காசி விஸ்வநாதர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு

ஓசூர்:ஓசூர், பத்ரகாசி விஸ்வநாதர் கோவிலில், சித்திரை மாத முதல் பிரதோஷ தினமான நேற்று, மூலவர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டை பச்சைகுளம் அருகே, பத்ர காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது, ஓசூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். தற்போது, ஊரடங்கு உத்தரவால், பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய நாட்களில், கோவில் பூசாரி துரைவேல் மட்டும், சுவாமிக்கு பூஜை செய்து வருகிறார்.ஆண்டுதோறும், சித்திரை மாத பிரதோஷ நாளில், மூலவர் சிவலிங்கத்தின் மீது, சூரிய ஒளி விழும் நிகழ்வு நடப்பது வழக்கம். இதையொட்டி, பிரதோஷமான நேற்று காலை, 6:45 முதல், 6:58 மணி வரை, சூரிய ஒளிக்கதிர், மூலவர் சிவலிங்கத்தின் மீது விழுந்தது. அப்போது, கோவில் பூசாமி துரைவேல், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

Comments