பெண்களுக்கு அவசியம் பொது இடங்களில் கழிப்பறை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் ---உயர் நீதிமன்றம்

No automatic alt text available.
மும்பையிலிருந்து வெளிவரும் மிலுன் சர்யாஜனி என்கிற பத்திரிகையில் பணியாற்றியவர் தொடர்ந்த வழக்கு
இந்திய அரசியலமைப்பு சாசனம், ஷரத்து 47, பொதுமக்களின் சுகாதாரத்தில் அக்கறைகொள்ள வேண்டியது அரசின் கடமை என்று கூறுகிறது. முனிசிபல் கார்ப்பரேஷன் (மாநகராட்சி) அலுவலர்களின் கடமைகள் என்று, மாநில அளவில் தனிச்சட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று, கழிப்பறைப் பராமரிப்பு. பொது இடங்களில் பெண்களுக்கு அவசியம் கழிப்பறை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று ஷரத்து 226-ன் கீழ் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறையையும் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களையும் பட்டியலிட்டது. அதன்படி...
* தன்னார்வத் தொண்டு நிறுவனங் களுடன் இணைந்து அனைத்து முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலர்களும் கழிப்பறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இத்திட்டத்தை அமல்படுத்தத் தனிப்பட்ட குழு அமைக்க வேண்டும். அக்குழுவுக்கு முனிசிபல் கமிஷனர் தலைமை வகிப்பார். முனிசிபல் அலுவலகத்தில் இன்ஜினீயர், இதர அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இருந்து பெண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு பொறுப்பு அலுவலர் ஆகியோரும் இடம்பெறுவார்கள். அனைத்து கார்ப்பரேஷன் அலுவலகங்களிலும் இந்த கமிட்டி அமைக்க வேண்டும்.
* இந்தக் கழிப்பறைகள் பெண்களுக்கு அத்தியாவசியமான இடங்களில் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. தனியார் - அரசு என இருதரப்பின் கூட்டாண்மையில் இத்திட்டம் செயல்பட வேண்டும். பராமரிப்பதற்கு அதைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம். வெளியிடங்களுக்குப் பயணிக்கும் பெண்கள் எளிதாக அடையாளம் காணும்படியாக பிரதான சாலைகளில், பூங்காக்கள் அருகில், ஆட்டோ ஸ்டாண்டு, பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என்று பெண்களின் தேவையை ஆய்வு செய்த பின் அந்தந்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கழிப்பறை கட்ட வேண்டும். கழிப்பறைகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்காது என்று கருதினால், `இ-டாய்லெட்’டுகளையும் பரிந்துரைக்கலாம்.
* இந்தக் கழிப்பறை பெண்கள் எளிதில் பயன்படுத்தும் விதமாகவும், நகரின் முக்கிய இடங்களிலும் அமைக்கப்படுவது அவசியம். மின்சாரம், தண்ணீர் வசதி மற்றும் அழகியலோடு அமைக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக மின்சாரத்தைச் சேமிக்கும் வகையில் சோலார் வசதிகளையும் செய்துகொள்ளலாம். காற்றோட்ட வசதி, இயற்கையான வெளிச்சம் உள்ளபடியும் அதேநேரம் பெண்களின் பாதுகாப்புக்கு குந்தகமில்லாம லும் தனி யூனிட்டாக அமைக்க வேண்டும். ஆண்கள் கழிப்பறைக்கும், பெண்கள் கழிப்பறைக்கும் இடையில் குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும்.
* சோப் விநியோகம், குப்பைத் தொட்டி, கை துடைக்கும் பேப்பர், டிரையர், சானிட்டரி நாப்கினுக்கான குப்பைத்தொட்டி போன்ற வசதிகளும் இருக்க வேண்டும். கட்டணம் செலுத்தி உபயோகிக்கும் கழிப்பறை என்பதால், சானிட்டரி நாப்கின் விற்பனை செய்யும் வசதியும் இருக்க வேண்டும். இந்தக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய நியமிக்கப்படும் சுகாதாரப் பணியாளருக்குத் துடைப்பம், பினாயில், குப்பைக்கூடை ஆகியவை வழங்கப்பட்டிருக்க வேண்டும். டிஷ்யூ பேப்பருக்கான குப்பைத்தொட்டி, சானிட்டரி நாப்கின் குப்பைத்தொட்டி எனத் தனித்தனியாகப் பராமரிக்க வேண்டும். கழிப்பறையைப் பயன்படுத்துவோருக்கு, அதை உபயோகிக்கும் முறையை விளக்கும் போர்டு அங்கே வைக்கப் பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, சானிட்டரி நாப்கின்களை அதற்குரிய குப்பைத்தொட்டியில் மட்டுமே போட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். பயன்படுத்திய பின் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். டாய்லெட்டை ஈரமின்றி வைக்க வேண்டும்.
* கழிப்பறையைச் சுத்தம் செய்யப் பெண் ஊழியர் மற்றும் பாதுகாப்புக்காகப் பயிற்சி பெற்ற பெண் செக்யூரிட்டியை நியமிக்க வேண்டும். அவர்கள் சீருடை மற்றும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். கழிப்பறையைச் சுத்தம் செய்வது பொதுமக்களின் கூட்டத்தைப் பொறுத்துத் தீர்மானிக்கப்பட வேண்டும். சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சுத்தப்படுத்த வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யும் நேரத்தை வெளிப்பக்கம் அறிவிப்புப் பலகையில் எழுத வேண்டும்.
* கழிப்பறைகள் பராமரிக்கப்படும் விதத்தை மாநகராட்சியைச் சேர்ந்த அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பை உறுதிப்படுத்த ‘இன்ஸ்பெக்‌ஷன் கார்டு’ கழிவறைகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பயனாளி களின் விகிதத்தை அறிய ரெஜிஸ்டர் அல்லது பில்லிங் சிஸ்டம் இருக்க வேண்டும். டாய்லெட் பயன்படுத்தியவர்கள் விவரம் மற்றும் கட்டண விவரமும் இடம்பெற வேண்டும்.
* கழிப்பறையின் உள்பக்கம் மட்டுமின்றி கழிப்பறையைச் சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். வெளிப்பக்கம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்ற நடவடிக்கைகள் ஏற்படாமல் தடுக்க இயலும். சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு அவுட்சோர்ஸிங் செய்துகொள்ளலாம். இரவு நேரங்களில் கழிப்பறை இருக்கும் இடத்தை எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரப் பலகையை மெயின் ரோட்டில் வைக்க வேண்டும்.
* கழிப்பறையை உபயோகிப்பதற்கான கட்டணத்தை மாநகராட்சி நிர்ணயம் செய்துகொள்ளலாம். அந்தக் கட்டணம் அனைத்துத் தரப்பு பெண்களும் எளிதாகக் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் கழிப்பறையை உபயோகிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கழிப்பறையின் பராமரிப்பு நேரத்தை முகப்பில் எழுதி வைக்க வேண்டும்.
* கழிப்பறை சுத்தமில்லாமல் இருந் தாலோ, தண்ணீர் வராமல் இருந்தாலோ, பைப்புகள் உடைந்திருந்தாலோ புகார் அளிக்க டோல் ஃப்ரீ எண், வலைதளம், புகார் எழுதிச் சமர்ப்பிக்கும் இடம் போன்ற விவரங்களை வெளியிட வேண்டும். குறிப்பாக, அவசரக் காலங்களில் தொடர்புகொள்ள வேண்டிய எண்ணை எழுதிவைக்க வேண்டும். புகார் கொடுத்த பின் எடுத்த நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கழிப்பறை வசதிகள் எங்கெங்கு உள்ளன என்று சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணம் செய்யும் பெண்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் பதிவிட வேண்டும். செய்தித் தாள்கள், எலெக்ட்ரானிக் மீடியாவிலும் தொடர்ந்து விளம்பரம் செய்ய வேண்டும்.
மேற்சொன்ன அனைத்தும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வரையறைகள்.
இப்போதைய நிலவரப்படி கழிப்பறை அமைக்க மும்பை நெடுஞ்சாலைகளில் 96 இடங்களைத் தேர்வு செய்திருப்பதாக மும்பை மாநகராட்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி மற்ற மாநிலங்களின் அரசுகளும் இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு பொதுக்கழிப்பறை அவசியம் இருக்க வேண்டும். ‘வெளியிடங்களில், கழிப்பறைகளைத் தேடிப் பெண்களோ குழந்தைகளோ சிரமப்பட வேண்டாம். அருகில் இருக்கும் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட்டுகளில் உள்ள கழிப்பறைகளைக் கட்டணமில்லாமல் உபயோகித்துக் கொள்ளலாம்’ என்று டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கு டெல்லியில் உள்ள ஹோட்டல் சங்கங்களும் ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலை இந்தியா முழுவதும் உருவானால் கழிப்பறைச் சங்கடங்களில் இருந்து பெண்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.

Comments