நடிகர் பிரசாந்த் விவாகரத்து வழக்கு. இந்து திருமணச் சட்டம்

இந்து திருமணச் சட்டப்படி ஒருவர் தன்னுடைய பதிவு செய்த முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்திருந்தால் எந்தச் சூழ்நிலையில் அந்தத் திருமணத்தை ரத்து நீதிமன்றம் உத்தரவிட முடியும்?

நடிகர் பிரசாந்த் விவாகரத்து வழக்கு

இந்த வழக்கின் மேல்முறையீட்டாளரான கிரகலட்சுமிக்கும், எதிர்மனுதாரான நடிகர் பிரசாந்த்க்கும் 1.9.2005 ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சிறிது காலம் அவர்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார்கள். கிரகலட்சுமி கர்ப்பம் அடைந்தார். அவருடைய கர்ப்பம் 2.1.2006 ஆம் தேதி மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. அவர் அன்றைய தினமே குழந்தை பெற்றுக் கொள்வதற்காக கிரகலட்சுமி அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்  அதன்பிறகு 31.7.2006 ஆம் தேதி அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

கிரகலட்சுமி தாய் வீட்டுக்கு சென்றபிறகு இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினைகள் அதிகமானது. பிரசாந்த்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி, குழந்தை பிறந்தது மற்றும் குழந்தைக்கு பெயர் வைத்த நிகழ்ச்சி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பிரசாந்த் எவ்வளவோ முயற்சி செய்தும் கிரகலட்சுமியுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. அதனால் பிரசாந்த் சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் O. P. No - 2721/2006 என்ற எண்ணில் தன்னோடு தன் மனைவியை சேர்ந்து வாழ உத்தரவிடுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், கிரகலட்சுமி, பிரசாந்த் மீது இ. த. ச பிரிவு 498(A) மற்றும் வரதட்சணை தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒரு புகாரை அளித்தார். அதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை அதிகமானது.

இந்நிலையில் பிரசாந்த் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடையும் வகையில் ஒரு தகவல் அவருக்கு 11.6.2007 ஆம் தேதி கிடைத்தது. அது என்னவென்றால் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே நாராயணன் வேணு பிரசாத் என்பவருடன் 30.11.1998 ஆம் தேதி திருமணம் நடைபெற்று அந்த திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பதும் ஆகும். உடனே பிரசாந்த் அதனை உறுதிப்படுத்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த திருமணச் சான்றிதழ் நகலை பெற்றார்.

அதன்பிறகு முதல் திருமணத்தை மறைத்து தன்னை கிரகலட்சுமி இரண்டாவதாக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என காவல்நிலையத்தில் ஒரு புகாரை அளித்தார். அதன்பிறகு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி தன்னுடைய திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவிற்கு கிரகலட்சுமி எதிருரை தாக்கல் செய்தார். அதில் தான் கர்ப்பம் அடைந்த உடன் தன்னுடைய கணவரின் குடும்பத்தினர் தங்களுடைய போக்கை மாற்றிக் கொண்டனர். மேலும் தன்னுடைய கருவை கலைக்கும்படி வற்புறுத்தியதோடு தனக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்தினார்கள் என்றும், 2.1.2006 ஆம் தேதி தன்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் சேர்ந்து வாழ தன் கணவர் மனு போட்ட மனு நிலுவையில் இருக்கும் போது அவரும், அவரது குடும்பத்தினரும் சொத்தில் பங்கு வாங்கி வரச் சொல்லி மிரட்டியதால்தான் அவர்கள் மீது இ. த. ச பிரிவு 498(A) மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்ததாகவும் கூறியிருந்தார். மேலும் பிரசாந்த்ம், நாராயணன் வேணு பிரசாத் என்பவரும் சேர்ந்து பொய்யான ஆவணத்தை உருவாக்கி தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளதாகவும், அவ்வாறு தனக்கு எந்த திருமணமும் நடைபெறவில்லை என்றும் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த குடும்பநல நீதிபதி பிரசாந்த் கேட்டபடி திருமணத்தை செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பை எதிர்த்து கிரகலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.

வழக்கை நீதிபதி திரு. G. M. அக்பர் அலி விசாரித்தார்.

கிரகலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்புடையதல்ல என்றும், கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்று குறிப்பிட்டு தாக்கல் செய்திருக்கும் சான்றிதழை சட்டப்படியான ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அந்த ஆவணத்தை பொது ஆவணமாக கருத முடியாது என்றும், அதிலுள்ள சங்கதிகளை நிரூபிக்க திருமண பதிவாளர் உட்பட யாரையும் பிரசாந்த் தரப்பில் விசாரிக்கவில்லை என்றும் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே நடைபெற்றதாக கூறப்படும் திருமணம் நிரூபிக்கப்படாத நிலையில் விசாரணை நீதிமன்றம் பிரசாந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது தவறு என்றும், பிரசாந்த்க்கும், நாராயணன் வேணு பிரசாத்க்கும் தொடர்பு உள்ளது என்றும், இருவரும் சேர்ந்து சதி செய்துள்ளனர் என்றும் கிரகலட்சுமி தனது முதல் திருமணத்தை மறுத்துள்ளதால் அதனை பிரசாந்த் தான் தகுந்த ஆதாரங்களுடன் மெய்பிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர்

தஸ்தேன் Vs தஸ்தேன் (AIR-1973-SC-1534)

ரோசம்மாள் இரத்தினம்மாள் Vs ஜூசா மரியான் (CDJ-2000-SC-355)

தனியாகார் Vs டாக்டர் அபிஜிதராய்

மதன் மோகன் சிங் Vs ரஜினிகணி (2010-9-SCC-2009)

நீலம்குமார் Vs தயாராணி (2010-13-SCC-298)

சித்திக் Vs இராமலிங்கம் (2011-4-LW-805)

ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.

நடிகர் பிரசாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், பிரசாந்த் இந்து திருமணச் சட்டம் பிரிவு 11 ன் கீழ் மனுவை தாக்கல் செய்யவில்லை. எனவே கிரகலட்சுமிக்கு நடைபெற்ற முதல் திருமணத்தை பிரசாந்த் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமணத்திற்காக பிரசாந்தின் சம்மதத்தை கிரகலட்சுமி மறைத்து பெற்றுள்ளதால் அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க கோரி பிரசாந்த் இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன் கீழ் வழக்கை கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்  என்றும் மேலும் கிரகலட்சுமி சம்பந்தப்பட்ட முதல் திருமணத்தின் சார்பதிவக அலுவலக சான்றிதழ் பொது ஆவணம் என்றும் அதன் மூலம் கிரகலட்சுமி மோசடி செய்ததை பிரசாந்த் நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார் என்றும் கூறினார். மேலும் அவர்

மஞ்சுளா Vs மணி (1998-C.R.L.J-1476)

திருமதி. தயாமதி பாய் Vs K. M. ஷாப் (2004-7-SCC-107)

ஆய்வாளர் Vs நரசிம்மாச்சாரி (2005-8-SCC-364)

ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கீழ்கண்ட கேள்விகளை எழுப்பினார்.

1. திருமணத்தை பதிவு செய்திருப்பதால் அந்த திருமணம் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகுமா?

2.  திருமணச் சான்றிதழை பொது ஆவணமாக கருத முடியுமா? அதனடிப்படையில் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114(c) ன்படி ஒரு அனுமானத்திற்கு நீதிமன்றம் வர முடியுமா?

3. அவ்வாறு முதல் திருமணத்தை மறைத்ததால் அதனை இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன் கீழ் மோசடி எனக் கருதி இரண்டாவது திருமணத்தை சட்டப்படியான திருமணம் அல்ல என்று அறிவிக்க முடியுமா?

4. பிரசாந்த் கோரியபடி அவருக்கு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்ய முடியுமா?

நடிகர் பிரசாந்தின் ஒப்புதலை கிரகலட்சுமி தனக்கு ஏற்கனவே நடைபெற்ற திருமணத்தை மறைத்து மோசடியாக பெற்றுள்ளதை அடிப்படையாக கொண்டு தாக்கல் செய்துள்ளார்.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி திருமணத்திற்கான ஒப்புதலை மனுதாரர் அல்லது அவருடைய காப்பாளரின் ஒப்புதலை ஏமாற்றி மோசடி செய்து அல்லது வன்முறையை பயன்படுத்தி பெற்றிருந்தால் அந்த திருமணம் சட்டப்படியான ஏற்கத்தக்க திருமணமாக கருத முடியாது.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 7 திருமணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சடங்குகளை பற்றி கூறுகிறது. பிரிவு 7-A சுய மரியாதை திருமணம் மற்றும் சீர்திருத்த திருமணம் பற்றி கூறுகிறது. பிரிவு 8 இந்து திருமணங்களை பதிவு செய்வது பற்றி கூறுகிறது. பிரிவு 8(1) இந்து திருமணங்களை ஏன் பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை பற்றி கூறுகிறது.

மேலே சொன்ன சட்டப் பிரிவுகளில் ஒரு இந்து திருமணமானது பிரிவு 7 ன் கீழ் அல்லது 7-A ன் கீழ் சுயமரியாதை திருமணமாக வெறும் மாலை, மோதிரம், தாலி கட்டுதல் ஆகியவை மட்டும் நடைபெற்றிருந்தாலும் அத்தகைய திருமணங்களும் செல்லும். பிரிவு 8 ன் கீழ் திருமணங்களை பதிவு செய்வது அந்த திருமணத்திற்கு ஒரு ஆதாரமாக இருக்கும். அதற்காக இந்து திருமண பதிவாளர் மூலம் பதிவு செய்து இந்து திருமண பதிவேட்டில் அந்த திருமணங்கள் பதிவு செய்யப்படும். பிரிவு 8(1) ல் திருமணங்கள் பதிவு செய்யப்படுவதன் அவசியம் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இந்து திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை.

எனவே இந்து திருமணச் சட்டம் பிரிவு 7 அல்லது 7-A ன் கீழ் நடைபெறும் திருமணத்தை பதிவு செய்து தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த பதிவை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114(c) ன்படி திருமணச் சான்றிதழை ஒரு பொது ஆவணமாக கருதி அதனடிப்படையில் அந்த திருமணம் நடைபெற்றிருப்பதை தீர்மானிக்க முடியுமா? என்பதை பார்க்கும் பொழுது தமிழ்நாடு இந்து திருமண பதிவு விதி 9 ன்படி முறையாக விண்ணப்பம் செய்து 3 நபர்கள் சாட்சிக் கையொப்பமிட்டு ஒரு திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு 3 சாட்சிகள் ஒரு திருமணத்தை பதிவு செய்து கையெழுத்து செய்துள்ள நிலையில் நடிகர் பிரசாந்த் எந்த ஒரு சாட்சியையும் விசாரிக்காமல் அந்த சான்றிதழை பொது ஆவணமாக தாக்கல் செய்துள்ளார். 22.10.2007 க்கு பிறகுதான் விண்ணப்பங்களில் புகைப்படம் ஒட்டும் முறை அமலுக்கு வந்தது. அந்த விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டுள்ள ராஜேஷ், சங்கர் மற்றும் சந்திரசேகர் என யாரையும் பிரசாந்த் விசாரிக்கவில்லை. எனவே அந்த திருமணச் சான்றிதழை ஆவணமாக ஏற்க முடியாது. ஆனால் பிரிவு 8(4) ன்படி இந்துத் திருமண பதிவேடு சாட்சிய சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆவணமாகும். அதிலிருந்து எடுக்கப்படும் குறிப்புகளின் அடிப்படையில் வழங்கப்படும் சான்றிதழை ஆதாரமாக நீதிமன்றம் ஏற்க முடியும்.

இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 114(c)  ஒரு சங்கதியை அனுமானிப்பது குறித்து கூறுகிறது. அந்த வகையில் பொது ஊழியரால் ஒரு பதிவேட்டில் எழுதப்பட்டு அதனடிப்படையில் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட ஆவணமாக கருதி ஏற்றதில் தவறில்லை.

கிரகலட்சுமியின் வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், 3 சாட்சிகள் திருமணத்தை பதிவு செய்யும் பொழுது கையெழுத்திட்டுள்ளதால் அந்த சான்றிதழை இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 68 ன் கீழ் சாட்சிகளை விசாரித்து தான் நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்து திருமணச் சட்டம் பிரிவு 8(4) ன்படி ஒரு பொது ஊழியர் தன்னுடைய அலுவலக வேலையாக திருமண பதிவேட்டில் ஒரு திருமணம் குறித்த பதிவை எழுதுகிறார். அந்த வகையில் அது இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 74 ன்படி ஒரு பொது ஆவணமாக கருதப்படும். எனவே கிரகலட்சுமியின் முதல் திருமணச் சான்றிதழை இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 65(1) ன் கீழ் இரண்டாம் வகை சாட்சியமாக ஏற்றுக் கொள்ள முடியும்.

இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் " பிரகாஷ் சிங் தாகூர் Vs பாரதி" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பாரத்தால் முதல் திருமணத்தை மறைத்தது என்பது முக்கியமான விஷயமாக கருத வேண்டும். அந்த வகையில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 12(1)(c) ன்படி மோசடியாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. அவ்வாறு இந்த வழக்கில் கிரகலட்சுமி தனக்கு நடைபெற்ற முதல் திருமணத்தை மறைத்தது சட்டப்படி ஒரு முக்கியமான சங்கதியாகும். அதனால் பிரசாந்தின் ஒப்புதலை கிரகலட்சுமி மோசடியாகவே பெற்றுள்ளதாக இந்த நீதிமன்றம் தீர்மானிப்பதாக கூறி கிரகலட்சுமியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

C. C. A. NO - 1305/2009

V.D.கிரகலட்சுமி Vs T. பிரசாந்த்

2011-5-LW-CIVIL-948

Comments