மைனர் குழந்தையின் தந்தை உயிருடன் இருக்கும்போது தாயை மட்டுமே தனிப் பாதுகாப்பாளராக நியமிக்க முடியாது என்கிற நிலையே 2016-ம் ஆண்டில் சட்டத்திருத்தம் செய்யப்படும் வரை இருந்தது. அப்போது சிங்கிள் பேரன்ட்டாக குழந்தையை வளர்க்கும் தாய்க்குச் சவாலாக இருக்கும் சட்டப் பிரிவுகளின் சிக்கலிலிருந்து அவரை விடுவிக்கும்விதமாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இது

மைனர் குழந்தையின் தந்தை உயிருடன் இருக்கும்போது தாயை மட்டுமே தனிப் பாதுகாப்பாளராக நியமிக்க முடியாது என்கிற நிலையே 2016-ம் ஆண்டில் சட்டத்திருத்தம் செய்யப்படும் வரை இருந்தது. அப்போது சிங்கிள் பேரன்ட்டாக குழந்தையை வளர்க்கும் தாய்க்குச் சவாலாக இருக்கும் சட்டப் பிரிவுகளின் சிக்கலிலிருந்து அவரை விடுவிக்கும்விதமாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இது.
Gita hariharan & Anr vs Reserve Bank of India & Anr (AIR 1998 supreme court 1149).
தாயும் தந்தையும் பிரிந்து வாழ்கின்றனர். டெல்லி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில், ‘குழந்தைக்கு நான் மட்டும்தான் இயற்கையான பாதுகாப்பாளர். என் அனுமதியில்லாமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது’ என்று குழந்தையின் தந்தை வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் மைனர் மகனின் பெயரில் ஒரு தொகையை தாய் வங்கியில் முதலீடு செய்தார். மகனுக்குப் பாதுகாப்பாளராகத் தனது பெயரை தாய் எழுதி அனுப்பினார். `தாய் கார்டியன்' என்பதை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. கார்டியனாக தந்தையின் கையெழுத்து வேண்டும் என அவரது விண்ணப்பத்தைத் திருப்பியனுப்பியது. தாய், கீழமை நீதிமன்றத்தை நாடினார். அங்கு சாதகமான தீர்ப்புக் கிடைக்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடினார்
தந்தையின் ஆதரவின்றி முழுக்க முழுக்க தாயின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கான உரிமையை நிலைநிறுத்தும் விதமாக, தீர்ப்பை வழங்கியது நீதிமன்றம். ‘இந்து இளவர் மற்றும் பாதுகாப்பாளர் சட்டம் 1956 (Hindu Minority and Guardianship Act)-ன் பிரிவு 6-ன்படி, குழந்தையின் தந்தை இயற்கையான கார்டியன். தந்தைக்குப் பின் தாய் என்பதை, தந்தை உயிரோடு இல்லாமல் இருந்தால் தாய் கார்டியன் ஆவார் என்று புரிந்துகொள்கின்றனர். தந்தையானவர் தனது கடமை மற்றும் பொறுப்புகளிலிருந்து விலகி குழந்தைப் பராமரிப்புக்கு எந்தவித உறுதுணையும் புரியாதவராக இருக்கிறார் என்றால் தந்தை உயிரோடு இருந்தாலும், மைனர் பிள்ளைக்குத் தாய் தனி கார்டியனாக இருக்க முடியும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிங்கிள் பேரன்டாக குழந்தையை வளர்க்கும் பெண்களுக்கு உற்சாகம் அளிக்கும்விதமாக இந்தத் தீர்ப்பு அமைந்தது.

Comments