பாண்டியர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு அளவில்லாதது. இதற்குப் பல உதாரணங்களை நாம் காணலாம்.
சோழர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பாண்டியர்களின் பெருமையை மீட்டெடுத்தவன் மாறவர்மன் சுந்தரபாண்டியன். மூன்றாம் குலோத்துங்கனால் பட்ட அவமானத்தைத் துடைக்க சோழ நாட்டில் கடும்போர் நிகழ்த்தினான்
“தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி..
மாடமு மாளிகையும் மண்டபமும் பலவிடித்து
கழுதைகொண் டுழுதி கவடி வித்தி”
என்று சோழ நாட்டில் நடைபெற்ற அவனது போர்ச்செயல்களை விவரிக்கிறது அவனது மெய்க்கீர்த்தி. சோழர்களால் கட்டப்பட்ட பல மாளிகைகளும் மண்டபங்களும் இடிக்கப்பட்டன. அப்படி...
உறையூரின் அருகில் உள்ள 16 கால் மண்டபம் ஒன்றையும் அவனது வீரர்கள் இடிக்க முனைந்த போது, அந்த மண்டபத்தின் வரலாறு அவனுக்குச் சொல்லப்பட்டது. கரிகால் பெருவளத்தானைப் பாடிய சங்க இலக்கியமான பட்டினப்பாலை என்ற நூல் அரங்கேறிய மண்டபம் அது.
அதைப் பாடிய உருந்திரங்கண்ணனாருக்கு பதினாறு நூறாயிரம் பொற்காசுகளையும் அந்த மண்டபத்தையும் கரிகாலன் அளித்திருந்தான். இதைக் கேள்விப்பட்ட சுந்தரபாண்டியன் அந்த மண்டபத்தை இடிக்கக்கூடாது என்று ஆணையிட்டான். இந்த நிகழ்வைப் போற்றும் பாடலொன்று திருவெள்ளறைக் கோவிலில் கல்வெட்டாக உள்ளது
வெறியார் துவளத்தொடைச் செயமாறன் வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டிலரமியத்துப்
பறியாத தூணில்லை-கண்ணன் செய் பட்டினப்பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறுமேயங்கு நின்றனவே!
காவிரிநாட்டில் பாண்டியன் பறிக்காத தூணில்லை.ஆனாலும் பதினாறுதூண்கள் மட்டும் மிஞ்சின என்கிறது பாடல்
பழிவாங்குவதற்காக நடந்த போரில், எதிரி நாட்டு மன்னனைப் புகழ்ந்து எழுதப்பட்ட நூல் என்றாலும், பழந்தமிழ்ப் பாடல் அரங்கேறிய இடம் என்பதால் தமிழுக்குத் தலைவணங்கி அந்த இடத்தைக் காக்கச் சொன்ன பாண்டியனின் தமிழ்ப் பற்று எத்தகையது !!!
Comments
Post a Comment