ஒருவருக்கு எதிராக வரலாற்றுத் தாள் (History Sheet) அல்லது ரவுடித்தாள் (Rowdy Sheet) துவக்கப்பட காவல்துறையினர் என்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்?
வரலாற்றுத் தாள் என்பது காவல்துறை நிலை ஆணை எண் 746-ன்படி படிவம் எண் 111 ல் கூறப்பட்டுள்ள காரணங்களுக்காக ஏற்படுத்தப்படுவது ஆகும்.
ஒரு ரவுடித்தாள் என்பது காவல்துறை நிலை ஆணை எண் 749(2)-ன்படி படிவம் எண் 112 ல் கூறப்பட்டுள்ள காரணங்களுக்காக ஏற்படுத்தப்படுவது ஆகும்.
பொதுவாக ஒருவர் பெயரில் நிறைய குற்ற வழக்குகள் இருந்தால், தொடர் குற்றங்களை செய்து வந்தால் அந்த நபர் பெயரில் ஒரு ரவுடித்தாளை ஏற்படுத்துவதற்கு காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கோர வேண்டும். பின்னர் அந்த வேண்டுகோளை ஏற்று காவல் கண்காணிப்பாளர் அந்த நபர் மீது ரவுடித்தாளை ஏற்படுத்துவதற்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு பிறப்பிப்பதற்கு காவல் கண்காணிப்பாளர் சரியான காரணத்தை தனது உத்தரவில் குறிப்பிட வேண்டும். கண்காணிப்பாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்ட நபர் தனது பெயரை ரவுடித்தாள் அல்லது வரலாற்றுத் தாளில் இருந்து நீக்குமாறு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு தாக்கல் செய்யலாம்.
ஆனால் மேலே கண்ட விதிமுறைகளை காவல்துறையினர் சரியாக பின்பற்றுவதில்லை. ஒற்றை வரியில் உத்தரவை பிறப்பிக்கும் நிலைதான் காவல்துறையில் காணப்படுகிறது. இது சட்டப்படி தவறாகும்.
ஒரு வரலாற்றுத் தாள் அல்லது ரவுடித்தாள் ஒன்று ஒரு நபர் பெயரில் ஏற்படுத்தப்பட்டு அந்த நபர் மீது வரலாற்றுத் தாள் ஏற்படுத்தப்பட்ட அல்லது ஒரு ரவுடி என்ற முத்திரை குத்தப்படுமேயானால், அது அந்த நபர் மீது ஒரு அழியாத களங்கத்தை ஏற்படுத்திவிடும். அதோடு அவருடைய அடிப்படை உரிமைகளை பாதிப்பதாகவும் அமைந்துவிடும். குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளைகள் 21 மற்றும் 19(1) ல் வழங்கப்பட்டுள்ள சுதந்திரமாக வாழும் உரிமையை பறிப்பதாகவும் அமைந்துவிடும். அத்தகைய அடிப்படை உரிமைகளை எந்த அதிகாரிகளும் சரியான காரணங்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். சட்ட விரோதமாக அந்த உரிமைகள் அதிகாரிகளால் பறிக்கப்படுமேயானால் அந்த செயல் மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட ஒரு செயலாக கருதப்படும்.
உச்சநீதிமன்றம் "மேனகா காந்தி Vs இந்திய அரசு (AIR-1978-SC-597)" என்ற வழக்கில், ஒரு அரசின் நடவடிக்கையானது 3 அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டுமென கூறியுள்ளது. ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை கட்டுப்படுத்துவதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பாக அத்தகைய உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றுள்ள நபர் அந்த வழக்கின் சங்கதிகளை ஆழமாக ஆராய்ந்து அந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். உத்தரவானது நேர்மையாகவும், நியாயமான ஒன்றாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இது சட்ட விரோதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகவே கருதப்படும்.
ஆனால் காவல்துறை ஒரு நபருக்கு எதிராக வரலாற்றுத் தாள் அல்லது ரவுடித்தாள் ஆகியவற்றை பிறப்பித்து உத்தரவிடும் போது அவ்வாறு உத்தரவு பிறப்பிப்பதற்கான காரணங்களை குறிப்பிடுவதில்லை. இது எதனால் ஏற்படுகிறது என்றால் காவல்துறையினருக்கு சட்டம் தெரியாததே ஆகும்.
எனவே காவல்துறை தலைவர் ஒரு நபர் மீது காவல்துறை நிலை ஆணை எண் 746 மற்றும் 749 ன்படி வரலாற்றுத் தாள் அல்லது ரவுடித்தாள் ஆகியவற்றை ஏற்படுத்தும் போது காவல்துறையினர் முழு கவனத்தையும் செலுத்தி விரிவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என நீதியரசர் திரு. நாகமுத்து அவர்கள் தீர்ப்பு கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம்
W. P. NO - 44548/2012
மணிவண்ணன் Vs மாநில அரசுக்காக, மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் பலர்
2013-2-LW-CRL-300
Comments
Post a Comment