ஐ.டி வேலையை உதறிய கிஷோர் - மாடு வளர்ப்பு மூலம் ரூ.44 கோடி வருவாய் ஈட்டி அசத்தல்!
உலகில் எந்த மூலைக்கு சென்றாலும், நமக்கு பிடித்தமான தொழிலை உளப்பூர்வமாக செய்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு சான்றாக கிஷோர் இந்துகாரியின் வளர்ச்சி உள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த அவர், காரக்பூர் ஐஐடியில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பி.ஹெச்.டிகாக அமெரிக்கா சென்றார். மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பை நிறைவு செய்தபிறகு அங்கேயே தங்கிய கிஷோர், உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுள் ஒன்றான Intel-லில் பணிக்கு சேர்ந்தார். கை நிறைய ஊதியம் வாங்கினாலும், அந்த வேலையை அவரால் தொடர்ந்து செய்ய முடியவில்லை.அமெரிக்காவில் பணியாற்றிய ஐ.டி வேலையை விட்டுவிட்டு, இந்தியாவுக்கு திரும்பிய கிஷோர் மாட்டு பண்ணை தொடங்கி ஆண்டுக்கு 44 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார்.
6 ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பிய அவர், சொந்த தொழில் தொடங்குவதற்கு முயற்சி செய்துள்ளார். ஹைதராபாத் நகருக்கு செல்லும்போது, அங்கு தரமான பாலுக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருப்பதை அறிந்து கொள்கிறார். அதன்தொடர்ச்சியாக 20 மாடுகளை வாங்கிய கிஷோர், தனது குடும்பத்தினர் உதவியுடன் பால் கரந்து வீடு, வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்துள்ளார். பால் அதிகம் கிடைத்ததால் அதனை ஸ்டோர் செய்வதற்கான பிரீசர் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளை வாங்குவதற்கு முதலீடு தேவைப்பட்டுள்ளது.கையில் இருந்த ஒரு கோடி ரூபாயை முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தியுளார். 2018 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள ஆறாயிரம் குடும்பங்களுக்கு நாள்தோறும் பால் விநியோகம் செய்யும் அளவுக்கு அவரது பண்ணை வளர்ந்திருந்தது. மகன் சித்துவின் பெயரையே பண்ணைக்கும் சூட்டி, சித்து பார்ம் என மாற்றினார். ஷாபாத்தில் தற்போது இயங்கி வரும் சித்து மாட்டு பண்ணையில் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதுடன், தினசரி வாடிக்கையாளர் எண்ணிக்கையும் 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தன்னுடைய தொழில் வளர்ச்சி குறித்து பேசிய கிஷோர், 2012ம் ஆண்டில் ஐ.டி வேலையை விட்டுவிட்டு, 20 மாடுகளுடன் பால் பண்ணை ஆரம்பித்ததாக கூறியுள்ளார்". தொடக்கத்தில் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தினசரி பால் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பால் கெடாமல் இருக்க தொழில்நுட்பங்களை வாங்க வேண்டியிருந்ததால், கையில் இருந்த பணத்தில் முதலீடு செய்து உபகரணங்களை வாங்கினோம்.குடும்ப உறுப்பினர்களும் தொழிலுக்கு உதவியாக இருந்தனர். 2018ம் ஆண்டில் 1.3 கோடி ரூபாய் லோன் பெற்று பண்ணையை விரிவு செய்தேன். தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறேன்" என கூறினார். சித்து பால் பண்ணையானது தற்போது மாடு, எருமை பால்களை தனித்தனியாக விற்பனை செய்வதுடன், ஒரு மாட்டு பாலை தனியாக ஒருவருக்கு வேண்டும் என்றாலும், அதனையும் செய்து கொடுக்கின்றனர்.வெண்ணெய், தயிர், மோர், நெய் மற்றும் பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை அவர்கள் டார்கெட் செய்கின்றனர். கொரோனா வைரஸால் மற்ற பால் பண்ணைகள் பாதிப்பை சந்தித்தாலும் கிஷோரின் பண்ணை தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மிகப்பெரிய நிறுவனத்தில் கை நிறைய ஊதியம் வாங்கிய கிஷோர் இந்துகாரி, மாட்டு பண்ணை தொடங்கி, அதில் சாதித்து மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக மாறியிருக்கிறார்.
Comments
Post a Comment