கொடுமையின் உச்சம்....பிரம்பால் அடித்து பலாத்காரம் செய்தனர், அங்கேயே செத்து விடுவோம் என அஞ்சினோம்- செங்கல்சூளையில் இருந்து மீண்ட குடும்பம்!

கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் மாட்டிக் கொண்டு உயிர் பிழைத்து இன்று மகிழ்ச்சியாக வாழும் ரமேஷ் மற்றும் அவரின் குடும்பத்தின் கதை.
 
வாழ்க்கை நாம் நினைப்பதைப்போல அவ்வளவு எளிதாகவும், விருப்பமானதாகவும் இருப்பதில்லை. அதையெல்லாம் கடந்து வாழ வேண்டியது தான் காலம் கற்றுக்கொடுக்கும் அனுபவம். அப்படியான பல கசப்பான அனுபவங்களை இங்கே நம்மிடம் பகிர்கிறார் ரமேஷ்.

”அப்போது எனக்கு 10 வயது இருக்கும். நான் செங்கல் சூளை ஒன்றில் வேலை செய்யத் தொடங்கினேன். என் தந்தை எங்கள் கிராமத்திற்கு அருகிலுள் செங்கல் சூளையில் வேலை பார்த்தார். பின்னர் வறுமையின் காரணமாக என் அம்மா, சகோதரர் சுரேஷும் நானும் அவருடன் சேர்ந்து அங்கு வேலை செய்தோம்.

குழந்தைகளாக, சுரேஷும் நானும் சிறிய சக்கர வண்டிகளில் சேறு மற்றும் களிமண்ணை எங்கள் பெற்றோரிடம் கொண்டுவந்து கொடுப்போம். அதை பயன்படுத்தி அவர்கள் செங்கற்களை அடுக்கி கட்டிடம் கட்டுவார்கள். ஒருநாள் செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்ற எனது தந்தை வீடு திரும்பவில்லை. சில ஆண்டுகளுக்குப்பிறகு அவர் நீரில் மூழ்கி விபத்தில் இறந்துவிட்டார் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ரமேஷ்
மேலும், செங்கல் சூளையில் தூசியில் பல ஆண்டுகள் வேலை செய்த காரணத்தால் எனது தாயின் நுரையீரலில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், என் அம்மா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 

எனக்கு 18வயதாக இருக்கும்போது உமாவை மணம் முடித்தேன். அப்போது உமாவுக்கு 16 வயது. திருமணத்திற்கு பிறகு உமாவும் என்னுடன் செங்கல் சூளையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். அவர் செங்கற்களை தயாரிப்பது, சமைப்பது, வீட்டை சுத்தமாக வைப்பது, குடும்பத்தை நடத்துவதை அவர் கற்றுக்கொண்டார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஊதியம் மற்றும் வசதிகள் சிறப்பாக இருக்கக் கூடிய மற்றொரு சூளையில் உள்ள வாய்ப்பைப் பற்றி அறிந்தோம். இந்த செங்கல் சூளையின் உரிமையாளர் எனது குடும்பத்திற்கும் எனது சகோதரரின் குடும்பத்திற்கும் ரூ.1,30,000 முன்பணமாக வழங்கினார். இந்த நேரத்தில், சகோதரர் சுரேஷும் திருமணம் நடந்து முடிந்திருந்தது. ஆறுமாதத்துக்கான ஊதியம் முன்கூட்டியே வழங்கப்படும் என எங்களுக்கு தெரிவித்திருந்தனர்.

கர்நாடகாவின் சிக்பல்லாபூரில் உள்ள இந்த புதிய செங்கல் சூளைக்கு நாங்கள் சென்றோம். நாங்கள் செங்கல் சூளை அடைந்ததும், எங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டவற்றிலிருந்து இங்கிருக்கும் நிலைமை வேறு வகையாக இருப்பதை உணர்ந்தோம்.

வேலை மிகவும் கடுமையாக இருந்தது. நாங்கள் அடிக்கடி வாய்மொழி மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை தாங்க வேண்டியிருந்தது. செங்கல் சூளையை விட்டுவிட்டு ஆறு மாதங்களில் எங்கள் கிராமத்திற்கு திரும்பலாம் என்ற நம்பிக்கையில் இதையெல்லாம் நாங்கள் சகித்துக் கொண்டோம்.
ஆறுமாதம் கழித்து எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. உரிமையாளரிடம் சென்று, எங்கள் பணத்தை கொடுங்கள் நாங்கள் கிளம்புகிறோம் என்று சொன்னபோது, அவர் எங்களை மிரட்டியது மட்டுமல்லாமல், நாங்கள் இங்கிருந்து வெளியே செல்ல வேண்டுமென்றால், இருமடங்கு அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டும் என்றார்.

அவர் பிரம்பு ஒன்றை கொண்டு வந்து எங்களை அடிக்கப்போவதாகவும் மிரட்டினார். உரிமையாளருக்கும் எல்லா சக்தியும் இருப்பதை என் சகோதரனும் நானும் உணர்ந்தோம், நாங்கள் எங்கள் குடும்பங்களுக்கு பயந்தோம். தொடர்ந்து பணியாற்ற ஒப்புக் கொண்டோம். சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, வேறு வழியில்லாமல், நானும் என் சகோதரனும் செங்கல் சூளையில் இருந்து எங்கள் குடும்பங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடி வந்துவிட்டோம்.

அங்கிருந்து தப்பி எங்கு செல்வதென்று தெரியாமல், சாலைகளில் தங்கி, கோயில்களில் கிடைக்கும் இலவச உணவை சாப்பிட்டு உயிர்வாழ்ந்தோம். செங்கல் சூளையின் உரிமையாளர் அல்லது அவரது ஆட்கள் பிடித்து விடுவார்கள் என்று பயந்துகொண்டேயிருந்தோம்.

எங்கள் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும், கிராமத்திற்கு சென்று அவரை பார்க்க முடிவு செய்தோம். அப்போது தான் உரிமையாளரும் அவரது ஆட்களும் எங்களை கண்டுபிடித்து, கிராமத்திற்கு வந்து, எங்களைத் தாக்கி, செங்கல் சூளைக்கு அழைத்துச் சென்றனர்.
ரமேஷ்
உமாவுக்கும் எனக்கும் இரண்டு குழந்தைகள் இருந்தன. ஆனால் நாங்கள் அனைவரும் சூளையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டோம். இது எங்கள் வாழ்வின் இருண்ட நாட்கள். உரிமையாளர் மற்றும் அவரது ஆட்களால் நாங்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டோம்.

மேலும், அதிகமான உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை நாங்கள் தாங்க வேண்டியிருந்தது. சுரேஷின் மனைவி கருச்சிதைவுக்கு ஆளானார். வேலையில் இருந்து ஓய்வும் இல்லை, செங்கல் சூளை விட்டு வெளியேற எந்த வழியும் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் அங்கே இறந்துவிடுவோம் என்று நினைத்தோம்.

மார்ச் 2014ல், அனைத்தும் மாறிவிட்டன. நாங்கள் வழக்கம் போல் காலை 6 மணிக்கு எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய ஆரம்பித்தோம். சில வாகனங்கள் அங்கே வந்தன. ஏழு அதிகாரிகள் ஒரு சில அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்து இறங்கினர். அவர்கள் எங்களிடம் சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர், ஆனால் நாங்கள் அவர்களை நம்ப சற்று தயங்கினோம்.

நாங்கள் ஒரு அரசாங்க அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம், அவர்கள் எங்களுக்கு உதவ முயற்சிக்கிறார்கள் என்பதை நாங்கள் மெதுவாக உணர்ந்தோம். எல்லா கேள்விகளுக்கும் நாங்கள் உண்மையாக பதிலளித்தோம், சிறிது நேரம் கழித்து உரிமையாளர் கைது செய்யப்படுவதை அறிந்தோம்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, உரிமையாளர் நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்ததாக நாங்கள் அறிந்தோம். அவர் வேறு யாரையும் சித்திரவதை செய்யமுடியாது என்பதில் மகிழ்ச்சியடைந்தோம்.

இன்று எங்களிடம் ஒரு சில ஆடுகள் உள்ளன. நாங்கள் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். திருமண காலத்திலும் பண்டிகைகளிலும் வெவ்வேறு கிராமங்களில் வளையல்களை விற்கிறேன். என் அம்மாவும் எங்களுடன் வசித்து வருகிறார். இன்று சுதந்திரமாக வாழ்கிறோம். என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடிகிறது, என் மனைவி பயப்படாமல் இரவில் நிம்மதியாக தூங்க முடிகிறது,” என்கிறார் ரமேஷ்.

Comments