வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி; டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் டிஜிட்டல் போதும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி; டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் டிஜிட்டல் போதும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
டூ வீலர், கார் வைத்திருப்போர் இனி ஆர்சிபுக், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றைக் காகித ஆவணமாக வைக்காமல், தங்கள் மொபைல் போனில் டிஜிட்டல் ஆவணங்களாக வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு நிலையான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அனைத்து மாநில அரசுகளும் இதைப் பின்பற்றுமாறும், வாகன ஓட்டிகளை காகித வடிவிலான ஆவணங்களைக் கேட்டு வற்புறுத்தாமல், டிஜிட்டல் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''இனிமேல், இரு சக்கர, நான்கு சக்கர, மற்றும் கனரக வாகன ஓட்டிகள் இனிமேல் தங்களின் வாகனங்களின் ஆர்சி புக், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் ஆவணம், புகைக்கட்டுப்பாட்டு சான்று, எப்.சி போன்றவற்றை ஆவணங்களாக வாகனத்தில் வைத்திருக்கத் தேவையில்லை. மத்திய அரசின் டிஜிலாக்கர், எம்பரிவாஹன்(mparivahan app, dilocker app) ஆகிய ஆப்ஸ்களை பயன்படுத்தி அதில் டிஜிட்டல் ஆவணங்களா வைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்த ஆப்ஸ்(செயலி) மூலம் வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் தங்களின் ஓட்டுநர் உரிமம், ஆர்சி புக் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ள முடியும். மேலும் கியூஆர் கோடு அளிக்கப்படும். இதன்மூலம் வாகன ஓட்டிகளைச் சோதனையிடும் போலீஸார், போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீஸார் தங்களின் ஆண்ட்ராய்ட் போன் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து விவரங்களைப் பெற முடியும்.
டிஜிலாக்கர், எம்பரிவாஹன் ஆப்ஸ்
அதேபோல, வாகனங்களை சோதனை செய்யும் போக்குவரத்து போலீஸார், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அனைவரும் இசெலான் ஆப்ஸ் மூலம் தங்களுக்குத் தேவையான விவரங்களைப் பெறலாம். அதன் மூலம் வாகன ஓட்டிகளின் விவரங்களையும் ஆய்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்து போலீஸார், போக்குவரத்து அதிகாரிகளும் எந்தவிதமான ஆவணங்களையும் உடன் எடுத்துவர வேண்டிய அவசியமில்லை. ஆவணங்களைப் பராமரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த நடவடிக்கையின் மூலம் ஆவணங்கள் வைத்திருந்தாலும், இல்லாவிட்டாலும் வாகன ஓட்டிகளிடம் சில போக்குவரத்து அதிகாரிகளுக்குக் கையூட்டு பெறுவது தடுக்கப்படும். வாகன ஓட்டிகளும் டிஜிட்டல் முறையில் தங்கள் ஆவணங்களை வைத்திருப்பதன் மூலம் தொலைந்துவிடும் என்று அச்சப்படத்தேவையில்லை. செல்போன் எடுத்துச்செல்லும் போதே ஆவணங்களும் உடன் வந்துவிடும்''.
இவ்வாறு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment