பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி தராவிட்டால் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு மாவுக்கட்டு போடப்போவதாக மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர் பகிரங்க மன்னிப்பு கேட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் ரகளையில் ஈடுபட்டதாக 7 சிறுவர்கள் உள்பட மேலும் 18 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டரில், கடந்த 25 ந்தேதி பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு மாவுக் கட்டு போடப்படும் என்று விஜய் ரசிகர் ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
பிகில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அந்த ரசிகர், மிரட்டல் விடுத்த தனது வீடியோ யூடியூப்பில் வெளியாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தனது தவறை உணர்ந்து பகிரங்க மன்னிப்புக் கேட்டு கெஞ்சி வீடியோ வெளியிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதேபோல, கிருஷ்ணகிரியில் பிகில் படத்தின் அதிகாலை 5 மணி காட்சியை, முன்கூட்டியே ஒரு மணிக்கே வெளியிடக் கோரி, விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை வைத்து மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இதில் 7 சிறுவர்கள் உள்பட 18 விஜய் ரசிகர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், 7 சிறுவர்களும் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மீதமுள்ள 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சினிமாவுக்காக ரகளையில் ஈடுபட்ட தங்கள் பிள்ளைகள் கைது செய்து அழைத்து சென்ற காட்சியைக் கண்டு காவல் நிலைய வாசலில் பெற்றோர்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.
18 பேரும் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டதும், பெற்றோர் தங்கள் முகத்தை மூடியபடியே செல்லவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது வரை கிருஷ்ணகிரி பிகில் ரகளை தொடர்பாக கைது செய்யப்பட்ட ரசிகர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
Comments
Post a Comment