கு. வி. மு. ச பிரிவு 125(4)

கு. வி. மு. ச பிரிவு 125(4) ஆனது, மனைவி எந்தவிதமான காரணமும் இல்லாமல் கணவனை விட்டு பிரிந்து சென்று வாழ்ந்தால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை என கூறுகிறது.
ஆனால் கு. வி. மு. ச பிரிவு 125(4) ஆனது விவாகரத்து பெறாமல், திருமணம் நடைமுறையில் இருக்கும் போது ஜீவனாம்சம் கோருகிற மனைவிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு நீதிமன்றத்தால் மனைவி வேண்டுமென்றே பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்ட மனைவிக்கு பொருந்தாது.
உச்சநீதிமன்றம் "ரொக்காட் சிங் Vs திருமதி. ராமுந்திரி *2000-3-SCC-180*" என்ற வழக்கில்,
கு. வி. மு. ச பிரிவு 125(4) இல் இரண்டு பிரிவுகள் உள்ளதாகவும், முதல் பகுதியில் திருமணம் நடைமுறையில் இருக்கும் பொழுது, ஒரு மனைவி ஜீவனாம்சம் கோருவது குறித்து கூறப்பட்டுள்ளதாகவும், விவாகரத்து பெற்ற மனைவி கு. வி. மு. ச பிரிவு 125(1)(b) இல் கூறப்பட்டுள்ள விளக்கத்தின் படி விவாகரத்து கோரலாம் என்றும், விவாகரத்து பெற்ற மனைவி தன்னைத்தானே பராமரித்து கொள்ள இயலாத நிலையில், அவர் மறுமணம் எதுவும் செய்து கொள்ளாமல் இருந்தால், அவர் ஜீவனாம்சம் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
கு. வி. மு. ச பிரிவு 125(4) ல் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
"மனைவி எவரேனும் கற்பு தவறிய நிலையில் வாழ்ந்து வருவாரேயானால் அல்லது போதுமான காரணம் இல்லாமல் தன் கணவருடன் சேர்ந்து வாழ மறுப்பாரேயானால் அல்லது ஒருவருக்கொருவரான இசைவின் மூலம் தனித்தனியாக அவர்கள் வாழ்ந்து வருவார்களேயானால், அந்த மனைவிக்கு இந்த பிரிவின் படி, தன் கணவனிடமிருந்து படித்தொகை பெறுவதற்கு உரிமை கிடையாது "
மேற்கண்ட சட்டப் பிரிவின்படி மனைவி போதுமான காரணங்கள் எதுவுமில்லாமல் அவர் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவாரேயானால், கு. வி. மு. ச பிரிவு 125(4) ன் கீழ் அவருடைய கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு தகுதியற்றவர் ஆகிறார். மனைவி என்பதற்கான விளக்கத்தில், விவாகரத்து செய்யப்பட்ட பின் அல்லது தன்னுடைய கணவனிடமிருந்து விவாகரத்து பெற்ற பெண் ஆகிய இருவரும் வருவார்கள். ஆனால் அவர்களுக்கு மறுமணம் ஆகியிருக்கக் கூடாது. கு. வி. மு. ச பிரிவு 125(1) இல் மனைவி என்று கூறப்பட்டுள்ளதில் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியும் ஜீவனாம்சம் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட "ரொக்காட் சிங்" வழக்கில் உச்சநீதிமன்றம், ஒரு திருமணம் நடைமுறையில் இருந்து, கணவருடன் சேர்ந்து வாழ மறுப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லாமல் மனைவி அவருடைய கணவருடன் சேர்ந்து வாழ மறுக்கும்போது, அந்த மனைவி ஜீவனாம்ச தொகையை அவருடைய கணவனிடமிருந்து பெறுவதற்கு தகுதியற்றவர் ஆவார் என்று கூறியுள்ளது.
எனவே கு. வி. மு. ச பிரிவு 125(4) இல் கூறப்பட்டுள்ளவை ஒரு திருமணம் நடைமுறையில் இருக்கும் பொழுது, ஜீவனாம்சம் கோரி மனைவி மனுத்தாக்கல் செய்யும் வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தெளிவாக தெரிய வரும். தன் கணவனிடமிருந்து போதுமான காரணங்கள் இல்லாமல் பிரிந்து வாழும் மனைவி என்று கு. வி. மு. ச பிரிவு 125(4) இல் கூறப்பட்டுள்ளது, விவாகரத்திற்கு பிறகு ஜீவனாம்சம் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள மனைவிக்கு பொருந்தாது.
எனவே "பிரிந்து வாழ்தல்" என்கிற காரணத்தின் அடிப்படையில் விவாகரத்து பெற்ற மனைவியும் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் ஜீவனாம்சம் கேட்கலாம் என்றும், அத்தகைய வழக்குகளுக்கு கு. வி. மு. ச பிரிவு 125(4) இல் கூறப்பட்டுள்ளவை பொருந்தாது என்றும் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. RC. NO - 26/2015, DT - 5.8.2015
*R. Mathiyalagan Vs V. Ravichandhrika*
*2015-2-LW-CRL-725*

Comments