சென்னை சுற்றுலா
அண்ணா நகர் கோபுரம்:
சென்னையில் உள்ள உயரமான மற்றும் பெரிய பூங்கா கோபுரம். அண்ணாநகர் பூங்காவில் அமைந்துள்ள இந்த கோபுரம் வட்ட வடிவில் சுற்றி சுற்றிச் செல்லும் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் உச்சியில் இருந்து சென்னையை முழுமையாக கண்டு ரசிக்க முடியும். அண்ணாநகர் ரவுன்டானா அருகே அமைந்துள்ள இதற்கு நுழைவு கட்டணம் ரூ.1; காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் 7 நாட்களும் இது திறந்திருக்கும்.
பிர்லா கோளரங்கம்:
இந்த நவீன கோளரங்கம் அரை வட்ட வடிவிலான உருண்டையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர் மய கருவிகள் மூலம் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் காண முடியும். கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகே பெரியார் அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தில் அமைந்துள்ள இந் கோளரங்கத்தில் ஆங்கிலம் ( காலை 10-45; பகல் 01-15; 03-45) தமிழ் ( பகல் 12; 02-30) மொழிகளில் விளக்கம் தரப்படுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20; சிறியவர்களுக்கு ரூ.10.
கன்னிமாரா பொது நூலகம்:
தேசிய நூலகங்களில் ஒன்று. இங்கு ஏராளமான நூல்களும் இதழ்களும் உள்ளன. கம்பூயட்டரில் இயங்கும் தொடுதிரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இது காலை 9 மணி முதல் இரவு 07- 30 வரை திறந்திருக்கும். தேசிய விடுமுறை நாட்களில் இது செயல்படாது. அனுமதி இலவசம்.
அரசு அருங்காட்சியகம்:
பாந்தியன் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் தற்கால கலைப் பொருட்கள் முதல் வரலாற்று காலத்துக்கு முற்பட்ட கலைப் பொருட்கள் வரை இடம் பெற்றுள்ளன. இங்கு பிரதான தென் இந்திய ராஜ பரம்பரைகளின் நினைவுச் சின்னங்கள் பெருவாரியாக உள்ளன. இங்குள்ள பல்வேறு கால வெண்கல மற்றும் இதர உலோக சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்வதாக உள்ளன. அமராவதி பகதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், அவரது வாழ்க்கையைச் சித்தரிப்பதாக உள்ளன. இங்குள்ள தேசிய கலைப் பொருள் பகுதியில் 10 முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருட்கள், 16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய ஓவியங்கள், ராஜஸ்தானி மற்றும் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிண கலைப் பொருட்கள், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் ஆகியவை கண்ணைக் கவர்வதாக அமைந்துள்ளன தேசிய கலைப்பொருள் பகுதி அமைந்துள்ள கட்டிடம் சிவப்பு கற்களால் கட்டப்பட்டது. இங்குள் பொருட்கள் மட்டுமல்லாமல் இந்த கட்டிடமே ஒரு கலைப்பொருளாக திகழ்கிறது.
எலியட்ஸ் கடற்கரை:
தென்சென்னையில் அமைந்துள்ள அழகான சிற்றுலா தலம். இந்த அழகான கடற்கரைக்கு இங்கு அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது. 8 முகங்களுடன் கூடிய லட்சுமி விக்ரகங்கள் தனித்தன் கருவறையில் அமைந்துள்ளன. இந்த கடற்கரைப் பகுதியில் ஆரோக்கிய மாதா மடோனாவின் தேவாலயமும் உள்ளது.
மெரினா கடற்கரை:
அழகான மெரினா கடற்கரையில் நடந்து கொண்டே வங்க கடலையும் அதில் மோதும் அலைகளையும் ரசிக்கலாம். இனிமையான கடற்காற்றை சுவாசிக்கலாம். உலகிலேயே 2வது நீண்ட கடற்கரையாக மெரினா கடற்கரை திகழ்கிறது. இந்த கடற்கரைப் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவிடங்கள் அமைந்துள்ளன. மேலும் தமிழ் அறிஞர்கள், தியாகிகள் சிலைகள் இங்கு அமைந்துள்ளன. இந்த பகுதியில் உள்ள உழைப்பாளர் சிலை கலை நுணுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்த கடற்கரைச் சாலையில் சென்னை பல்கலைக்கழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் மாளிகை, அரசு கலைக் கல்லூரி, ஐஸ் ஹவுஸ் ஆகியவை அமைந்துள்ளன.
நேப்பியர் பாலம்:
தலைமை செயலகத்திலிருந்து மெரினா கடற்கரை செல்லும் சாலையில் கூவம் நதி மீது அமைந்துள்ள நேப்பியர் பாலம் 1869ல் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் பொறியியல் தொழில் நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை:
சென்னையின் பிரதான வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் இந்த கோட்டை இங்கிலாந்தின் மத குருவான செயின்ட் ஜார்ஜ் பெயரில் அமைந்துள்ளது. இந்த கோட்டை பகுதியில் தற்போது தமிழக சட்டசபை, தலைமைச் செயலகம், தொல்பொருள் துறை அலுவலகங்கள், ராணுவ முகாம்கள் உள்ளன.
கோட்டை அருங்காட்சியகம்:
தலைமை செயலகத்திற்கு அருகே அமைந்துள்ள கோட்டை அருங்காட்சியகம் முதலில் கோட்டை ராணுவ அதிகாரிகளின் உணவருந்தும் இடமாக இருந்தது. பின்னர் அது பாங்காக உருவெடுத்தது. தற்போதைய ஸ்டேட் பாங்கின் முன்னோடி இதுதான். 1796ல் இது கலங்கரை விளக்கமாவும் செயல்பட்டது. 1948 முதல் கோட்டை அருங்காட்சியகமாக இயங்கி வரும் இதில் சென்னை நகரை உருவாக்கியவர்களின் மூல கையெழுத்து பிரதிகள், பழங்கால காசுகள், வெள்ளிப் பொருட்கள், சீருடைகள் ஆகியவை உள்ளன.
ஐகோர்ட்:
சென்னை நகரின் மற்றொரு பிரதான கட்டிடமாக கருதப்படும் சென்னை ஐகோர்ட் கட்டிடம் 1892ல் கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள கோர்ட் கட்டிடங்களில் இது இரண்டாவது பெரிய கட்டிடமாகும். சென்னை சட்டக் கல்லூரியும் இதன் வளாகத்தில் அமைந்துள்ளது
எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம்:
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்ந்த ஆற்காடு சாலையில் உள்ள இல்லம் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது..
டைடல் பார்க்:
வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத் துறையின் தாயகமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உறைவிடமான இங்கு பல்வேறு நவீன வசதிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களாக பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளும் இங்கு உள்ளன.
சாந்தோம் பாசிலிகா:
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான் செயின்ட் தாமஸ் கல்லறை அமைந்துள்ள இடத்தில் சாந்தோம் பாசிலிகா உள்ளது. மெரினா கடற்கரையின் தெற்கு மூலையில் அமைந்துள்ள இதில் இந்த பகுதிக்கான கத்தோலிக்கர்களின் தலைமை மதகுருவான சென்னை ஆர்ச் பிஷப்பின் தேவாலயம் அமைந்துள்ளது.
விவேகானந்தர் இல்லம்:
ஐஸ் ஹவுஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட இடம் 1963 முதல் சுவாமி விவேகானந்தர் நினைவாக விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1842 முதல் 1874 வரை ஐஸ் கட்டிகளைச் சேமித்து வøக்கும் இடமாக இது விளங்கியது. தற்போது இதில் விவேகானந்தர் தொடர்பான அரிய படங்கள் இடம் பெற்றுள்ளன.
கிண்டி தேசிய பூங்கா:
உலகிலேயே நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரே தேசிய பூங்கா கிண்டி தேசிய பூங்காதான். சென்னை நகரின் நுரையீரலாக கருதப்படும் மரங்கள் அடர்ந்த நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் பல்வேறு மரங்களும் புள்ளி மான் போன்ற அரிய ரக விலங்குகளும், பறவைகளும் உள்ளன.
அஷ்டலட்சுமி கோயில்:
எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோயிலில் மகாலட்சுமியின் 8 வடிவங்கள் விக்ரகங்களாக உள்ளன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கபாலீஸ்வரர் கோயில்:
மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில். சிவபெருமாøன் மயில் வடிவில் பார்வதி தேவி வழிபட்டதால் இந்த பகுதி மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞான சம்பந்தர் பதிகம் பாடி ஒரு சிறுவனை உயிர்ப்பித்ததாகவும் புராணம் கூறுகிறது. மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் அறுபத்து மூவர் திருவிழா குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment