கடந்த ஆண்டு
ஜனவரி மாதத்தில் ‘மெரினா’வில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் மாணவர்களாலும்
இளைஞர்களாலும் பொதுமக்களின் பேராதரவோடு மிக எழுச்சியுடன் நடைபெற்றது. இந்திய
ஊடகங்களிலும் உலக ஊடகங்களிலும் இவ்வறப் போராட்டம் “மெரினா புரட்சி’’ என்று பெருமைப்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தில் பொதுமக்கள் தீவிரமாய்ப் பங்கேற்றுப் போராடியதைப் போல் மெரினா
போராட்டமும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று இறுதியில் வெற்றியும் பெற்றது. “மெரினாப் புரட்சி’’ நடந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் மெரினா பற்றியும், அதன் வரலாறு பற்றியும் அறிந்துகொள்வோம் வாருங்கள் பிஞ்சுகளே!
தற்போது “மெரினா பீச்” இருக்கும் இடத்தில் ஆரம்பத்தில் கடற்கரை எதுவும் இல்லை. இன்றைய
தமிழ்நாடு சட்டமன்றம் இயங்கும் “செயின்ட் ஜார்ஜ்
கோட்டை” கட்டும்போது வங்கக் கடல் மிக அருகில் இருந்திருக்கிறது. சில
சமயங்களில் அலைகள் கோட்டைச் சுவரை மோதும். சென்னையில் 1875இல் முதன்முலாக துறைமுகம் கட்ட ஆரம்பித்தபோது கடலைத் தடுத்து
தென்பக்கமாக சுவர் எழுப்பி உள்ளனர்.
பொதுவாக, வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகளில் இருந்து வரும் மணல் சுழற்சியால்
தென்பக்கமாகச் செல்லும். அப்படி வரும் மணல் மட்டும் எட்டாயிரம் கியூபிக்
மீட்டர்!
துறைமுகத்துக்காக இந்த மணல்
தடுக்கப்பட, ஒரே ஆண்டில் 40
சதுர கிலோ மீட்டர் அளவுக்கு
குவிந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் கடல் பின்னுக்குச் சென்று மணல் மட்டும்
சேர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு வருடமும் 40 சதுர கிலோ
மீட்டர் மணல் அதிகரிக்க, பீச் நீளமாகியிருக்கிறது.
1881இல் மதராஸ் மாகாண கவர்னராக இருந்த மவுண்ட் ஸ்டுவர்ட் என்பின்ஸ்டன் கிராண்ட்டஃப் துறைமுகம் தாண்டி மணல் சேர்வதை
பார்த்துள்ளார். “ஏழரை மைல் நீளத்துக்கு ஒரு கடற்கரை. பார்க்கவே ரொம்ப நல்லா
இருக்கு. ஏன் இதில் உலவும் சாலை அமைக்கக் கூடாது?’’ என்று கேள்வி
அவர் மனதில் உதிக்க, உடனே உருவாகியிருக்கிறது பாதை. ஒரு காலத்தில் பெசன்ட் நகரின்
எலியட்ஸ் பீச் வரை இந்தப் பாதை இருந்துள்ளது.
இத்தாலியில் பால்மரோ கடற்கரை மிக
பிரபலம். அதற்கு ‘மெரினா’ என்று பெயர். அந்த ஞாபகத்தில் கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட்தான் 1884இல் ‘மெட்ராஸ் மெரினா’ என பெயர்
வைத்தார். இத்தாலி மொழியில் மெரினா என்றால் கடல் சார்ந்தது என்று பொருள்.
இதிலிருந்து வந்த வார்த்தைதான் மெரினா.
குறிப்புகள்:
¨
சென்னைத் துறைமுகம் கட்டப்படுவதற்கு
முன்பு, தற்பொழுது ‘மெரினா’ கடற்கரை இருக்கும் பகுதி வெறும் களிமண் தொகுப்பை உடையதாக
இருந்தது.
¨
ஆங்கில அரசு மயிலாப்பூரையும், கிண்டியையும் ‘மெரினா’ வழியாக இணைத்து ஒரு ரயில் தடம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி
வேலைகளைத் தொடங்கும் நிலையில் அதனை எதிர்த்து மாபெரும் மக்கள் போராட்டம் நடக்கவே
ஆங்கில அரசு அத்திட்டத்தைக் கைவிட்டது.
¨
இக்கடற்கரையை ஒட்டி புகழ்
பெற்றோரின் நினைவிடங்கள். உருவச் சிலைகள், அரசு அலுவலகங்கள், கல்லூரிகள்,
கலங்கரை விளக்கம் போன்றவை
அமைந்துள்ளதால் சென்னை நகரின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது.
¨
சென்னை நகரின் நுரையீரல் என்று ‘மெரினா’ அழைக்கப்படுகிறது.
¨
உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை 13 கிலோ மீட்டர் (8.2
மைல்).
¨
‘மெரினா’ அதிகபட்ச அகலம் 437 மீட்டர்
(1,434 அடி)
¨
‘மெரினா பீச்’_இன் நிர்வாக அதிகாரம் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில்
உள்ளது.
¨
‘மெரினா பீச்’ நெடுகிலும் வடக்கு தெற்காக ஆறு(6) வழிச் சாலையாக
காமராஜர் சாலை செல்கிறது.
¨
இந்தியாவின் பெரிய ஓட்டமான “சென்னை மாரத்தான்’’ இங்கு நடைபெறுகிறது.
¨
பொங்கல் திருநாளில் உறவினர்களோடு
சேர்ந்து உணவுப் பொருள்களுடன் மக்கள் மெரினாவில் ஒன்று கூடுகின்றனர்.
¨
சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா போன்ற விழாக் காலங்களில் அரசுத் துறைகளின்
அணிவகுப்பு இங்கு நடைபெறுகிறது.
¨
முன்பு மெரினாவில் ஏரளமான அரசியல்
கட்சிப் பொதுக்கூட்டங்கள் மாநாடுகள், கலைநிகழ்ச்சிகள்
நடைபெறும் ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அதற்கு தடை
விதிக்கப்பட்டுவிட்டது.
¨
2017இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவுப்
போராட்டத்திற்குப் பிறகு இங்கு அனுமதியின்றி போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை
தடை விதித்துள்ளது.<
வங்காள விரிகுடா கடலின் சென்னை கரை பகுதி
தான் மெரினா கடற்கரையானது. இக் கடற்கரை கிட்டத்தட்ட 12 கி.மீ
நீளம் உடையது. இதே போன்று நீளமான கடற்கரைகள் உலகில் பல
இருந்தாலும், உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற
பெருமை நமது மெரினாவுக்கு மட்டும் தான். சென்னைக்கு சுற்றுலா வருபவர்கள்
இக்கடலில் கால்கள் நனைக்காமல் செல்வதென்பது இதுவரையில் இருந்ததில்லை என்று
தைரியமாக கூறும் அளவிற்கு பெயர்போனது.
சென்னை துறைமுகம் உருவாகுவதற்கு முன் மெரினா
கடற்கரையானது வெறும் களிமண் நிறைந்த பகுதியாக இருந்து வந்தது. இக்கடற்கரையை
1880 ஆம் ஆண்டு ஆங்கிலேய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன்
கிராண்ட் டப் தான் முதன் முதலில் அழகாக வடிவமைத்தார். இந்த பராமரிப்பின்
தொடர்ச்சி தான் நவீன படுத்தப்பட்ட இன்றைய மெரினா கடற்கரை.
இந்திய
சுதந்திர போராட்ட தலைவர்கள் பலர் சிலைகளாக இந்த கடற்கரையில் இன்றும் வாழ்ந்து
கொண்டு தான் இருக்கிறார்கள். இரண்டாம் உலக தமிழ் மாநாடுக்கு பின் தமிழுக்கு
தொண்டாற்றிய புலவர்களின் சிலைகளையும் அரசு நிறுவி, இக்கடற்கரைக்கு
சிறப்பு சேர்த்தனர். அதுமட்டுமல்லாமல் உலக தொழிலாளர்களை பெருமை படுத்தும்
தொழிலாளர் சிலைகளும் இங்கு அமைந்திருக்கின்றன.
முன்னால் முதல்வர்களும், திராவிட இயக்க தலைவர்களுமான
மதிப்பிற்குரிய எம் ஜி ஆர் , அறிஞர்
அண்ணா போன்றோரின் சமாதி இக்கடற்கரையில் அமைந்து இக்கடற்கரையின் மதிப்பை
அதிகப்படுத்தி இருக்கிறது. மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தந்தை
பெரியார், காமராஜர், மகாத்மா
காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் உட்பட பல்வேறு தலைவர்களின் சிலைகள் இங்கு
அமைக்கப்பட்டிருக்கின்றன. உலக தமிழர்களால் பெரிதும் வணங்கப்படும் கண்ணகி
சிலை இங்குதான் அமைந்திருக்கிறது.
கல்வியில் புகழ்பெற்ற சென்னை பல்கலை கழகமும்,
தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகமும், இந்திய
அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையமும் இங்குதான் அமைந்திருக்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தான் இங்கு வருடம் தவறாமல்
நடைபெறும். சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் துறைகளின் அணிவரிசை
நடைபெறும்.
நடைமுறையில் இக்கடற்கரை மூன்று பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது. இதன் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு
தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன்
தெற்கில் கூவம் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம்
கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது
பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கடற்கரையைக்
காண தினமும் ஆயிரக் கணக்கானோர் வருகின்றனர். காலையில் நடைபயிற்சி செய்பவர்கள்,
காதலர்கள், பெரியவர் முதல் சிறியவர் வரை பல பேர் இங்கு
வந்து செல்கின்றனர். தென்னிந்தியாவின் காலச்சார நுழைவு வாயில் என்று
அழைக்கப்படும் சென்னையில் இக்கடற்கரை இருப்பது கூடுதல் சிறப்பு. நகர
மக்களுக்கும், சென்னையை சுற்றிப் பார்க்க வரும் பிற
மக்களுக்கும் இக்கடற்கரை ஓர் வேடந்தாங்கல்.
இந்த கடற்கரை தண்ணீருக்கு பிரபலமோ
இல்லையோ உணவுப் பொருட்களுக்கு மிகவும் பிரபலம். தேங்காய்
சுண்டல், ஏலக்காய் டீ, பஜ்ஜி,
பேல் பூரி போன்ற சாட் வகைகள் இங்கு ஒரு பிடி பிடிக்கலாம். தற்போது
துரித உணவகங்களையும், கடல் காற்றுடன் சுவைத்து மகிழலாம். கடல் நீரில்
கால் நனைத்து விட்டு பொறித்த மீன் துண்டை சுவைக்கும் அனுபவம் இங்கே வரும்
பலருக்கும் கிடைத்து இருக்க கூடும். இப்படியாக ஆயிரக்கணக்கான வியாபார
குடும்பங்களை வாழவைத்து கொண்டிருக்கும் இதே மெரினா தான் குழந்தை
தொழிலாளர்களையும் ஊக்குவிக்க காரணமாகி விடுகிறது.
மாலை நேரத்தில் சுண்டல் விற்கும் பலர் பள்ளி படிக்க வேண்டிய சிறுவர்கள் என்பது
மறுக்க முடியாத அவல செயல் தான்.
அதிகாலையில் மெரீனாவில் நடக்கிறவர்கள்,
ஓடுகிறவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், யோஹா
மற்றும் நடனம் கற்று கொள்பவர்கள் என பலவகைப்பட்டவர்களை காண முடியும். அதுவும்
குதிரைகளில் அமர்ந்த போலிசாரின் பாதுகாப்பில் நடைபயணம் செய்வதென்பது தனி சுகம்
தான். இக்காலை நேர மெரினா கடைகள் சென்னையில் மிக பிரபலம், கற்றாழை
ஜூஸ், பதநீர், முலிகை
சூப் என ஆரோக்கியத்துக்கான அனைத்தும் கிடைக்கும் இடமாக திகழ்கிறது மெரினா.
சென்னையில் வசிக்கும் கீழ்தர மற்றும் நடுத்தர மக்களில் பலரின்
வீடுகள் இரண்டு அறைகளை கொண்டிருப்பதில் ஆச்சரியம் இல்லை. கடற்கரையை ஓட்டி
இருக்கிற குப்பத்து மக்கள் மெரினா கடற்கரையின் மணல்பரப்பை தான் தங்களின் படுக்கை
அறையாக பயன்படுத்தி வருகின்றனர். இடவசதி இல்லாததால் குடும்பத்துடன் மெரீனாவில்
பாய் அல்லது போர்வை விரித்து படுத்து விடுகின்றனர். மழை காலங்களில்
இந்த இடமும் இல்லாமல் போவதால் இவர்களின் இரவு தூக்கம் நகர்வது பெரிய அவஸ்தையாகி
போய்விடுகிறது. பாதி தூக்கத்தில் மழை பெய்துவிட்டால் சிலர் அங்கே நிறுத்தி
வைக்க பட்டிருக்கும் தள்ளுவண்டி கடைகளுக்கு கீழே ஒண்டி கொள்கின்றனர், மற்றவர்கள்
கொட்டும் மழையில் வீடுகளை நோக்கி ஓடுகின்றனர்.
பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்த படி காதலிக்கும் காதலர்களை
தமிழ்நாட்டிலேயே இங்கே மட்டும் தான் காண முடியும். சென்னையில்
வசிக்கும் காதல்வாசிகள் அனைவரும் ஒருமுறையாவது மெரினாவின் மதிய வெயிலில் நனைந்த
படி காதலித்திருப்பார்கள் அல்லது காதலிக்க ஆசைபட்டிருப்பார்கள் என்று சொல்லும்
அளவிற்கு மெரினா காதல் பிரபலம்.
விடுமுறை தினங்களில் 4 மணிக்கெல்லாம் மெரினா களைகட்டி
விடுகிறது. பள்ளி நாட்களில் விளையாட இடமில்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து
கிடக்கும் சென்னை குழந்தைகளின் ஏக்கத்திற்கு மெரினா வடிகாலாகி போனது. குழந்தைகள்
மட்டுமல்ல இளம்வயதினருக்கும் இது ஒரு விளையாட்டு திடலாக இருந்து கொண்டு தான்
இருக்கிறது. தங்கள் வாழ்க்கையின் சந்தோஷமான நாட்களை பல இளம் வயதினர் மெரீனாவில்
தான் அனுபவிக்கின்றனர். வயது முதிர்ந்தோர் தங்களின் பழைய நினைவுகளை இந்த
கடலலைகளில் தேடி வந்து செல்கின்றனர். அந்த நினைவுகள்
தான் அலைகளாக கால்களை தழுவி செல்கிறது.
சிறிய
அளவிலான இலக்கிய கூட்டங்கள், நல் சமுக நோக்கத்தோடு இயங்கும் அமைப்புகளின்
கூட்டங்கள், சமுக தொண்டு நிறுவனத்தின் குழு அமர்வு
நிகழ்வுகள், நண்பர்கள் சந்திப்பு என இந்த மெரினாவை
வாடகை இல்லாத நல்ல meeting ஸ்பாட் ஆக மாற்றி பயன்படுத்துவோரும்
இருக்க தான் செய்கிறார்கள். இப்படி இக்கடற்கரை ஓர் அற்புதமான இடமாக திகழ்கிறது.
தனியாக இங்கு வந்து அமர்ந்தால் வாழ்க்கையில் ஏதோ ஓர் நிம்மதியை இந்த
கடலும், மணலும், கடற்கரையும்
நமக்கு கொடுக்கும். அதனால் தான் இக்கடற்கரை சென்னை வாழ் மக்களின் வாழ்க்கையில்
ஓர் அங்கமாக கலந்து விட்டது.
குதிரைகளில் அமர்ந்த படி வலம் வரும்
குதிரைக்காரர்களை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் மனது சந்தோசத்துக்கு
போகிறது. நாமே குதிரையில் பயணித்து இறங்கியது போன்ற அனுபவம் சில வினாடிகளில்
வந்து போவது இயற்கைதான். குடும்பத்துடன் வந்து விளையாடிவிட்டு, கொண்டு
வந்த இரவு உணவை பிரித்து சாப்பிட்டுவிட்டு செல்வோர் எண்ணிக்கை பொங்கல், தீபாவளி
போன்ற விழா நாட்களில் மற்ற விடுமுறை நாட்களைவிட பன்மடங்கு அதிகரிக்க தான்
செய்கிறது.
முக்கிய ஊர்வலங்கள், ஆதரவு திரட்டுவதர்க்கான கையெழுத்து இயக்கங்கள்,
ஊடகங்களின் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள், போட்டிகள்,
உண்ணாவிரதம் போன்ற அகிம்சை போராட்டங்களுக்கு மெரினா கடற்கரையிலே
பொது மக்களுக்கு இடையுறு இல்லாத வகையில் நடத்தி கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
கட்சி பொதுக்கூட்டங்கள், அரசு நடத்தும் விழிப்புணர்வு கண்காட்சிகள்,
உணவு திருவிழாக்கள் போன்றவைகளை நடத்த
கடற்கரை அருகில் அமைந்துள்ள தீவு திடலில் அனுமதி வழங்கப்படுகிறது.
"மெரினா" என்ற இக்கடற்கரையின் பெயரை கொண்டு வெளிவந்த
வெற்றி இயக்குனரின் தற்போதைய படம் மெரீனாவில் வாழும் மனிதர்கள்,
அங்கே வரும் மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்ய முயற்சித்த முதல்
படம். மெரீனாவில் இன்னும் நிறைய கதைகள், நிஜங்கள் புதைந்து இருக்கின்றன. கதைகளின்
கருவூலமாக மெரினா திகழ காரணம், இந்த மெரினாவை காண வரும் ஒவ்வொருவரும் ஒரு
கதையை இங்கே விட்டு செல்கின்றனர் என்பதுதான்.
|
Comments
Post a Comment