பிறப்புச் சான்றிதழ் கேட்கும்போதும் தந்தையின் பெயரைக் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது’ திருமணம் செய்துகொள்ளாமல் பிறந்த குழந்தை... உரிமை என்ன?

திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொண்ட பெண், தன் குழந்தைக்குப் பாதுகாவலர் ஆவதற்கான உரிமை குறித்துப் புரிந்துகொள்ள ABC vs NCT Delhi SPL-NO 28367 of 2011 என்ற வழக்கைப் பார்ப்போம்.
திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு குழந்தைக்குத் தாயான கிறிஸ்தவப் பெண் ஒருவர், தனது வங்கிச் சேமிப்பு, காப்பீட்டுப் பத்திரம் ஆகியவற்றில் நாமினியாக தனது மைனர் மகனை நியமிக்க விரும்பினார். ‘குழந்தையின் தந்தை விவரத்தைத் தெரியப் படுத்துங்கள் அல்லது நீதிமன்றத்தின் மூலம் குழந்தைக்கு நீங்கள்தான் கார்டியன் என்பதற்கான சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்’ என்ற அறிவுறுத்தலுடன் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
`இல்லெஜிடிமேட் குழந்தைக்குத் தாய்தான் முதல் காப்பாளர்' என்று இந்து காப்பாளர் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. வழக்குதாரர் கிறிஸ்தவர் என்பதால், ‘கார்டியன் அண்டு வாட்ஸ் சட்டம் 1860’ பிரிவு 7-ன் கீழ், தன் மைனர் மகனுக்குத் தன்னை கார்டியனாக நியமிக்க நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். காப்பாளராக நியமிக்க வேண்டும் என்றால் அதற்கென பிரத்யேக வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்று, கார்டியனாக இருக்கப்போகிறவர் அந்த விவரத்தைப் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும். அதனால் அவர் நாளிதழில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதிலும், மகனின் தந்தை பற்றிய விவரத்தைத் தெரிவிக்கவில்லை. குழந்தையின் பயலாஜிக்கல் தந்தையானவர் வேறு திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார்.
வருங்காலத்தில், அவர் அந்தக் குழந்தைக்குத் தான் தந்தையில்லை என்று சொன்னால், அது குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற அந்தப் பெண் ஒத்துழைக்கவில்லை. கீழமை நீதிமன்றம் மட்டுமல்ல, அவரது கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றமும் நிராகரித்துவிட்டது.
பின் அவரின் நியாயமான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. குழந்தைக்குத் தனி பெற்றோராக இருப்பவர்கள் மற்றும் திருமணம் செய்துகொள்ளாமல் தாயானவர்களுக்கு இந்தத் தீர்ப்பு உதவியாக இருக்கும்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் விக்ரம் ஜித் சென் மற்றும் அபய் மனோகர் கொண்ட அமர்வு, வெளிநாட்டு நீதிமன்றங்களின் நடைமுறைகளை விளக்கி மேற்கோள் காட்டியது. ‘திருமணம் செய்துகொள்ளாமல் தாயானவர்கள், தனிப் பெற்றோராகக் குழந்தையை வளர்க்கும் தாய் ஆகியோர் விரும்பாவிட்டால் குழந்தையின் தந்தை பெயரைத் தெரிவிக்க வேண்டியதில்லை. இவர்கள் பிறப்புச் சான்றிதழ் கேட்கும்போதும் தந்தையின் பெயரைக் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது’ என்று தீர்ப்பு தெளிவுபடுத்தியது. இந்து மதத்தில் பிறந்த இல்லெஜிடிமேட் குழந்தைக்குத் தாய் கார்டியனாக இருக்க முடியும். கிறிஸ்துவ மதத்தில் அந்த வாய்ப்பு இல்லை. அதை ஈடுசெய்யும் விதமாக இந்தத் தீர்ப்பு அமைந்தது. இந்த வழக்கில் தந்தையின் அனுமதி பெறாமல் குழந்தையின் தாயைத் தனி கார்டியனாக நியமிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments