ஒத்தி வீடு நல்லதா? வாடகை வீடு நல்லதா? -

இன்றைய தேதிக்கு வேலை காரணமாக சொந்த ஊரை விட்டு பெரிய ஊர்களுக்கு இடம்பெயர்வது சகஜமாகி விட்டது. இப்படி மாறும்போது பலரும் வாடகை வீட்டிலேயே தஞ்சமடை கிறார்கள். ஒவ்வொரு மாதமும் வாடகை தர விருப்பம் இல்லாதவர்கள் லீஸ் எனப்படும் குத்தகைக்கு வீட்டை எடுக்கின்றனர். ஆனால், வாடகை வீடு, குத்தகை வீடு – இந்த இரண்டில் எது பெஸ்ட் என்கிற கேள்வி இன்றைக்கும் பலருக்கு இருக்கிறது. முதலில் வாடகை வீட்டில் உள்ள சாதகமான அம்சங்களைப் பார்ப்போம்.
வாடகை வீடு – சாதகம்!
=============================================================
1. ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் ஒரு மாத வாடகையை மட்டும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்துவிட்டு குடியேறி விடலாம். அதோடு வாடகைக்கு வீடு பிடிப்பது எளிமையான விஷயமும்கூட. ஆனால், ஒரு மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக வாங்கும் வீட்டுக்காரர் தமிழகம் முழுக்க தேடினாலும் கிடைக்க மாட்டார். திருநெல்வேலியில் பத்து மாதம், சென்னை மற்றும் கும்பகோணத்தில் ஐந்து மாதம், திருப்பூரில் ஆறு மாதம் என ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமாக அட்வான்ஸ் வாங்கப்படுகிறது.
2. மாதாமாதம் வாடகை கொடுக்க வேண்டும் என்பதால் பெரிய தொகை கையில் இருக்க வேண்டும் என்பதில்லை.
3. வீடு பிடிக்கவில்லை எனில், ஒன்றிரண்டு மாதங்களில் அட்வான்ஸை திரும்பப் பெற்று வீட்டை காலி செய்துவிடலாம்.
வாடகை வீடு – பாதகம்!
=============================================================
1. வீட்டு ஓனர் எப்போது வேண்டுமானாலும் காலி செய்யச் சொல்லலாம்.
2. சட்டப்படி ஒரு மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாக யாரும் வாங்குவதில்லை.
3. மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் என வாடகை தவிர பெரிய தொகையையும் ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டியிருக்கும்.
லீஸ் (ஒத்தி) வீடு – சாதகம் !
=============================================================
1. மாதா மாதம் வாடகை தர வேண்டும் என்கிற பிரச்னை இல்லை. லீஸ் தொகையை ஒப்பந்தம் முடிந்ததும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
2. லீஸுக்கு வீடு தருகிறவர்கள் அதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகையை அவசரத் தேவைக்கோ அல்லது பிசினஸுக்கோ பயன்படுத்து பவர்களாகவே இருப்பார்கள். இந்த அவசரத்தைப் பயன்படுத்தி கொஞ்சம் குறைவான தொகைக்கு லீஸில் வீடு எடுக்க முடியும்.
லீஸ் (ஒத்தி) வீடு – பாதகம் !
=============================================================
1. வாடகை வீட்டுக்கு வாரக் கணக்கில் தேட வேண்டும் என்றால், லீஸ் வீட்டுக்கு மாதக் கணக்கில் தேட வேண்டி இருக்கும். ஏதோ ஒரு அவசரத் தேவை, வெளிநாட்டில் செட்டிலாக நினைப்பவர்கள் தான் இப்படி வீட்டை லீஸுக்கு விடுகிறார்கள்.
2. லீஸ் தொகை கொடுத்த அளவுக்கே திரும்பக் கிடைக்குமா என்பது சந்தேகமே. வீட்டில் ஆணி அடித்திருக்கிறீர்கள், மீண்டும் பெயின்ட் அடிக்க வேண்டும் என்று சொல்லி பாதிப் பணத்தை திரும்ப எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்.
3. லீஸ் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று கணக் கிட்டுதான் லீஸ் தொகையை நிர்ணயிக் கிறார்கள் வீட்டின் ஓனர்கள். எனவே, லீஸ் தொகை ஒரு சிறிய வீட்டை விலைக்கு வாங்கும் தொகையாக இருக்கிறது.
உதாரணமாக, இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டின் வாடகை மாதம் ரூ.10,000 என்றால் வீட்டுக்கு லீஸ் தொகையாக ரூ.15 லட்சம் வரை கேட்கிறார்கள். இந்த 15 லட்சம் ரூபாயை வங்கியில் 8% வட்டி கிடைக்கும் விதத்தில் டெபாசிட் செய்தால், ஆண்டுக்கு 1,20,000 ரூபாய் கிடைக்கும். (வங்கி வட்டிக்கு லீஸ் தொகை கணக்கீடு அட்டவணை 1-ல்)
இதுவரை வாடகை வீடு, லீஸ் வீடு சாதக, பாதகங்களை பார்த்து விட்டோம். இனி யாருக்கு எது பொருந்தும் என்பதைப் பார்ப்போம்.
வாடகைக்கு வீடு விடுகிற பலரும் இப்போது சட்டப்படி நடந்துகொள்வதில்லை. 11 மாதங்களுக்கு மட்டுமே வாடகை ஒப்பந்தம் போடுகிறார்கள். 12 மாதம் வாடகைக்கு விட்டால், அதை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதை தவிர்க்கவே, இந்த 11 மாதம் ஒப்பந்தம். குறுகிய காலத்தில் வீட்டை வாடகைக்கு விடுவதால், வாடகை வீட்டுக்காரர்கள் எப்போது வீட்டை காலி செய்யச் சொல்வார்களோ என்கிற பதைபதைப்பில் இருப்பார்கள். லீஸுக்கு வீடு எடுத்துவிட்டால், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வீடு மாறவேண்டிய அவசியம் இருக்காது.
ஆனால், லீஸுக்கு வீடு எடுக்க வேண்டுமெனில் பெரிய தொகை வேண்டும். மாதச் சம்பளம் வாங்குகிற பலரால் இந்த பெரிய தொகையை ஏற்பாடு செய்து தரமுடியாது. ஆனால், ஓரளவுக்கு பணத்தை சேர்த்து வைத்திருந்தால் அல்லது பெரிய தொகை ஒன்று எதிர்பாராத விதமாக கிடைக்கும்பட்சத்தில் அதை லீஸுக்கு தந்து வீடு எடுக்கலாம்.
அதேபோல, லீஸுக்கு விடுகிறவர்கள், கிடைக்கும் தொகையை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்தே அது லாபகரமாக இருக்குமா, இல்லையா என்பது தெரியும். உதாரணமாக, 800 சதுர அடி இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு ஃப்ளாட்டுக்கு மாதம் ரூ10,000 வாடகை என்றால் ஆண்டுக்கு 1,20,000 ரூபாய் கிடைக்கும். இந்த ஃப்ளாட்டுக்கு ரூ.15 லட்சம் லீஸ் தொகை கொடுத்து, அதை அப்படியே வங்கி டெபாசிட்டில் தொடர்ந்து 5 வருடத்துக்கு (கிடைக்கும் வட்டியைகூட அதிலேயே மறுமுதலீடு செய்ய வேண்டும்) 8 சதவிகித வட்டிக்கு முதலீடு செய்தால், ரூ.22,04,000 கிடைக்கும். ஆக வருடத்துக்கு ரூ.1,20,000-க்கு பதில் இரண்டாவது ஆண்டிலிருந்தே கூடுதலான தொகை கிடைக்கத் தொடங்கிவிடும்.
மேற்கூறியபடி லீஸ் தொகையை வங்கி டெபாசிட்டில் 9 ஆண்டுகள் முதலீடு செய்திருந்தால் 9-வது ஆண்டின் இறுதியில் முதலீடு செய்யப்பட்ட தொகை இரட்டிப்பாகும். (பார்க்க அட்டவணை 2)
வீட்டை லீஸுக்கு வாங்கும் நமக்கும் மேற்கூறிய உதாரணம் பொருந்தும். மொத்தமாக, 15 லட்சம் ரூபாயை வீட்டு ஓனருக்கு கொடுத்துவிட்டு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு வீட்டு வாடகை உயர்வு பிரச்னையிலிருந்து தப்பித்து விடலாம். உதாரணமாக, 10,000 ரூபாய் வாடகை வசூலிக்கும் வீட்டில் ஆண்டுக்கு 6% வாடகை உயர்த்துகிறார்கள் என்றால் 10 ஆண்டு முடிவில் 17,908 ரூபாயாக இருக்கும்.
எப்படி பார்த்தாலும் நீண்ட காலத்துக்கு (9 – 10 வருடத்திற்கு) லீஸுக்கு வீடு எடுத்து, அந்த தொகையை வீட்டு ஓனர் வங்கியில் கூட்டு வட்டி முறையில் டெபாசிட் செய்தால் நிச்சயம் 9 – 10 ஆண்டு முடிவில் இரண்டு மடங்காகிவிடும்.எனவே, வங்கியிலோ அல்லது உறவினர்களிடமோ வட்டிக்கு கடன் வாங்காமல் பெரிய தொகையை திரட்ட முடியும் என்பவர்கள் லீஸுக்கு வீடு எடுப்பது நல்லது.
ஒருவேளை வட்டிக்கு கடன் வாங்கித்தான் லீஸ் தொகை கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் லீஸுக்கு எடுக்கும் வீட்டின் மாத வாடகையைவிட 20% குறைவாக வட்டித் தொகை இருப்பது போல் பார்த்துக் கொள்ளவும். அப்படி வட்டிக்கு பணம் கிடைக்கிறது என்றால் தாராளமாக வட்டிக்கு கடன் வாங்கி லீஸுக்கு வீடு எடுக்கலாம்.
ஆனால் எந்த வங்கியிலும் தனிநபர் கடன் 14 சதவிகிதத்துக்குக் கீழே குறைந்து கிடைப்பதில்லை. இந்தலீஸ் தொகையை திரட்ட முடியாதவர்கள் வாடகை வீட்டை தேர்வு செய்வதே நல்லது.

Comments