காட்பாடியில் கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்துப்போட்டு கொரோனாவை வீட்டுக்கு கூட்டிப்போன இளைஞன்

காட்பாடியில் கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்துப்போட்டு கொரோனாவை வீட்டுக்கு கூட்டிப்போன இளைஞன்

வேலூர்: கொரோனா வராமல் தடுக்க லாக்டவுன் போட்டு வீட்டோடு இருங்கள் என்று சொன்னாலும் அதையும் கேட்காமல் ஊர் சுற்றுகிறார்கள். முகக்கவசம் இல்லாமல் வீதிகளில் உலா வரவேண்டாம் என்று அரசு உத்தரவு போட்டாலும் அதையும் யாரும் கேட்பதாக இல்லை. அப்படித்தான் காட்பாடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீஸ் போடும் அபராதத்திற்கு அஞ்சி வீதியில் வீசப்பட்டிருந்த மாஸ்க்கை எடுத்துப்போட்டு கொரோனாவை தன்னோடு வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டார். அந்த இளைஞரின் தகாத செயலால் அந்த குடும்பத்தில் 5 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.

காட்பாடி சிவராஜ் நகரில் வசித்து வரும் 5 பேர் கொண்ட அந்த குடும்பத்தில் 65 வயதான அப்பா, 60 வயதான அம்மா 19 வயது தம்பி, 15 வயதான தங்கையுடன் வசித்து வருகிறார் 20 வயதான அந்த இளைஞர். கொரோனா நோய் தொற்று ஊரெல்லாம் பரவி வரும் நிலையில் வீட்டை விட்டு யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்தாலும் அதை கேட்காமல் கடை வீதிக்கு கிளம்பினார் அந்த இளைஞர்.

Katpadi man, family affect in Coronavirus this the reason

காட்பாடி ஓடப்பிள்ளையார் கோவில் தெருவில் அந்த இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்த போது, காவல்துறையினர் ரோந்து வருவதைப்பார்த்தார். 100 ரூபாய் அபராதம் போட்டு விடுவார்களே என்ன செய்வது கையில் பணம் இல்லையே என்ன செய்வது என்று யோசித்தார்.

அப்போது கீழே கிடந்த மாஸ்க் ஒன்று அந்த இளைஞரின் கண்ணில் பட்டது. அதை டக்கென்று எடுத்து உதறினார். முகத்தில் அணிந்து கொண்டு நடையைக் கட்டினார். அப்போது தெரியாது அந்த இளைஞருக்கு தான் அணிந்து கொண்டது மாஸ்க் மட்டுமல்ல கொரோனா வைரசையும் சேர்த்துதான் என்று. மாஸ்க் உடன் வீட்டுக்குப் போனவர் அதை குப்பையில் போட்டதோடு தனது கைகளால் வீடு முழுவதும் தொட்டு தடவினார்.

கைகளில் ஒட்டிக்கொண்டிருந்த வைரஸ் வீட்டில் உள்ள பொருட்கள் மீது பரவியது. அந்த பொருட்களைத் தொட்ட பெற்றோர்களுக்கும் தம்பி, தங்கைகளுக்கும் பரவியது. இப்போது கொரோனா பாதிக்கப்பட்ட 5 பேரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

போலீசாரிடம் சிக்கியிருந்தால் ஒரு சில அடிகளுடன், 100 ரூபாய் பைனுடன் தப்பியிருக்கலாம். கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்துப்போட்டு ஒரு குடும்பத்தையே கொரோனாவின் பிடியில் சிக்க வைத்து விட்டார் அந்த இளைஞர். வீட்டை விட்டு வெளியே போனாலே எச்சரிக்கையாக இருங்கள், அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்கள். அப்படி பின்பற்ற முடியாவிட்டால் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதே நல்லது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Comments