பள்ளி சான்றிதழ்களை தரமறுக்க முடியுமா - பாதியில் வேலையில் இருந்து நிற்பொருடைய சான்றிதழ்களை தராமல் வைத்திருக்க முடியுமா?

பள்ளி / கல்லூரிகளில் பணியில் சேரும் ஆசிரியர்களிடம் பள்ளி /கல்லூரி நிர்வாகம் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுடைய அசல் சான்றிதழ்களை பெற்று வைத்துக் கொண்டு, அந்த ஆசிரியர்கள் தங்களுடைய வேலையை ராஜினாமா செய்யும் போது நிர்வாகம் அவர்களுடைய சான்றிதழ்களை திருப்பித்தர மறுத்தால் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை மோசடி வழக்கு தொடர முடியுமா?

இந்த வழக்கின் மனுதாரர்கள் St. Johns senior Secondary School - Junior College (CBSE)  என்ற தனியார் பள்ளியில் சில ஆண்டுகள் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் ஆசிரியர்களாக அந்த பள்ளியில் சேரும்போது பள்ளி நிர்வாகம் அவர்களுடைய SSLC, +2, Degree ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களை ஒப்படைக்கும் படி கேட்டு வற்புறுத்தி பெற்றுக் கொண்டனர். அதனால் அசல் சான்றிதழ்களை ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகம் வசம் ஒப்படைத்து விட்டனர். இந்நிலையில் மேற்படி ஆசிரியர்கள் தங்களுடைய வேலையை 2011 ஆம் ஆண்டில் ராஜினாமா செய்து விட்டனர். வேலையை ராஜினாமா செய்தபின் மேற்படி ஆசிரியர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை திரும்ப தரும்படி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அவர்களுடைய அசல் சான்றிதழ்களை திருப்பித்தர மறுத்து விட்டது. ஆசிரியர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பள்ளி நிர்வாகத்திடமிருந்து அசல் சான்றிதழ்களை அவர்களால் பெற முடியவில்லை. அதனால் ஆசிரியர்கள் தனித்தனியாக காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி புகார் மனு கொடுத்தனர். ஆனால் அந்த புகாரின் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களான மனுதாரர்கள் தாங்கள் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடும் படி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

மனுதாரர்களின் மனுவிற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் பதிலுரை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் தங்கள் வசம் இருப்பதை ஒப்புக்கொண்டனர். ஆனால் இந்த ஆசிரியர்கள் பணிக்கு சேரும்போது பள்ளி நிர்வாகத்திடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அந்த ஒப்பந்தத்தின் படி ஒரு ஆசிரியர் அந்த கல்வியாண்டில் பாதியில் பணியிலிருந்து விலகிச் செல்ல விரும்பினால் அவர் 3 மாதங்களுக்கான சம்பளத்தை அந்த ஒப்பந்தத்தின்படி பள்ளி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும். அதற்காகத்தான் பள்ளி நிர்வாகம் அவர்களுடைய சான்றிதழ்களை தராமல் வைத்துள்ளது என்று கூறியிருந்தனர். மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களின் சான்றிதழ்களை வைத்திருப்பதை ஒரு குற்றச் செயலாக கருதி ஒரு வழக்கினை பள்ளி நிர்வாகத்தின் மீது பதிவு செய்ய முடியாது என்றும் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதியரசர் திரு. நாகமுத்து அவர்கள் விசாரித்தார். ஆசிரியர்களான மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு. P. N. பிரகாஷ் அவர்களும், பள்ளி நிர்வாகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரு. ஹிஸ்புல்லா பாஷா அவர்களும், அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் திரு. மகாராஜா அவர்களும் ஆஜராகி வாதிட்டனர்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் தன்னகத்தே வைத்துக் கொண்டிருப்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406 ன்படி தண்டனைக்குரிய குற்றம் என்று கூறி அதனால் மனுதாரர்கள் கொடுத்த புகாரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அவர் மாண்புமிகு உச்சநீதிமன்றம் " கிருஷ்ணகுமார் Vs இந்திய அரசு" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் "கேசவன் Vs மருத்துவ கல்வி இயக்குனர், சென்னை" என்ற வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஆகியவற்றை சுட்டிக்காட்டினார். மேலும் கேசவன் வழக்கில் "ஒரு பல்கலைக்கழகம் கூட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனிப்பட்ட ஒருவரின் சான்றிதழ்களை தன்வசம் வைத்திருக்கக் கூடாது" என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளதாக கூறினார்.

பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆசிரியர்களான மனுதாரர்கள் 3 மாத சம்பளத் தொகையை பள்ளி நிர்வாகத்திற்கு திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் திருப்பி செலுத்தினால் மட்டுமே அவர்கள் சான்றிதழ்களை திரும்ப பெற தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். இந்த மனுதாரர்கள் ஒப்பந்தத்தில் கண்டுள்ள நிபந்தனைகளின்படி பணத்தை திருப்பி செலுத்தாததால் அவர்களுடைய சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் தன்னகத்தே வைத்துக் கொள்வதற்கு உரிமை உள்ளது. ஒருவேளை அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை செல்லாது என்று மனுதாரர்கள் கருதினால் அவர்கள் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தங்களுக்கு உண்டான பரிகாரத்தை தேடிக் கொள்ள வேண்டும் என்று வாதிட்டார்.

இருதர‌ப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆசிரியர்களான மனுதாரர்களின் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் தன்னகத்தே வைத்திருப்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406 ன் கீழ் தண்டிக்கக்கூடிய குற்றத்திற்கான முகாந்திரம் உள்ளதால் காவல்துறையினர் மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்பது தன்னுடைய தீர்மானமான கருத்தாகும் என்றார். மேலும் மனுதாரர்களுக்குரிய பரிகாரத்தை உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் தேடிக் கொள்ளும் வழி இருப்பதனால் மட்டுமே ஒரு குற்றச் செயல் ஏற்படவில்லை என்று கூற முடியாது, குற்றவியல் நடவடிக்கை மற்றும் உரிமையியல் நடவடிக்கை ஆகிய இரண்டையும் சேர்த்து எடுக்க முடியும் என்பது தீர்மானிக்கப்பட்ட சட்டத்தின் நிலைப்பாடு என்றார். இந்த கருத்தை உச்சநீதிமன்றம் "Indian oil corporation Vs NEPC இந்தியா லிமிடெட் (2006-6-SCC-863)"  என்ற வழக்கில் கூறியுள்ளதாக கூறினார்.

மேலும் இந்த மனுதாரர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்குமிடையை ஒரு ஒப்பந்தம் உள்ளது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதியாகும் என்றும், இந்த வழக்கில் ஒரு ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாக ஒரு ஆசிரியர் அந்த கல்வியாண்டில் மத்தியில் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்தால் அந்த ஆசிரியர் 3 மாத சம்பளத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தப்படி இந்த மனுதாரர்கள் பணம் தரவேண்டிய இருந்தாலும் இந்த நிபந்தனையின் படி பள்ளி நிர்வாகம் மனுதாரர்களிடமிருந்து அந்த தொகையை வசூலிப்பதற்கான உரிமையை பெறுகிறது, ஆனால் என்னுடைய கருத்துப்படி மனுதாரர்களின் சான்றிதழ்களை விலை கொடுத்து மீட்கும்படி வைத்திருக்கக்கூடாது. பள்ளி நிர்வாகம் மனுதாரர்களின் சான்றிதழ்களை வைத்திருப்பது என்னை பொருத்தளவில் சட்டத்திற்கு புறம்பானதாகும். அந்த செயல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406 ன் படி ஒரு குற்றச் செயலாக கருதுவதற்கு முகாந்திரம் உள்ளது என்றார். மேலும் சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 6 ல் எந்தெந்த சொத்துக்களின் உரிமையை மாற்றம் செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது என்றும் அதன்படி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், நடத்தை சான்றிதழ்கள் ஆகிய சொத்துக்களின் உரிமையை மாற்ற முடியாது, உரிமை மாறுதல் செய்யக்கூடிய சொத்துக்களை மட்டுமே ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரிமை மாற்றம் செய்ய முடியும், உரிமை மாற்றம் செய்ய முடியாத ஒரு சொத்தை ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரிமை மாற்றம் செய்ய முடியாது, அப்படி ஒரு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது சட்டப்படி செல்லத்தக்கதல்ல, அப்படி செல்லத்தக்கதல்ல என்று அறிவிப்பதற்கு ஒரு வழக்கு அல்லது நீதிமன்ற விசாரணையோ தேவையில்லை என்று கூறி அதனால் பள்ளி நிர்வாகம் மனுதாரர்களின் சான்றிதழ்களை தன்னகத்தே வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகும் என்றும் கூறினார்.

மேலும் மேலே சொல்லப்பட்ட ஒப்பந்தத்தை ஒரு மதிப்பாவணமாக (Valuable Security) கருதி அதனடிப்படையில் பள்ளி நிர்வாகத்திற்கு அந்த சான்றிதழ்களின் மீது ஒரு உரிமை ஏற்படுமா? "என்று கேள்வி எழுப்பி அதனையும் பரிசீலனை செய்தார்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 30 ல் மதிப்பாவணம் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஆவணத்தின் மூலம் ஒரு உரிமை உருவாக்கப்பட்டிருந்தால்அந்த உரிமை சட்டப்படியான உரிமையாக மட்டுமே இருக்க வேண்டும்.

சட்டத்திற்கு மாறான சொல் குறித்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 43 ல் கூறப்பட்டுள்ளது. அதன்படி சட்டப்படி செய்யக்கூடாத ஒரு செயலை செய்வது என்பது சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்படும்.

எனவே இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்களின் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் தன்னகத்தே வைத்திருப்பது சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 6 ன் படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படும் ஒப்பந்தத்தை ஒரு மதிப்பாவணமாக கருத முடியாது. ஆகவே அந்த ஒப்பந்தம் பள்ளி நிர்வாகத்திற்கு மனுதாரர்களின் சான்றிதழ்களை திருப்பிக் கேட்டும் தராமல் எத்தனை காலத்திற்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளும் சட்டப்படியான உரிமையை பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்படுத்தி தராது என்றார்.

பள்ளி நிர்வாகம் தரப்பில், மனுதாரர்களின் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் தன்னகத்தே வைத்திருப்பது சொத்துரிமை மாறுதல் அடிப்படையில் அல்ல. எனவே சொத்துரிமை மாற்றுச் சட்டம் இந்த வழக்கிற்கு பொருந்தாது என்றார். அதற்கு பதிலளித்த நீதிபதி, இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, இருந்தபோதிலும் அந்த சான்றிதழ்கள் பள்ளி நிர்வாகத்தினரிடம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 405 ல் கூறப்பட்டுள்ளது போல் நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளதாக நான் இறுதியாக முடிவு செய்கிறேன் என்றார்.

நம்பி ஒப்படைத்தல் (Entrusted) என்கிற சொல் மற்றும் சொத்து என்பது குறித்து உச்சநீதிமன்றம் "குஜராத் மாநில அரசு Vs ஜஸ்வந்த் லால் (AIR-1968-SC-700)"  என்ற வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 405 ல் கண்டுள்ள ஒப்படைத்தல் என்கிற சொல் ஒரு சொத்து ஒப்படைத்ததை தொடர்ந்து வருவது மட்டுமில்லாமல் அந்த சொல்லானது அந்த சொத்தின் மீது ஆதிக்கம் பெற்றுள்ளதையும் குறிக்கும் என்றும் ஒப்படைப்பதற்கு முன்பாக அங்கு ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும்  சொத்தின் உரிமையாளர் குறித்து ஒரு நம்ப ஏற்படுத்தப்பட்டு அதனை சொத்தின் மீது ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் அல்லது வேறொருவரின் நன்மைக்காக ஒப்புக்கொண்டிருக்க வேண்டும் அல்லது உரிமையாளர் மற்றும் வேறொருவரின் நன்மைக்காக ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்,சட்டத்தின் அனைத்து நுட்பங்களையும் ஒப்படைத்தல் என்பது நிறைவேற்றியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்று தீர்ப்பு கூறியுள்ளதாக கூறினார்.

எனவே பள்ளி நிர்வாகம் மனுதாரர்களின் சான்றிதழ்களை திருப்பி தராமல் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பான ஒரு நேர்மையற்ற செயல் என்றும் அது நம்பிக்கை மோசடி குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும் கூறி மனுதாரர்கள் தரப்பில் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சிறிது காலம் செயலற்று தன்மையில் (Kept in abeyance)  வைக்கும்படியும், அதற்குள் பள்ளி நிர்வாகத்திடம் சுமூகமாக பேசி முடிந்தால் சான்றிதழ்களை திரும்ப வாங்கி மனுதாரர்கள் ஒப்படைப்பதாகவும் கூறினார். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்களுக்கு சான்றிதழ்கள் மட்டும் கிடைத்தால் போதும் என்றார். அதனால் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பள்ளி நிர்வாகம் 3 மாத சம்பளத்தை மனுதாரர்கள் 4 மாத காலத்திற்குள் தருவதாக ஒரு உறுதிமொழியை கொடுத்தால் சான்றிதழ்களை திரும்ப தருவதாக கூறுவதாகவும், அப்படி ஒரு உறுதிமொழியை மனுதாரர்கள் எழுதி தர விரும்பவில்லை என்றால் பள்ளி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிறப்பு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறினார். இதனை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.

அப்போது ஆஜரான மனுதாரர்களின் வழக்கறிஞர், இந்த மனுதாரர்களால் அப்படி ஒரு உறுதிமொழியை ஏழ்மையின் காரணமாக எழுதித் தர முடியாது என்றும், சட்டத்திற்கு புறம்பாக மனுதாரர்களின் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வைத்திருப்பதால் மனுதாரர்களுக்கு அரசு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மனுதாரர்கள் தற்போது ரூ. 3000 சம்பளத்துக்கு வேறு வழியில்லாமல் வேலை பார்த்து வருவதாகவும் கூறினார். மேலும் அவர் உச்சநீதிமன்றம் "R. D. செக்சேனா Vs பல்ராம் பிரஷாத் ஷர்மா" என்ற வழக்கில் கூறப்பட்டுள்ள தீர்ப்பின்படி பள்ளி நிர்வாகம் மனுதாரர்களின் சான்றிதழ்கள் மீது பற்றுரிமையை ( Lien) கொண்டாட முடியாது என்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை 21 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமை மற்றும் கட்டளை 19 ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்திற்கான உரிமை இந்த மனுதாரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்றும் பள்ளி நிர்வாகம் கேட்டபடி அந்த 3 மாத சம்பளத் தொகையை ஏழ்மையின் காரணமாகவே கொடுக்க முடியவில்லை என்றும் ஆனால் கொடுக்க கூடாது என்ற எண்ணம் மனுதாரர்களுக்கு இல்லை என்றார். இந்த வாதத்தையும் நீதிபதி பதிவு செய்துகொண்டார்.

பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரும்பவும் இந்த வழக்கை சமாதானமாக முடிக்க இன்னொரு வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று நீதிபதி திரும்பவும் ஒரு வாய்ப்பு வழங்கி வழக்கை ஒத்தி வைத்தார்.

ஆனால் அதன்பிறகும் பள்ளி நிர்வாகம் மனுதாரர்களின் சான்றிதழ்களை திருப்பித்தர மறுத்து விட்டது. அதனால் நீதிபதி மனுதாரர்கள் தரப்பில் கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
CRL. OP. NO - 9920/2012

A. ஜான்பால் மற்றும் பலர் Vs தமிழ்நாடு அரசு

2013-1-CRIMES-MADRAS-200

Comments