நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி : சீமான் தான் காரணம் என குற்றச்சாட்டு
பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குறிப்பாக தன்னை திருமணம் செய்வதாக சொல்லி நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார். மேலும் சீமான் தன்னுடன் இருந்ததாகக் கூறி சில அந்தரங்க போட்டோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதனாலேயே சீமானின் ஆதரவாளர்கள் இவரை கடுமையாக விமர்சித்து வசை பாடுகின்றனர். அவர்களுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்கொலைக்கு முன்பாக ஒரு வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஜயலட்சுமி. அதில் அவர் கூறியிருப்பதாவது : நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். இது எனது கடைசி வீடியோ. சீமானின் ஆதரவாளர்கள் தொடர்ந்து என்னை தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதனால் உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டுள்ளேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இறந்துவிடுவேன். எல்லாவற்றையும் கடந்து இந்த உலகில் வாழலாம் என எண்ணினேன். ஆனால் இப்போது முடியவில்லை. எனது மரணத்திற்கு சீமான் தான் காரணம். அவரை விட்டு விடாதீர்கள், தப்பிக்கவே கூடாது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமியின் இந்த வீடியோ மற்றும் தற்கொலை முயற்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment