வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா? கட்டாயமில்லையா? மத்திய சுகாதார துறை அமைச்சகம் விளக்கம்
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா? கட்டாயமில்லையா? மத்திய சுகாதார துறை அமைச்சகம் விளக்கம்
வாகனத்தில் தனியாக செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயமா? அல்லது கட்டாயமில்லையா? என்பது பற்றி மத்திய சுகாதார துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பிறகு பல்வேறு விஷயங்களில் மக்களின் வாழ்க்கை முறை மாறியுள்ளது. குறிப்பாக முக கவசங்கள் தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. முக கவசம் அணிவதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைத்து கொள்ள முடியும்.எனவே முக கவசம் அணிவதை தற்போது பலர் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அத்துடன் பொது இடங்களில் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பொது இடங்களில் முக கவசங்களை அணியாதவர்களுக்கு காவல் துறையினரும் மற்றும் அதிகாரிகளும் அபராதமும் விதித்து வருகின்றனர்.எனவே இரு சக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்பவர்களும் தற்போது முக கவசம் அணிந்து வருகின்றனர். ஆனால் வாகனங்களில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமா? கட்டாயமில்லையா? என்ற விஷயத்தில் ஆரம்பம் முதலே குழப்பம் நீடித்து கொண்டுள்ளது.இந்த குழப்பங்களுக்கு மத்தியிலும், வாகனத்தில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் அணியாதவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இதன்படி வழக்கறிஞர் சவுரப் ஷர்மா என்பவருக்கு கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதியன்று டெல்லி காவல் துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அன்றைய தினம் சவுரப் ஷர்மா காரில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார். ஆனால் முக கவசம் அணியவில்லை எனக்கூறி காவல் துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர். இந்த அபராத தொகையை திருப்பி தர உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சவுரப் ஷர்மா மனு தாக்கல் செய்துள்ளார்.தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியமைக்காக 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் சவுரப் ஷர்மா வலியுறுத்தியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தற்போது இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது டெல்லி அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது.இதில், 'வாகனத்தில் பயணிக்கும் யாராக இருந்தாலும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. இந்த சூழலில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் மூலமாக தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளது.இதில், ''வாகனத்தில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் எந்தவிதமான வழிகாட்டுதல்களையும் பிறப்பிக்கவில்லை'' என கூறப்பட்டுள்ளது. வாகனத்தில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் அணிவது கட்டாயமா? கட்டாயமில்லையா? என்பது தொடர்பாக குழப்பம் நீடித்து வரும் நிலையில், இந்த தகவல் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.வாகனங்களில் தனியாக பயணிக்கும்போது முக கவசம் கட்டாயமில்லை என்பதை மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
Comments
Post a Comment