கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் V : இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?

கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் V : இந்தியாவில் வழங்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?


கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த, இந்தியா மூன்றாவது கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் `ஸ்புட்னிக் V' தடுப்பூசியைப் பயன்படுத்த இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (டி.ஜி.ஜி.ஐ) அனுமதி வழங்கியிருந்தது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசி பாதுகாப்பானது எனக் கருதப்படுகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு என்கிற பெயரில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியைப் போலவே, ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசியும் செயல்படும்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி, கோவிஷீல்டு எனும் பெயரில் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.


ஸ்புட்னிக்-V தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிராக 92 சதவீதம் வரை பாதுகாப்பு அளிப்பதாக பரிசோதனைத் தரவுகள் அடிப்படையில் லேன்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 59 நாடுகள் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியிருப்பதாக இதைத் தயாரிக்கும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 10 கோடி பேருக்கும் அதிகமாக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அலவில் அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவில் தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி
பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்தியா வரும் ஜூலை மாதத்துக்குள் முன்னுரிமை அடிப்படையில் முன்களப் பணியாளர்களாக இருக்கும் 25 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமவதால், குறித்த நேரத்துக்குள் இலக்கை அடைய முடியாமல் போகலாம். இலக்கை அடைய தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என கூறுகிறார்கள் நிபுணர்கள்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துவதற்கும், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிப்பதற்காகவும், மற்ற நாடுகளில் செலுத்தப்பட்டு வரும் ரஷ்யாவின் ஸ்புட்நிக் V தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன் கூறியது அரசு.

அதோடு, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளுக்கு, இந்தியாவிலும் விரைவாக அனுமதி வழங்கப்படும் எனக் கூறியது. அப்படி அனுமதி வழங்கப்பட்ட தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்துவதற்கு முன், அதை செலுத்திக் கொள்ளும் முதல் 100 பேரை, அடுத்த ஏழு நாட்களுக்கு அரசு கண்காணிக்கும். அதன் பிறகு தான் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.
அதாவது ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் இந்தியாவிலும் கிடைக்கத் தொடங்கும் என்று பொருள். இந்த விவகாரம் தொடர்பாக அரசு மேலதிகத் தகவல்களையும் கொடுக்கவில்லை.

ஸ்புட்னிக் V குறித்து நமக்கு என்ன தெரியும்?
ஸ்புட்னிக் V தடுப்பூசி ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் இருக்கும் கமலேயா இன்ஸ்டிட்யூட்டால் தயாரிக்கப்பட்டது. இறுதி பரிசோதனை குறித்த தரவுகள் வெளியாவதற்கு முன்னரே இத்தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதால் தொடக்கத்தில் பெரிதும் சர்ச்சைக்கு உள்ளானது.
தற்போது ஸ்புட்னிக் V-யின் நன்மைகள் விளக்கப்படுவதாகக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

கொரோனா வைரஸின் ஒரு சிறு பகுதியை நம் உடலில் எடுத்துச் செல்ல, ஒரு சளி வைரஸைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சளி வைரஸ் மனிதர்களை பாதிக்காத வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் மரபணுக்கள் பாதுகாப்பாக நம் உடலுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே நாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலக் குறைவுக்கு ஆளாகாமல், நம் உடல், கொரோனா வைரஸைக் கண்டுபிடித்து, அதனோடு சண்டையிட கற்றுக் கொள்கிறது.

இந்த கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட பின், நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு என்றே பிரத்யேகமாக ஆன்டிபாடிக்களை உருவாக்கத் தொடங்குகிறது.
உண்மையிலேயே கொரோனா வைரஸ் நம் உடலுக்குள் வந்தால் அதோடு சண்டை போட நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தயாராகிறது.

இத்தடுப்பூசி மருந்தை 2 - 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்கலாம்.

வேறுபட்ட இரண்டாவது டோஸ்
கொரோனா தடுப்பூசி
பட மூலாதாரம்,GETTY IMAGES
மற்ற கொரோனா தடுப்பூசிகளைப் போல இல்லாமல், ஸ்புட்னிக் V தடுப்பூசிகளில், மெல்லிய வேறுபாடு கொண்ட இரண்டு வகை தடுப்பூசி மருந்துகள் இரண்டு டோஸ்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகள் 21 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படுகிறது.
இந்த இரண்டு டோஸ் மருந்துகளும் கொரோனா வைரஸின் ஸ்பைக்குகளை இலக்கு வைத்து தாக்குகின்றன. ஆனால் வேறுபட்ட வெக்டர்களைப் பயன்படுத்துகின்றன.

ஒரே மருந்தை இரண்டு முறை செலுத்துவதற்கு பதிலாக, இரண்டு வேறுபட்ட மருந்து கொண்ட டோஸ்களைச் செலுத்துவதால், நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை இன்னும் கூடுதலாக மேம்படுத்த முடியும் என்பது தான் இதன் நோக்கம். இதனால் தடுப்பூசி மூலம் கிடைக்கும் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கலாம்.
ஸ்புட்னிக் V தடுப்பூசி எந்த அளவுக்கு செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு பாதுகாப்பானது, பெரிய பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்பது பரிசோதனையில் காணப்பட்டது.

பொதுவாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வரும் காய்ச்சல், சோர்வு, கை வலி போன்ற சில பக்க விளைவுகள், இந்த தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டாலும் ஏற்படலாம். ஆனால் இந்த தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட குழுவினர்களில் யாருக்கும் மிக மோசமாக உடல் நலக் குறைவு ஏற்படவில்லை. அதே போல இறக்கவும் இல்லை.
ஸ்புட்நிக் V தடுப்பூசிக்கு அர்ஜென்டினா, பாலஸ்தீனம், வெனிசுவெலா, ஹங்கேரி, ஐக்கிய அரபு அமீரகம், இரான் உட்பட இதுவரை 60 உலக நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் எப்போது ஸ்புட்னிக் V கிடைக்கத் தொடங்கும்?
ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதி அமைப்பு தான் ஸ்புட்னிக் V தடுப்பூசியை சந்தைப்படுத்தி வருகிறது. அவ்வமைப்பு இந்தியாவில் 75 கோடி டோஸ் ஸ்புட்நிக் V மருந்தைத் தயாரிக்க, ஆறு இந்திய தடுப்பூசி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த காலாண்டில், ஹைதராபாதைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனம் 125 மில்லியன் டோஸ் ஸ்புட்நிக் V மருந்தை இறக்குமதி செய்யும்.

ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தின் மேற்பார்வையில், ஆறு இந்திய நிறுவனங்கள் ஸ்புட்நிக் V தடுப்பூசியைத் தயாரிக்கத் தொடங்கிய பிறகு, அடுத்த காலாண்டில் தான் விநியோகங்கள் விரைவுபடுத்தப்படும்.

அதுவரை இந்தியா கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு மருந்துகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டி இருக்கும்.

கோவேக்சின் குறித்து நமக்கு என்ன தெரியும்?
கோவேக்சின்
பட மூலாதாரம்,GETTY IMAGES
கோவேக்சின், செயலற்ற கொரோனா வைரஸைக் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பூசி இது. இதை ஆங்கிலத்தில் Inactivated Vaccine என்கிறார்கள். எனவே இதை உடலில் செலுத்துவது பாதுகாப்பானது.
இந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் என்கிற, 24 ஆண்டுகளாகச் செயல்படும் இந்திய அரசு நிறுவனம் உருவாக்கியது. இதுவரை இந்த நிறுவனம் 16 தடுப்பூசிகளை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவின் நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி தனிமைப்படுத்தி வைத்த கொரோனா வைரஸ் மாதிரியைக் கொண்டு, கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது பாரத் பயோடெக்.

இந்த தடுப்பூசியை நம் உடலில் செலுத்தும் போது, நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம், இறந்த கொரோனா வைரஸைக் கூட அடையாளம் கண்டு, அதை எதிர்க்க ஆன்டிபாடிக்களை உருவாக்கும்.

இந்த தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்துகள் நான்கு வார இடைவெளியோடு வழங்கப்படுகிறது. இத்தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்கலாம்.

இந்த தடுப்பூசியின் செயல் திறன் 81 சதவீதமாக இருப்பதாக, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் முதல் நிலைத் தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு நெறியாளர்கள், இத்தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் இருந்த போதே கடந்த ஜனவரியில் 2021-ல் அவரசர அவசரமாக அனுமதி கொடுக்கப்பட்டதற்காக பொதுவெளியில் மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நிபுணர்கள் இத்தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பினர் என்பது நினைவுகூரத்தக்கது.

தங்களிடம் 2 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி இருப்பதாகவும், 70 கோடி தடுப்பூசி டோஸ்களை தன் நான்கு உற்பத்தி ஆலைகள் மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் கூறுகிறது பாரத் பயோடெக் நிறுவனம்.

கோவேக்சின் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் என்ன?
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு, கடந்த ஜனவரி 2021-ல் கோவேக்சின் தடுப்பூசியை 'கட்டுப்படுத்தப்பட்ட அவசர பயன்பாட்டுக்கு' அனுமதி வழங்கியதில் தொடங்கியது சர்ச்சை.

சோதனையில் இருக்கும் தடுப்பூசிக்கு எப்படி அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது என நிபுணர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். முழுமையாக ஆராயப்படாத தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியதன் பின்னணியில் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள முடியவில்லை என 'ஆல் இந்தியா டிரக் ஆக்‌ஷன் நெட்வொர்க்' என்கிற அமைப்பு கூறியது. அதோடு, கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த தரவுகள் இல்லாதது மிகவும் கவலையளிக்கிறது எனவும் குறிப்பிட்டது.
இத்தனை பிரச்னைகள் எழுந்த போது, கோவேக்சின் மருந்தை உற்பத்தி செய்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பும் கோவேக்சின் மருந்து பாதுகாப்பானது, கொரோனா வைரஸுக்கு எதிராக அருமையாக எதிரிவினையாற்றுகிறது என தங்கள் தரப்பை நியாயப்படுத்தினார்கள்.

நாட்டில் மிக மோசமான, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய நோய்க்கு போதுமான மருந்துகள் இல்லாத காலகட்டத்தில், இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு ஒரு மருந்தை அவசர தேவைக்குப் பயன்படுத்த உடனடியாக அனுமதி கொடுக்க இந்தியாவின் மருத்துவ பரிசோதனை விதிகளில் இடமிருப்பதாகக் கூறியது பாரத் பயோடெக் நிறுவனம்.

அதோடு, பிப்ரவரி 2021-க்குள் கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பான தரவுகளை வழங்குவதாக உறுதியளித்தது பாரத் பயோடெக். கடந்த மார்ச் மாதத்தில் தான் கோவேக்சின் செயல் திறன் குறித்த தரவுகள் வெளியாயின.
கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம், தனது தடுப்பூசியை மாநிலங்களுக்கு ரூ. 600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 1,200க்கும் தருவதாக கூறியுள்ளது. இதேவேளை மத்திய அரசுக்கு முன்பு கொடுக்கப்பட்ட டோஸ் ஒன்றுக்கு ரூ. 150 என்ற விலையே தொடரும் என்று பயோ என்டெக் தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியை விலைக்கு வாங்கும் மாநிலங்கள், தமது மாநிலத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாகவோ கட்டணமாகவோ தடுப்பூசியை வழங்க உரிமை உள்ளது. ஏற்கெனவே, உத்தர பிரதேசம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்பட குறைநதபட்சம் 17 மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளன.

கொரோனா தடுப்பூசி பெற கோவின் செயலியில் எப்படி பதிவு செய்வது?
கொரோனாவின் இந்திய திரிபு என்றால் என்ன? ஆபத்தும், பரவும் வேகமும் அதிகமா?
கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
கோவிஷீல்டு குறித்து நமக்கு என்ன தெரியும்?
கோவிஷீல்ட்

ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ராசெனீகா கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. ஒரு மாத காலத்துக்கு 6 கோடி டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்வதாகக் கூறுகிறது.
அடினோவைரஸ் எனப்படும் சிம்பன்சி விலங்குகளில் காணப்படும் பொதுவான சளி வைரஸில் இந்த கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வைரஸை, கொரோனா வைரஸ் போல உருமாற்றம் செய்யபட்டு இருக்கிறது. இருப்பினும் அவ்வைரஸ் உடலுக்கு எந்த வித உபாதையையும் ஏற்படுத்தாது.

இந்த தடுப்பூசியை நம் உடலில் செலுத்திய பின், அது நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆன்டிபாடிக்களை உருவாக்கச் செய்து, கொரோனா வைரஸ் வந்தால் தாக்கி அழிக்கத் தயார்படுத்தும்.

இந்த தடுப்பூசி இரண்டு டோஸ்களாக நான்கு முதல் 12 வார இடைவெளிக்குள் செலுத்தப்படுகிறது. 2 - 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைத்து மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கலாம்.

ஃபைசர் பயோ என் டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை -70 டிகிசி செல்சியஸ் வெப்ப நிலையில் சேமித்து வைக்க வேண்டும். அதை அதிக முறை இடமாற்றம் செய்ய முடியாது. இந்தியாவில் சில இடங்களில் கோடை காலத்தில் வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல் திறன் என்ன?
இத்தடுப்பூசியின் சர்வதேச பரிசோதனையில் 90 சதவீதம் செயல் திறனோடு இருக்கிறது.

ஆனால் பாதி டோஸ் அல்லது முழு டோஸ் தடுப்பூசி வழங்குவது தொடர்பாக போதுமான தரவுகள் இல்லை.

முதல் டோஸ் தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் இடையில் நீண்ட கால இடைவெளி இருக்கும்பட்சத்தில், அது தடுப்பபூசியின் செயல் திறனை அதிகரிக்கும் என, இதுவரை பிரசுரிக்கப்படாத தரவுகள் குறிப்பிடுகின்றன. இப்படி ஒரு சிறு குழுவினருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்ட போது, முதல் டோஸ் செலுத்தப்பட்ட பிறகு அதன் செயல் திறன் 70 சதவீதமாக இருந்தது.

கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பெறுவது எப்படி? உங்களுக்கு பாதுகாப்பானதா?
"கோவிஷீல்டு அதிக செயல் திறன் கொண்டது" என கூறுகிறது சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா. மருத்துவ பரிசோதனைகள் மூன்று கட்டங்களைக் கொண்டது. இத்தடுப்பூசி நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வைரஸுக்கு எதிராக சிறப்பாக எதிர்வினையாற்ற வைக்கிறதா அல்லது ஏதாவது ஏற்றுக் கொள்ள முடியாத பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதைக் கண்டறிய இந்த பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

'ஆல் இந்தியா டிரக் ஆக்‌ஷன் நெட்வொர்க்' என்கிற நோயாளிகளுக்கான உரிமைக் குழு, கோவிஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக 'பிரிட்ஜிங் ஸ்டடி' ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு முன்பே அவசரமாக அனுமதி கொடுக்கப்பட்டது என கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.

தனது உற்பத்தி அளவில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்குவதாக கோவிஷீல்ட் தயாரிப்பாளரான இந்திய சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்பு கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸ் ரூ. 200க்கு கொடுக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இதன் விலை அதிகரிக்கப்பட்டு ஒரு டோஸ் ரூ. 400க்கு மாநிலங்களுக்கும் தனியாருக்கு ஒரு டோஸ் ரூ. 600க்கும் கொடுக்கப்படுகிறது. தற்போதைய விதிமுறைகளின்படி ஒரு நோயாளிக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி அவசியம் என கூறப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நோயாளி ரூ. 1,200 கொடுத்து தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி பெறலாம்.

வேறு ஏதாவது தடுப்பூசிகள் இருக்கின்றனவா?
மற்ற தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகள், பாதுகாப்பு மற்றும் செயல் திறன் குறித்த பல்வேறு கட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன.

சைகோவ் டி - சைடஸ் கெடிலா என்கிற அஹமதாபாத்தைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
பயாலஜிகல் இ என்கிற ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம், அமெரிக்காவின் டைனாவேக்ஸ் மற்றும் பேய்லர் மருத்துவக் கல்லூரி உடன் இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை மேம்படுத்தி வருகிறது.
பயாலஜிக்கல் இ என்கிற நிறுவனம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை தயாரிக்க உள்ளது.
HGCO19 என்கிற இந்தியாவின் முதல் எம் ஆர் என் ஏ கொரோனா தடுப்பு மருந்தை புனேவைச் சேர்ந்த ஜினோவா என்கிற நிறுவனம், அமெரிக்காவின் சியாட்டலைச் சேர்ந்த ஹெச் டி டி பயோடெக் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்தோடு இனைந்து உருவாக்கிக் இருக்கிறது.
பாரத் பயோடெக் நிறுவனம் நாசி வழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தை மேம்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் இரண்டாவது தடுப்பூசியை மேம்படுத்தி வருகிறது.
இந்தியா கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்த நாடுகள் எவை?
ஸ்புட்னிக் V, கோவிஷீல்டு, கோவேக்சின்: இந்தியாவில் இருக்கும் தடுப்பூசிகள் குறித்து நமக்கு என்ன தெரியும்?
பட மூலாதாரம்,GETTY IMAGES
லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள 86 நாடுகளுக்கு 6.4 கோடி டோஸ் தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியா தடுப்பூசி ஏற்றுமதி செய்த நாடுகளில் பிரிட்டன், கனடா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகியவையும் அடங்கும்.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பொசிகளும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன அல்லது நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கும் அந்தந்த நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களின் கீழும் இந்தியாவில் இருந்து சில நாடுகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பின் 'கோவேக்ஸ்' திட்டத்தின் கீழும் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கோவேக்ஸ் திட்டம் உலகின் 190 நாடுகளில் கொரோனா தடுப்பூசி வழங்க உலக சுகாதார அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ஒரு வருடத்திற்குள் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை உலக நாடுகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மார்ச் மாதத்தில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனீகாவின் கோவிஷீல்டு தடுப்பூசியின் அனைத்து வகையான ஏற்றுமதிக்கு இந்தியா தற்காலிக தடை விதித்தது. கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதால், இந்தத் தடுப்பூசிக்கான உள்நாட்டு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று இந்திய அரசு கூறுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் தற்போது உற்பத்தியாகும் அளவைவிடவும் அதிகமான அளவு கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறது.

Comments