தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் ஒரு குழுவினர் ஐதராபாத்தில் உள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
“தெலுங்கு பட உலகில் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றனர். இதனால் தெலுங்கு குணசித்திர நடிகர்கள் வருமானம் இன்றி வீட்டு வாடகை கூட கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ரஜினிகாந்த், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட தமிழ் நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் அதே நாளிலேயே தெலுங்கிலும் ரிலீசாகிறது. தமிழ் நாட்டில்தோல்வி அடையும் சில படங்கள் கூட ஆந்திராவில் வசூல் குவிக்கின்றன. ஆனாலும் தெலுங்கு நடிகர்களை தமிழ் படங்களில் அவர்கள் நடிக்க வைப்பது இல்லை. ஆனால் தெலுங்கு நடிகர்கள் தமிழ், கன்னடம், மலையாளத்தில் தங்கள் படங்கள் வியாபாரம் ஆக அங்குள்ள நடிகர்களை இறக்குமதி செய்கிறார்கள். சத்யராஜ், விஜய் சேதுபதி, பிரபு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் சுதீப், ரவிகிஷன் உள்ளிட்ட கன்னட நடிகர்களையும் தெலுங்கு படங்களில் நடிக்க வைக்கின்றனர்.
பிரபாஸ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த சாஹோ படத்தில் அவரைத் தவிர யாருமே தெலுங்கு பேசுபவர்கள் இல்லை. சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் பிறமொழி நடிகர், நடிகைகளே அதிகம் இருந்தனர். தந்தை, தாய், அண்ணி, தங்கை கதாபாத்திரங்களுக்கும் பிறமொழிகாரர்களையே அழைக்கின்றனர். அவர்களுக்கு கேரவன், நட்சத்திர ஓட்டலில் ரூம், அதிக சம்பளம் கொடுக்கின்றனர். இதனால்தான் அவர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தெலுங்கு படங்களில் தெலுங்கு நடிகர்களுக்கே வாய்ப்பு அளிக்க வேண்டும்.”
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
Comments
Post a Comment