வரதட்சணை கொடுமை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்குகளில் கணவர் அல்லது கணவர் வீட்டார்களுக்கு தண்டனை அளிக்கும்போது எத்தகைய நெறிமுறைகளை நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்?
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 304(B) மற்றும் 306 ஆகியவற்றின் கீழான குற்றச் செயல்களை மெய்பிப்பதற்கு, எதிரி தன்னுடைய மனைவியை தற்கொலை செய்வதற்கு தூண்டியுள்ளார் என்ற சங்கதியை அரசு தரப்பில் கட்டாயமாக நிரூபிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் "கிஸோரிலால் Vs மத்திய பிரதேச அரசு (AIR-2007-SC-2457)" என்ற வழக்கில், தற்கொலைக்கு கணவர் தூண்டினார் என்கிற செயலை நேரடி அல்லது மறைமுக செயல்பாடுகளை கொண்டு அரசு தரப்பு நிரூபிக்க வேண்டும் என்றும் மனைவியை கணவர் கொடுமைப்படுத்தினார் என்ற சங்கதியை மட்டும் நிரூபித்தால் போதுமானதல்ல என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் "சுசில் குமார் Vs இந்திய அரசு (AIR-2005-SC-3100)" என்ற வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498(A) யின் நோக்கமானது வரதட்சணை கொடுமையை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதுதான். அந்த பிரிவை ஒரு கேடயமாகத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் "சத்தார் சிங் Vs ஹரியானா மாநில அரசு (AIR-2004-SC-2570)" என்ற வழக்கில், ஒரு சாட்சிக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்திராத சங்கதிகள் குறித்து அளிக்கப்பட்ட சாட்சியத்தை அடிப்படையாக கொண்டு தண்டனை அளிக்கக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் "M. சீனிவாசலு Vs ஆந்திர மாநில அரசு (AIR-2007-SC-3146)" என்ற வழக்கில், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 113(B) ல் கூறப்பட்டுள்ள அனுமானத்தை, வரதட்சணை இறப்புகள் வழக்கில், வரதட்சணை கொடுமைக்கு அந்த பெண் உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்து அது மெய்பிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்தப் பிரிவின் கீழான அனுமானத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் "மாத்ரூ Vs உத்திர பிரதேச அரசு (AIR-1971-SC-1050)" என்ற வழக்கில், வழக்கு எதிரிகள் தலைமறைவாகி விட்டதை ஒரு காரணமாக கருதி அவர்கள்தான் அந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்கிற முடிவுக்கு நீதிமன்றங்கள் வரக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் "பல்வந்சிங் மற்றும் பலர் Vs இமாச்சலப் பிரதேச மாநில அரசு (AIR-2009-SC-1129)" என்ற வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 304 மற்றும் 498(A) ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை அல்ல ஒரு பிரிவின் கீழ் எதிரி விடுதலை செய்யப்பட்டாலும் மற்றொரு பிரிவின் கீழ் அவருக்கு தண்டனை அளிக்க முடியும். ஒரு பெண்ணிற்கு திருமணமாகி, திருமண நாளிலிருந்து 7 ஆண்டுகளுக்குள் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டால் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 113(B) ன் கீழ் ஒரு அனுமானம் ஏற்படுகிறது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
இந்திய சாட்சிய சட்டம் பிரிவுகள் 113(A) மற்றும் 113(B) ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்து உச்சநீதிமன்றம் "பஞ்சாப் மாநில அரசு Vs இக்பால் சிங் மற்றும் பலர் (AIR-1991-SC-1532)" என்ற வழக்கில் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு கூறியுள்ளது.
"இந்த சமுதாயத்தில் ஏற்படுகிற வரதட்சணை இறப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக இத்தகைய குற்றங்கள் குடியிருக்கும் வீடுகளில் தனிப்பட்ட முறையில் நடைபெறுவதால் அந்த குற்றங்களை மெய்பிப்பதற்கு நேரடியான ஆதாரங்களை, சாட்சியங்களை பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. அதனால்தான் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் அந்தப் பெண் இறந்து போனதற்கான சில அடிப்படை சங்கதிகள் மெய்பிக்கப்பட்டிருந்தால், அரசு தரப்பு வழக்கை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இந்திய சாட்சிய சட்டத்தில் 113(A) மற்றும் 113(B) ஆகிய பிரிவுகள் சட்டம் இயற்றியவர்களால் சேர்க்கப்பட்டுள்ளது ".
அதேபோல் உச்சநீதிமன்றம்" தானு ராம் Vs மத்திய பிரதேச அரசு (2010-10-SCC-353)" என்ற வழக்கில் வரதட்சணை மரணம் குறித்த குற்றச் செயல்களை மெய்பிப்பதற்கு சில முக்கிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது. முதலாவதாக திருமணம் ஆன நாளிலிருந்து 7 ஆண்டுகளுக்குள் அந்தப் பெண் தற்கொலை செய்திருக்க வேண்டும். இரண்டாவதாக கணவரோ, கணவரின் குடும்பத்தினரோ அந்தப் பெண்ணை கொடுமைப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலைகள் ஒரு வழக்கில் இருந்தால் மட்டுமே அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய சாட்சிய சட்டம் பிரிவுகள் 113(A) மற்றும் 113(B) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள அனுமானத்தை சாதகமாக எடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே வரதட்சணை மரணம் வழக்குகளில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதை அரசு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தால் எதிரிகளுக்கு தண்டனை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. A. NO - 186/2010, DT - 26.2.2015
அமிர்த்துலால் லைலா தர்பாய் கொடாக் மற்றும் பலர் Vs குஜராத் மாநில அரசு
2015-1-MLJ-CRL-715
Comments
Post a Comment