புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முதலாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி எங்கே உள்ளது தெரியுமா?



சென்னை: ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி தற்போதும் அந்த கோட்டையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நமது நாட்டை கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வந்தனர். வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணற்ற தலைவர்கள் போராடி பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.
1942-ஆம் ஆண்டு காந்தியடிகள் மேற்கொண்ட வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு சென்றனர்.
 சுதந்திர தினம்

சுதந்திர தினம்

அப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திரம் பெற்ற அன்றைய தினம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த பிரிட்டிஷ் அரசின் ‘ஜாக்' கொடி இறக்கப்பட்டு, முதல்முறையாக நம் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
 பொக்கிஷம் போல் பாதுகாப்பு

பொக்கிஷம் போல் பாதுகாப்பு

அந்தக் கொடி இன்று வரை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கொடியானது கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
 எப்படி பராமரிப்பு

எப்படி பராமரிப்பு

காற்று நுழையாத மரப்பெட்டியில் கண்ணாடியால் மூடப்பட்டு கிட்டதட்ட 70 ஆண்டுகளாக இந்த தேசியக் கொடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மூடியே இருப்பதால் பெட்டிக்குள் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்ச கொடியைச் சுற்றி 6 டப்பாக்களில் சிலிக்கா ஜெல் வைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற மாசுகளால் கொடி பாதிக்கப்படாமல் இருக்க குளிரூட்டப்பட்ட இருட்டு அறையில் வைத்துள்ளனர்.
 லைட்டிங் அமைப்பு

லைட்டிங் அமைப்பு

பார்வையாளர்கள் உள்ளே வந்தால் மட்டுமே அதை சென்சார் மூலம் உணர்ந்து விளக்குகள் எரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 12 அடி அகலமும், 8 அடி உயரமும் கொண்ட தூய்மையான பட்டுத் துணியால் ஆன இந்தக் கொடியை புனித ஜார்ஜ் கோட்டையில் அதிகாலையில் ஏற்றியது யார் என்ற குறிப்புகள் ஏதும் இல்லை.
 வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது

இந்த தேசியக் கொடியானது லேசாக மங்கியுள்ளது என்றாலும் இந்தியாவிலேயே சுதந்திரம் பெற்ற அன்று ஏற்றப்பட்ட கொடிகளில் இன்று வரை பாதுகாத்து வைத்திருப்பது இந்தக் கொடி மட்டும் தான் என்பது தனிப்பெரும் சிறப்பாகும். நம் கோட்டையில் பட்டொளி வீசி பறந்த தேசியக் கொடியை சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்கும் மேல் பாதுகாப்போம்!

Comments