புகைப் பழக்கம் பற்றிய சில உண்மைகள்…

பல கொடிய பழக்கங்களால் மனிதன் இன்று தன்னைத் தானே மாய்த்து கொண்டு வருகிறான். எந்தளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து, நோய்களுக்கு புது மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறதோ,அதே வேகத்தில் மனிதன் தீய பழக்கங்களால் தன்னை அழித்துக் கொள்ளும் கொடுமையும் அதிகரித்து வருகிறது.
மனிதனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப் பழக்கம்.  ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களிடையே கூட இப்பழக்கம் ஊடுருவி வருவதாக செய்திகள் கூறுகின்றன. அக்கொடிய பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்கவும், புகைப் பிடிக்கும் தன்னுடைய கணவன்மார்களையும் உறவினர் களையும் மற்றும் தம் குழந்தைகளையும் திருத்தவும் புகை பழக்கத்தின் பாதகங்கள் இங்கு விளக்கப்படுகின்றன.

பல்வேறு நோய்களை உருவாக்கி, உயிருக்கே உலை வைக்கும் புகையை பற்றிய சில உண்மைகள்…

1. ஒவ்வொரு முறை புகை பிடிக்கும்போதும், உங்கள் வாழ்நாளில் இருந்து 1 மணி நேரத்தை இழந்து கொண்டிருக்கிறீர்கள் (உதாரணமாக, ஒரு நாளைக்கு 5 சிகரெட் வீதம் ஒரு வாரத்திற்கு பிடிக்கும் புகை, உங்கள் மொத்த வாழ்நாளில் இருந்து 1 நாளை குறைத்து விடுகிறது).

2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயன பொருட்களும் அடங்கும்.

3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன. இதனால் இயற்கை மாசுபடுவதோடு, உங்கள் அருகில் உள்ள அப்பாவிகளும் நீங்கள் விடும் புகையால் பாதிக்கப்படுகின்றனர்.

4. புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடின் செறிவு 2-8 சதவீதம் உள்ளது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.

6. புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம்.

7. புகை பழக்கம் உள்ளவர்களுக்கு உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.

8. மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம். மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும். (புகை பிடிப்பவர்களின் குழந்தைகள் சரியாக படிக்காததற்கு நீங்களே காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்)

9. இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட மாரடைப்பு வரும். இளைஞர்கள் சிறு வயது முதலே “Passive Smoking” என்ற வகையில் புகை பிடிக்கும் அப்பாவின் அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.

10. எரிமுனையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக தீமையானது. அது அப்பாவிகளான உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை குலைக்கும். உங்கள் மனைவிக்கும் மாரடைப்பை ஏற்படுத்தும். உங்களை விட உங்களால் அடுத்தவர்களுக்கு கேடுகள் அதிகம் என்பதை உணருங்கள்.

புகை பிடிப்பதினால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது.

•∗ காச நோய்
•∗ நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்
•∗ இருதய நோய் மற்றும் குருதிக் (இரத்தக்) குழல் நோய்
•∗ புற்று நோய்
•∗ ஆண்மை குறைவிற்கான சாத்தியக் கூறுகள்
Smoking is Injuries to Health (புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது)
என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்ட பாக்கெட்டுகளிலி-ருந்து நாம் எடுத்து ஊதும் பீடி மற்றும் சிகரெட் தான் இவ்வளவு மாபாதகங்களை விளைவிக்கிறது.
புண்பட்ட மனதை புகைப்பிடித்து ஆற்றுவது என விதாண்டவாதம் பேசி ஊதி தள்ளுவதால் ஏற்படும் ரணங்களுக்கு எந்த மருந்தும், மாத்திரைகளும் அந்த ரணங்களை ஆற்றாது என்பது அறிவியல் உலகம் கூறும் நிதர்சனமான உண்மை.  எனவே தான் இத்தீமைக்கு எதிராக அரசுகளும்,தன்னார்வ அமைப்புகளும் உலகளாவிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
புகையிலை அதை உபயோகப்படுத்தும் 50 சதவீத மக்களை கொல்கிறது என்ற உண்மையை உலக சுகாதார மையம் (WHO) வெளியிட்டுள்ளது.  தற்போது உலக மக்கள் தொகையில் 1.3 பில்-யன் மக்கள் புகைப்பிடிப்பவர்கள் என்ற புள்ளி விவரத்தை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. இந்த கணக்குபடி பார்த்தால், உலகில் 650 மில்-யன் மக்கள் இக்கொடிய பழக்கத்தால் கொல்லப்படுவார்கள்.  எந்த போர்களும், இயற்கை பேரழிவுகளும், கொடிய விபத்துக்களும் ஏற்படுத்தாத மாபாதக்தை இந்த ஊதி தள்ளும் பழக்கம் ஏற்படுத்துகிறது என்றால், கல் நெஞ்சங்களை கரைய வைக்கும் இப்புள்ளி விவரம், புகைப்பிடிப்பவர்களின் நெஞ்சங்களை உறைய வைத்து இக்கொடிய பழக்கத்தை விட்டு ஒழிக்க வழிகோலுமா?
உடல் திடகாத்திரத்தை குறிக்கும் வண்ணம் கல்லையும் சாப்பிட்டு செமிக்க செய்யும் பருவம் என இளம் பருவத்தை பற்றி குறிப்பிடும் வழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனால், 20 வயதிற்கு உட்பட்டவர்கள் இனி சிகரெட் வாங்க முடியாது என உலகின் பல நாடுகளின் அரசாங்கங்கள் அறிவித்து இருப்பது புகை பிடித்த-ன் கொடுமையை உணர போதுமானது.

பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு உலகில் பல்வேறு நாடுகளில் தடை

யு கே மற்றும் ஜெர்மனி நாடுகளில் சிகரெட் வாங்குவதற்கு 16-18 வயது இருக்க வேண்டும் என அறிவிப்பு.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சிகரெட் வாங்குவதற்று 18-19 வயது இருக்க வேண்டும் என அறிவிப்பு.

வேஷக்காட்சிகளின் தொகுப்பான சினிமா தான் நிஜம் என்று பெரும்பாலோர் நம்புவதால், சினிமா நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கக்கூடாது என இந்திய அரசின் வேண்டுகோள்.

புகையிலை உபயோகத்தை கட்டுப்படுத்த, குறிப்பாக கல்லாதவர்களிடமும் ஏழைகளிடமும் தக்க விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என இக்கொடுமைக்கு எதிராக அரசாங்கங்களும் களம் இறங்கியுள்ளன.  இருந்தபோதிலும், மக்களை கவரும் விளம்பரங்களுடன் புகையிலை நிறுவனங்கள் விளம்பர சந்தையில், மக்களை சிறிது சிறுதாக அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன.

மிகக் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தும் புகைப்பழக்கத்தைப் பற்றி இஸ்லாமிய மார்க்கம் என்ன தான் சொல்கிறது?

“சிகரெட், பீடி, சுருட்டு என்று அனைத்து வகைப் புகைத்தலும் ஹறாம்!” என்பது இஸ்லாமிய உலக அறிஞர்கள் அனைவரினதும் ஏகோபித்த முடிவாகும்.
நபி(ஸல்) அவர்களது பணிகள் பற்றி அல்லாஹ் கூறும் போது;
“அவர்கள்தான் (எழுத்தறிவற்ற) உம்மி நபியான இத்தூதரைப் பின்பற்றுவார்கள். அவர் குறித்து எழுதப் பட்டிருப்பதைத் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் கண்டுகொள்வார்கள். அவர் அவர்களுக்கு நன்மையை ஏவித் தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கித் தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். மேலும் அவர்களது சுமையையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.” (7:157)
நபி(ஸல்) அவர்கள் நல்லவற்றை ஆகுமாக்குவார்கள்; கெட்டவற்றைத் தடுப்பார்கள். புகைத்தல் என்பது ஒரு கெட்ட நடத்தை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த வகையில் இது இஸ்லாமிய சட்டவாக்கத்தில் “ஹறாம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.
“(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்குச் (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப் பெரியதாகும்!” எனக் கூறுவீராக! மேலும், தாம் “எதைச் செலவு செய்வது?” என்றும் உம்மிடம் கேட்கின்றனர். “(தேவைக்குப் போக) மீத முள்ளதை!” எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.” (2:219)
மேற்படி வசனம் மதுபானத்தில் சில நன்மைகளும், பெரிய தீமைகளும் இருப்பதாகக் கூறுகின்றது. சில நன்மைகள் இருந்து, அதை விட அதிகத் தீமைகளிருந்தால் அது ஹறாம் என்றிருக்குமானால் தீமைகள் மட்டும் நிறைந்த, எந்த நன்மையுமற்ற சிகரெட்டின் நிலை என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!
தற்கொலைக்கு நிகர்:
சிகரெட்டின் நுணியில் நீங்கள் நெருப்பு வைக்கும் போதே அது உங்கள் உயிரிலும், உடலிலும் தீ மூட்டி விடுகின்றது.
இன்று இளவயது மரண விகிதாசாரம் அதிகரித்துச் செல்வதில் சிகரெட்டுக்குக் கூடிய பங்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் சிகரெட் மூலம் மரணத்தைத் தழுவுகின்றனர்.

ஒரு போட்டி நடத்தப்பட்டது:
ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து அந்தச் சிகரெட் முடியும் போது அதே சிகரெட்டில் இன்னுமொரு சிகரெட்டைப் பற்ற வைக்க வேண்டும். இப்படி “அதிக சிகரெட் பிடிப்பவர்கள் யார்” என்பதுதான் போட்டி. ஒருவர் 18 உம், மற்றவர் 17 உம் பிடித்து முறையே முதலாம், இரண்டாம் இடங்களைப் பிடித்தனர். மற்றவர்கள் இடைநடுவில் தோல்வியை ஏற்றுக்கொண்டனர். இந்தப் போட்டியின் பரிசுகளை வழங்குவதற்கு முன்னரே வெற்றியாளர்கள் இருவருக்கும் சிகரெட் மரணத்தைப் பரிசாக வழங்கி விட்டது. சராசரியாக ஒரு சிகரெட் ஒரு மனிதனது ஆயுளில் 11 செக்கன்களைக் குறைக்கின்றது எனக் கணிப்பீடுகள் கூறுகின்றன. எனவே, புகைத்தல் என்பது தற்கொலைக்குச் சமமானது.
“மேலும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்! (செலவு செய்யாமல்) அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள்! நன்மையும் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.” (2:195)
எனவே, இந்த அடிப்படையிலும் சிகரெட் “ஹராம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.
வீண்-விரயம்:
இஸ்லாம் வீண்-விரயம் செய்வதைத் தடுக்கின்றது. 10 ரூபா பணத்தை எடுத்து எந்த விதத்திலும் நன்மை நல்காத, தீமையைத் தரக் கூடிய சிகரெட்டை வாங்கி ஊதித் தள்ளுவதென்பது மிகப் பெரிய வீண்-விரயமாகும். ஒரு சிகரெட் 10 ரூபா என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் சராசரியாகக் குறைந்தது ஒரு நாளைக்கு 7 சிகரெட் குடிப்பதாக இருந்தால்..
ஒரு நாளைக்கு ” 70 ருபாய்
ஒரு வாரத்துக்கு ” 490 ருபாய்
ஒரு மாதத்திற்கு ” 2,100 ருபாய்
ஒரு வருடத்திற்கு ” 24,200 ருபாய்
பத்து வருடங்களிற்கு ” 242,000 ருபாய்
நாற்பது வருடங்களிற்கு ” 968,000 ருபாய்
இவ்வாறு பார்க்கும் போது சிகரெட்டின் விலை 40 வருடங்களிற்குக் கூட்டப்படாவிட்டாலும், சிகரெட் குடிப்பவர் குடிக்கும் எண்ணிக்கையைக் கூட்டாவிட்டால் கூட வருடத்திற்குச் சுமார் 242,000 ரூபா சிகரெட்டுக்குச் செலவாகின்றது. தனது பிள்ளையின் படிப்புக்குக் கூட ஒருவன் வருடத்திற்கு 25,000 செலவழிப்பதில்லையே! 10 வருடங்களிற்கு இதே கணக்கு என்று எடுத்துக்கொண்டால் கூட 250,000 அதிகமாகச் செலவாகின்றதே! இது வீண்-விரயமில்லையென்று கூற முடியுமா?
இதே வகையில் இருந்தால் 40 வருடங்களாகின்ற போது 10 இலட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்படுகின்றதே! இந்த வீண்-விரயத்திற்கு அல்லாஹ்விடம் என்ன பதில் கூறப் போகின்றீர்கள்?
“நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தான் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.” (17:27)
என்ற வசனத்தின் படி சிகரெட் குடிப்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாகின்றனரே! ஷைத்தானின் சகோதரனாக இருக்க உங்களுக்குச் சம்மதமா?
நாளை மறுமையில் ஒவ்வொரு மனிதனதும் பணத்தைத் தான் எப்படிச் சம்பாதித்தேன்? என்றும், எந்த வழியில் செலவழித்தேன்? என்றும் கணக்குக் காட்ட வேண்டும். 40 வருடங்கள் சிகரெட் குடித்த ஒருவன், “பத்து இலட்சம் ரூபாப் பணத்தைப் பற்ற வைத்து ஊதித் தள்ளினேன்!” என்று அல்லாஹ்விடம் கூற முடியுமா? அப்படிக் கூறி விட்டுத் தப்பி விடத்தான் முடியுமா? எனவே, உங்களை அழிக்கும்/உங்கள் பொருளை அழிக்கும் இந்தப் “புகை” எனும் பகைவனுடன் ஏன் இன்னும் உங்களுக்கு நட்புறவு? புகைத்தலைப் பகைத்தல் என்பது மார்க்கக் கடமை என்பதை உணர்ந்து உறுதியான முடிவை எடுங்கள்!

பிறருக்குத் தொல்லை:
“நல்ல முஸ்லிம் யார்?” என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “தன் கையாலோ, நாவாலோ பிறருக்குத் தீங்கிழைக்காதவனே சிறந்த முஸ்லிம்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(புகாரி)
ஒருவன் புகைப்பதால் அவன் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவன் ஊதித் தள்ளும் புகையைச் சுவாசிப்பவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றனர். ஒரு கர்ப்பிணி புகைத்தால் அவளது குழந்தையும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றது. வீட்டில் ஊதித் தள்ளும் ஊதாரித் தந்தையர்களால் குழந்தைகள் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்; மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய குழந்தைகள் வெகு விரைவாகப் புகைத்தலுக்கு அடிமையாகின்றனர். சில சிறுசுகள் தந்தை வீசும் பீடி/சிகரெட் துண்டுகளை எடுத்துத் தாமும் ஒரு முறை ஊதிப் பார்த்துக்கொள்கின்றனர். நீங்கள் ஒரு சிறந்த முஸ்லிமாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? அடுத்தவருக்குத் தீங்கிழைக்காத ஒரு சராசரி நல்ல மனிதனாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? பரவாயில்லை! உங்கள் மனைவியைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!
பொதுவாகப் பெண்களுக்கும், சிகரெட் குடிக்காதவர்களுக்கும் அந்த நாற்றம் பிடிக்கவே பிடிக்காது. வயிற்றைக் குமட்டிக்கொண்டு வரும். நீங்கள் இல்லறத்தில் ஈடுபடும் போது சிகரெட் நாற்றம் பிடிக்காமல் உங்கள் மனைவி வேண்டா வெறுப்புடன் வாழ்க்கை நடத்தினால் அது எவ்வளவு பெரிய கொடுமை என்று எண்ணிப் பாருங்கள்! வாழ்க்கையில் திருப்தியற்ற இத்தகைய பெண்கள் வேலி தாட்டினால் கமழும்(?) வாய்க்கும் முக்கிய பங்கிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!
வெங்காயமும், வெள்ளைப்பூடும்:
வெங்காயம். வெள்ளைப்பூடு. இவையிரண்டும் சிறந்த மருத்துவக் குணங்கொண்டவையாகும். இவற்றை உண்பதை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். எனினும் இவற்றைப் பச்சையாக உண்டவர், பல் துலக்காமல் பள்ளிக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (புகாரி)
ஏனெனில், வெங்காயம்-வெள்ளைப்பூடு சாப்பிட்டால் வாயில் வாடை வரும். அந்த வாடை அருகில் தொழுபவர்களுக்கு மட்டுமன்றி மலக்குகளுக்குக் கூட அவை வெறுப்பை உண்டுபண்ணுவதாகக் கூறினார்கள். அனுமதிக்கப்பட்ட வெங்காயம்-வெள்ளைப்பூட்டின் நிலையே இதுவென்றால் சிகரெட்டின் நிலை என்னவென்று நிதானமாகச் சிந்தியுங்கள்!

Comments