Account Payee Only - என காசோலையில் குறுக்கு கோட்டிடையே எழுதுவதின் அவசியம்

இன்று எனது நண்பர் அவருடைய நண்பர் ஒருவரை  (அ என்று பெயரிட்டு கொள்வோம்) சட்ட ஆலோசனை வேண்டி என்னிடம் கூட்டி வந்தார்.
.
அ –க்கு  சூரத் (குஜராத்) நகரில் இருந்து செக் மோசடி வழக்குக்காக ஒரு சட்டப்படியான அறிவிப்பு வந்துள்ளது. அதில் அ வழங்கிய ரூ.1,56,000 மதிப்பு காசோலைக்கு வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டதாகவும், அதற்கான பணத்தை அந்த அறிவிப்பு கண்ட 15 நாட்களுக்குள் வழங்காவிட்டால், சூரத் நகர் குற்றவியல் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த்து. 
.
” நான் சூரத்தில் உள்ள யவருக்கும் காசோலை வழங்கவில்லை. இந்த அறிவிப்பை அனுப்பியவர் யார் என்றே எனக்கு தெரியவில்லை. மேலும் இவர்களிடம் நான் எந்தவித தொழில்ரீதியான வர்த்தகமும் செய்யவில்லை. இவர்கள் ஏன் எனக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்கள் என்று புரியவில்லை”  என்று அ கூறினார்.
.
நான் அவரிடம் ” அது சரி, ஆனால் நோட்டிஸில் குறிப்பிட்டுள்ள காசோலை எண் உங்கள் காசோலைதானா? மேற்படி தொகைக்கு யாருக்கும் காசோலை வழங்கினிர்களா? என்று கேள்வி எழுப்பினேன்.
.
அதற்கு அவர் “ சார், காசோலை விபரம் சரிதான். ஆனால் இந்த காசோலையை நான் வழக்கமாக  துணி கொள்முதல் செய்யும்  கோயம்புத்தார் வியாபாரிக்கு வழங்கினேன்.  ஆனால் சூரத்தில் உள்ளவர் கைக்கு இந்த காசோலை ஏன் போனது, அவர் ஏன் எனக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்புகின்றார்?  என்று கேள்வி எழுப்பினார்.
.
இப்போது, எனக்கு முழு விபரமும் புரிந்துவிட்டது.
.
பின்னர் அ க்கு விளக்கமாக சிறு பாடம் எடுத்தேன்.
”சார் நீங்கள் கோயம்புத்தார் வியாபாரிக்கு கொடுத்த காசோலையை அவர் மேல் எழுதி (endorsement) செய்து சூரத் வியாபாரிக்கு கொடுத்துள்ளார். சூரத் வியாபாரி அவரது வங்கியில் வசூலிக்க போட்டதில் அந்த காசோலை திரும்பிவிட்டது. அதனால் உங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
சார், நான் என்ன செய்ய வேண்டும்? ஒரு டி.டி. எடுத்து அவர்களுக்கு அனுப்பிவிடவா?
இல்லை. வங்கியில் அந்த காசோலை மறுபடியும் திரும்பாத அளவிற்கு பணத்தை போட்டு வையுங்கள். பின்னர் நோட்டிஸ் அனுப்பியவர்களுக்கு அந்த காசோலையை திரும்பவும் வங்கியில் வசூலுக்காக போடச்சொல்லுங்கள். என்று அறிவுறுத்தினேன்.
பின்னர் அ விடம், காசோலை வழங்கும்போது Account Payee Not Negotiable என்று எழுதி வழங்குங்கள். நீங்கள் வெறும் இரண்டு இணை குறுக்கு கோடுகள் போட்டதாலே, அந்த காசோலையை உங்களிடம் பெற்ற நபர், மேல் எழுதி மற்றவருக்கு வழங்கியுள்ளார் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன்.
குறிப்பு – வங்கி கணக்கில்தான் வரவு வைக்க வேண்டும் என்று காசோலை வழங்கும்போது, இரண்டு இணை குறுக்கு கோடுகள் போட்டால் மட்டும் போதுமானது அல்ல. கட்டாயம் அந்த இரு குறுக்க கோடுகளுக்கு இடையே “Account Payee என்றும் அந்த வார்த்தைக்கு கீழே Not Negotiable” என்று எழுதுங்கள்.  முடிந்தால் இதற்கு ஒரு Rubber Stamp செய்து வைத்து காசோலையில் முத்திரை இடுங்கள்.

Comments