பட்டா பெயர் மாற்றம்..


.
விவசாய நிலம், வீடுகள், வீட்டுமனைகள், கட்டிடங்கள் போன்றவற்றை வாங்கும்போது அவற்றின் உரிமையாளர் பெயரை முறைப்படி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு பட்டா மாறுதல் என்று பெயர்.
.
ஏனெனில் நீங்கள் வாங்கிய சொத்துக்கு உரிமையாளராக இருப்பவர் பெயர் பட்டாவில் அப்படியே இருக்கும். பத்திரப்பதிவு செய்யும்போது உங்கள் பெயருக்கு சொத்தை மாற்றினாலும் பட்டாவுக்கும் விண்ணப்பித்து உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும்.
.
அப்படி பட்டா பெற்றால் மட்டுமே அது உங்கள் சொத்து என்பது முழுமையாகும். ஏனென்றால் பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் வாங்கிய சொத்து பழைய உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து பட்டா இருக்கும் என்பதால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.
.
முக்கியமாக நீண்டநாட்களாக பட்டா பெறாமல் இருந்தால் அவர் அந்த பட்டா மூலம் நீங்கள் வாங்கிய சொத்துக்கு உரிமை கொண்டாட நேரிடலாம்.
.
நீங்கள் சொத்தின் உரிமையாளரிடம் இருந்து சொத்தின் ஒருபகுதியை மட்டும் வாங்கி இருந்தால் அவர் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்யும்போது அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம்.
.
அதாவது நீங்கள் பட்டா பெறாமல் இருப்பதால் தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது என்று சொல்லலாம்.
ஆகையால் சொத்து வாங்கியதும் பட்டாவுக்கு விண்ணப்பித்து விடுவது நல்லது. அத்துடன் நீங்கள் வாங்கிய சொத்துக்குரிய வரியை தொடர்ந்து செலுத்தி வருகிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.
பழைய உரிமையாளர் உங்கள் சொத்துக்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன் மூலம் கூட சொத்துக்கு சொந்தம் கொண்டாடும் நிலை ஏற்பட்டு விடலாம்.
.
அதாவது அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அந்த சொத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும். அப்படியிருக்கும்போது நாம் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்யும்போது பிரச்சினை ஏற்படும்.
.
எனவே பட்டா உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா? நீங்கள்தான் அதற்குரிய வரியை செலுத்தி வருகிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்வது முக்கியம். மேலும் பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாது.
..
பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர் என்ற நிலை ஏற்பட்டுவிடும். ஒருவேளை அரசாங்கம் உங்கள் நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவருக்குத்தான் வழங்கும் நிலையும் உருவாகும்.
.
அத்துடன் சொத்து வாங்கிய உடனேயே பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் செய்வதன் மூலம் இன்னொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டிவரும்.
.
சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் இறந்து விட்டால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு தேவையில்லாத அலைச் சலையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டிவரும். இறந்தவருடைய இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் தேவைப்படும்.
.
அதற்கு நீங்கள் அவருடைய வாரிசுகளை நாடவேண்டி இருக்கும். அந்த சமயத்தில் வாரிசுகள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவித்தால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது மேலும் தாமதமாகக்கூடும்.
..
எனவே பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து அதை வாங்கிவிடுவது நல்லது.

Comments