்ட உதவிக்கு என்ன செய்ய வேண்டும்?
************************************************************************
வசதி இல்லாதவர்கள் தங்களுடைய வழக்குகளை நடத்த இலவச சட்ட உதவி தேவைப்படுபவர்கள் இலவச சட்ட உதவி மையத்தை அணுகி, தங்கள் வழக்கு விபரங்களை விபரமாக எழுதி மனுவாக கொடுக்க வேண்டும். அங்குள்ள பதிவாளர் தங்கள் மனுவை படித்துப் பார்த்துவிட்டு, அதற்கு ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து தருவார். இதற்கென்று எந்தவிதமான கட்டணமும் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.

எந்தெந்த வழக்கிற்கு இலவச சட்ட உதவி கிடைக்கும்?
*******************************************************************************
ஜீவனாம்சம் பெறுவதற்கு.
வரதட்சணை வழக்கு,
நிலம் பங்கு பிரிப்பு வழக்கு
ஜாமீன் எடுப்பதற்கு
கொலை வழக்கு,
மேல்முறையீடு செய்வதற்கு,
சீராய்வு மனு கொடுப்பதற்கு

போன்றவைகளை எந்த ஒரு செலவும் இல்லாமல் இலவச சட்ட உதவி மையம் மூலமாக செய்துமுடித்து நீங்கள் பயன்பெறலாம்.

மேலும் பாதிக்கப்பட்ட பொது மக்கள் சட்ட உதவிகளை கேட்டு அணுகும்போது, அவர்கள் பிரச்சனை தொடர்பான சட்டத்துறையில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை தேர்வு செய்து கொள்வத்ற்கும் தமிழ்நாடு சட்டஉதவி மற்றும் ஆலோசனைக் கழகம் வாய்ப்பளிக்கிறது.

பணம் உள்ளவர்களால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்காட முடியும் என்ற நிலையை மாற்றி ஏழை, எளிய மக்களும் இந்த இலவச சட்ட உதவி மையத்தின் வாயிலாக நீதிமன்றங்களை அணுகி பயன்பெற வேண்டும் என்பதே சட்ட உதவி மையங்களின் உயர்ந்த நோக்கமாகும்.

Comments